கடற்கேரளம் –------------------------- கலாச்சாரம், பயணம்------------------

பூவாறுக்கு அருகே ஒரு பெரிய மேடு. அதில் ஒரு சிவன்கோயில். அந்த இடத்திற்கு சொவ்வர என்று பெயர். சுத்த தமிழில் செவ்வரை. சிவந்த மலை,. செம்மண்ணாலான பெரிய குன்றுக்கு மேல் இருக்கும் அந்தக் கோயில் முன் அக்கேஷியாக் காட்டுக்கு கீழே நிலம் செங்குத்தாக நூறடி ஆழத்துக்கு இறங்கியது. கீழே தென்னந்தோப்புகள் அடர்ந்து உள்ளே ஒரு ஊர்வலம் செல்வதுபோல இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் கவனித்த பின்னர்தான் தெரிந்தது– அந்த தென்னை அடர்வுக்குள் நூற்றுக்கணக்கான வீடுகளுடன் மீனவக்கிராமம் இருந்தது என்று

மேலே கழுகுகள் வட்டமிட்ட வானம். அப்பால் கடலில் நீலத்துக்கு மேலே கடற்காக்கைகள் பறந்தன. தென்னைத்தோப்புக்குள் காக்கைகள் கத்திக்கொண்டே இருந்தன. கடற்கரையை அங்கே நின்றபோது ஒரு பெரிய வளைவாகப் பார்க்க முடிந்தது சுனாமிக்குப் பின்னால் கடற்கரைகளில் பெருகியிருக்கும் ·பைபர் படகுகள் கரை முழுக்க நின்றன. கடலில் இருந்து தொடர்ந்து கரைக்கு வந்துகொண்டும் இருந்தன.

கடலோரமாகவே கோவளம் சென்றோம். எழுபதுகளில் கோவளம் ஹிப்பி இயக்கத்தவரால் கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருட்களும் கட்டற்ற காமமுமாக அவர்கள் அந்த கைவிடப்பட்ட ஆழமில்லாத கடற்கரையிலும் கரையோரத்துப் பாறைவெளியிலும் குடில்கள் கட்டி தங்கினார்கள். மெல்லமெல்ல கோவளம் ஒரு சுற்றுலாத்தலமாக அறியப்படலாயிற்று. இன்று அந்தக் கடற்கரையை நம்பி ஒருநாளைக்கு ஐம்பதுகோடி ரூபாய் புழங்கும் சுற்றுலாத்தொழில் நிகழ்கிறது. மாபெரும் விடுதிகள். பலமாடிக் கட்டிடங்கள்.

ஆனாலும் கோவளம் அதன் அழகை இழக்கவில்லை. தூயவெண்மணல் விரிந்த வளைவான குடாக் கடற்கரைகள். கடலுக்குள் நீட்டியிருக்கும் பாறைமேடுகள். கரையெங்கும் பாறைகள் மண்டிய தென்னைத்தோப்புகள் நாங்கள் செல்லும்போது முன்மதிய வெயில். ஏராளமான வெள்ளையர், பெரும்பாலும் பாட்டிதாத்தாக்கள், குடைகளுக்குக் கீழே சாய்வுப்படுக்கையில் படுத்துக்கொண்டு தாளட்டை நாவல்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். சில அழகிகள் வெயிலில் காயப்போடப்பட்டிருந்தார்கள். நான்கு பேர் கடலுக்குள் சிறிய பாரச்சூட்டில் பறந்து வளையமிட கடலுக்குள் ஏராளமான வெள்ளைய தலைகள் மிதந்து தென்பட்டன.

கூட்டம் இல்லாத நாட்களில் கோவளம் ஒரு நல்ல சுற்றுலாத்தலம்தான். அங்கே இருக்குமளவுக்கு அழகான கடலை குறைவாகவே பார்க்க முடியும். சுத்தமான கடலே இந்தியாவில் அருகி வருகிறது. கோவளத்துடன் ஒப்பிட்டால் கன்யாகுமரி ஒரு குப்பைத்தொட்டி மட்டுமே. சுற்றுலா என்றால் அசிங்கமான கான்கிரீட் கட்டுமானங்களை அமைப்பது என்று நம் அரசு நினைத்திருக்கிறது. மக்கள் நாடுவது சுத்தத்தை மட்டுமே என அவர்கள் அறிவதில்லை.

கோவளம் வழியாக சங்குமுகம் கடற்கரைக்குச் சென்றோம். சங்குமுகம் திருவனந்தபுரத்திற்குரிய கடற்கரை. மகாராஜாவின் பலிமண்டபம் அங்குதான் இருக்கிறது. இப்போது கானாயி குஞ்சுராமன் மலம்புழா அணையில் உருவாக்கிய நிர்வாண யட்சியின் சிலையின் கான்கிரீட் நகல் இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. சங்குமுகம் கடற்கரையும் சுத்தமாகவே இருந்தது. அந்த கொதிக்கும் வெயிலில் ஏராளமான வெள்ளையர்கள் வெண்மணலில் படுத்திருந்தார்கள். பல வெள்ளையர் நன்றாகவே சிவந்து மாநிறத்துக்கும் கீழே வந்திருந்தார்கள்.

கேரளக் கடற்கரையின் சிறப்புகளில் ஒன்று அரபிக்கடலுக்கு நல்ல நீலநிறம் உண்டு என்பதே. வங்காளவிரிகுடாவை விட இந்த நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கலாம். கிழக்குக் கடற்கரையில் பல இடங்களில் கடற்கரை மணல் கிட்டத்தட்ட சேறு போலவே இருக்கும். சுற்றுலா நோக்குடன் மீனவர் குப்பங்களுக்கு தள்ளி சுத்தமாகப் பேணப்படும் கடற்கரைகள் நமக்கு இல்லை. ஆனால் அரபிக்கடற்கரையில் நதிக்கழிமுகங்கள் தவிர பிற இடங்களில் கரைமணல் சீனி போல துல்லியமான வெண்மையுடன் இருக்கிறது. இந்தியக் கடற்கரைகளை சிறந்த சுற்றுலா தலங்களாக ஆக்கலாமென கண்டுகொண்டது கோவா. அதன்பின் இப்போது கேரளம். தமிழகம் இன்னும் இந்த எண்ணத்தை அடையவே இல்லை.

தