உயர்ந்த மனிதன் சிவாஜி

மூன்று கார்கள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சிவாஜிகணேசனுக்காக நியமிக்கப்பட்ட செகரட்டரியும் இன்னொரு காரிலிருந்து சிட்டி மேயரும் மூன்றாவது காரிலிருந்து முக்கிய பிரமுகர்களும் வந்து இறங்கினார்கள். சிவாஜிகணேசன் அவர்கள் கையில் பூச்செண்டைக் கொடுத்து வரவேற்றார்கள். அரையடி நீளமுள்ள ஒரு பெரிய தங்க சாவியை மேயர் கொடுத்து-' இன்று காலை வரைதான் நான் மேயர். இப்போதிலிருந்து நாளை காலை வரை நீங்கள்தான் நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயர்' என்றார்.

இந்திய மக்களின் சார்பில் அமெரிக்க நாட்டிலுள்ள நயாகராவில் சிட்டி மேயராக இருந்தது இரண்டே இரண்டு இந்தியர்கள்தான். ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேருஜீ, மற்றொருவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்.

ஒரு முறை பெருந்தலைவர் காமராஜரும். ராஜாராம் நாயுடுவும் கொட்டும் மழையில் சிவாஜி கணேசனின் பிறந்த நாளுக்காக அவரது வீட்டிற்கு வந்தார்கள். காமராஜர் சிவாஜி கணேசனுக்கு இரண்டு ஆள் உயரத்திற்கு மாலை வாங்கி வந்து அணிவித்தார். 'நன்றாக இரு' என்று மனதார வாழ்த்திவிட்டுப் போனார். அதன் பிறகு 'பாட்டும் பரதமும்' படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றார் சிவாஜிகணேசன். திரைப் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தளபதி ராம்குமார் வந்தார். அவருடன் சிவாஜி கணேசனின் நண்பரான அப்பன்ராஜ் என்பவரும் வந்திருந்தார். சிவாஜி கணேசனை வெளியே அழைத்துச் சென்று பெருந்தலைவர் காமராஜர் இறந்து விட்டார் என்ற செய்தியைத் தெரிவித்தனர்.

தன்னை நான்கு முறை' நன்றாக இரு' என்று வாழ்த்தியவர் இறந்து போன செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனார் சிவாஜிகணேசன்.

அதன்பிறகு காந்தி மண்டபத்தில் வைத்து காமரஜருக்கு ஈமக் கடன்கள் செய்தார்கள். கலைஞர் மு. கருணாநிதிதான் அவர்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தார். அதற்காக முன்னின்று எல்லா வேலைகளையும் தொண்டர்களை வைத்து செய்து முடித்தார் சிவாஜி கணேசன்.






பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குப் பிறகு அனைவரும் இந்திராகாந்தி அம்மையார் கட்சியில் போய்ச் சேர்ந்தார்கள். சிவாஜி கணேசன் மட்டும் சேரவில்லை. காமராஜர் விட்டுச் சென்ற பணிகள் என்னென்ன இருக்கின்றதோ அவைகளை சொல்லுங்கள். நான் பிரதமராக இருக்கின்றேன். எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறேன் என்றார் அன்றையப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி. அதன்பிறகுதான் இந்திரா காங்கிரசில் சிவாஜி கணேசன் சேர்ந்தார்.

இந்திரா காங்கிரஸில் பணியாற்றிக் கொண்டிருந்த சிவாஜி கணேசனை ராஜ்யசபா எம்.பி. ஆக்கினார்கள். ராஜீவ் காந்தியைப் பிரதமராக்குவதற்கு சிவாஜிகணேசன் பாடுபட்டார். அப்போதுதான் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் எல்லோரும் க. காங்கிரஸ், மு. காங்கிரஸ், வ. காங்கிரஸ் என்றெல்லாம் ஆரம்பித்தார்கள்.

சிவாஜி கணேசனும் வெளியே வந்து' தமிழக முன்னேற்ற முண்ணனி' என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். சிவாஜி ரசிகர் மன்றத்து பிள்ளைகள் அவருக்குப் பின்னணியாக நின்றார்கள். அப்போது சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. ஜானகி எம்.ஜி.ஆர் அணியும், சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியும் இணைந்து செயல்பட்டது. தேர்தலில் நிற்பதற்கு சிவாஜி கணேசன் கட்சி முயற்சித்த போது 50 சீட் கொடுத்தார்கள். தனது சொந்தப் பணத்தை மற்றும் பாங்கில் வழங்கிய கடன்களையும் வைத்து கட்சிக்காக செலவழித்தார். தேர்தலில் நின்றார். தோல்வியும் அடைந்தார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு அவரது மன்றத்துப் பிள்ளைகள் உடன் நின்றார்கள். மற்றவர்கள் ஓடி விட்டார்கள். சிவாஜி கணேசன் அரசியலில் பல நேரங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறார். அரசியலுக்குள்ளே அரசியல் பண்ணுவது அவருக்கு ஒத்து வரவில்லை இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ தான் அரசியலுக்கு வந்ததைப்பற்றி வருத்தப்பட்டார்.

அரசியலே வேண்டாமென்று ஒதுங்கியிருந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனை மீண்டும் அரசியலுக்கு வரவழைத்தவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், தனது ஜனதா தளம் கட்சியின் தலைவராகப் பணியாற்றும்படி சிவாஜி கணேசனைக் கேட்டுக் கொண்டார். முன்னாள் மத்திய மந்திரி ஜாணஜ் பெர்னான்டஸ் சிவாஜி கணேசனின் நண்பராக இருந்து வந்ததால் அவரது வேண்டுகோளின்படியும் சிவாஜி ஜனதா தளம் கட்சிக்கு பணியாற்ற வேண்டியதாயிற்று.

கொஞ்ச நாள் ஜனதா தளத்தில் இருந்த சிவாஜிகணேசன் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கட்சியை விட்டு விலகி வெளியே வந்தார். அதன்பிறகு அரசியலில் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை, அனுபவங்களாகக் கற்றுக் கொண்ட பாடங்களை தனது கலையுலக நண்பர்களுக்குத் தெரிவித்தார். அரசியலிலிருந்து வெளியில் வந்த சிவாஜி கணேசன் மீண்டும் நடிகனாகி வலம் வரத் தொடங்கினார்.

சிவாஜிகணேசன் பற்றிய தகவல்களை இந்தியக் கலாச்சார மையத்தில் இருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த பஸ்கால், ஜமால் ஆகியோர் பிரான்சு நாட்டுக்கு வழங்கினார்கள். பிரான்சு நாடு சிவாஜி கணேசனுக்கு 'செவாலியே' அவார்டை வழங்கி கௌரவித்தது.

பிரான்ஸ் நாட்டில் வருடா வருடம் மிகச் சிறந்த நடிகனுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுதான் 'செவாலியே' அதை இந்தியாவைச் சேர்ந்த அதிலும் தமிழனாக விளங்கிக் கொண்டிருக்கிற நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கி கௌரவித்தது.

அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் விருது வழங்கும் விழாவிற்கு தலைமை வகித்தார்கள். டெல்லியிலிருந்து பிரான்ஸ் தூதுவர் மாண்புமிகு பிலிப்பெத்தி சென்னைக்கு வந்து பிரான்ஸ் நாடு கொடுத்தனுப்பிய விருதை சிவாஜிகணேசனுக்கு வழங்கினார். திரையுலக கலைஞர்கள், டெக்னிஷியன்கள், ரசிகர்கள் என இரண்டு லட்ச்ம் பேர் அவ்விழாவில் கூடினர்.

இந்திய அரசு இந்திய நாட்டின் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில்" தாதா சாகிப் பால்கே" விருது மிகவும் மரியாதைக்குரியது. இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குக் காலம் தாழ்த்தி மிகத் தாமதமாக 1997ஆம் ஆண்டு அப்போதைய இந்திய ஜனாதிபதி மாண்புமிகு சங்கர் தயாள் சர்மா வழங்கினார். இந்த விருதைப் பெற்றதற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அழைத்து விழா நடத்திக் கௌரவித்தார்கள். ஸ்ரீலங்காவிலும் இது போன்ற விழாவை நடத்தினார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிவாஜிகணேசன் அவர்களுக்கு தேசபக்தியுள்ள ஒரு இந்தியன். நாட்டின் நல்ல பிரஜை என்பதற்காக வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ" 'பத்மபூஷன்' விருதுகளையே மேலான விருதாகக் கருதினார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

ஒரு நடிகன் என்ற முறையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏற்று நடிக்காத வேடங்களேயில்லை என்று சொல்லலாம். இப்படிப்பட்ட உன்னதமான மாபெரும் கலைஞனாக மக்களால் மட்டுமல்லாமல் உலகக் கலைஞர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மகாகலைஞன் சிவாஜிகணேசன் அவர்கள். அப்படிப்பட்ட கலைஞனுக்கு தனது இறுதிக் காலத்தில் ஒரு கதாபாத்திரத்தை அதாவது தனது சிந்தனையாலும், கொள்கையாலும் சமூகத்தில் புரையோடிப் போன கண்மூடித்தனமான பிற்போக்கு சிந்தனைகளை, சாதி வேறுபாடுகளை, மதவெறியைக் களைய முற்பட்ட "பகுத்தறிவுப் பகலவன்" தந்தை ஈ.வெ.ரா. பெரியாரின் வேடத்தை ஏற்று நடித்து அவரது வாழ்க்கை வரலாற்றை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற கலைவேட்கை இருந்தது. ஆனால் காலம் அவருக்கு உதவி செய்ய முன் வரவில்லை. அவரது ஆசை நிராசையாகவே நின்று போனது. ஆனால் நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு 'பெரியார'ணக நடிக்கின்ற பாக்கியம் கிடைத்துவிட்டது.

எழுதியவர் : (21-Jul-17, 11:39 am)
பார்வை : 123

சிறந்த கட்டுரைகள்

மேலே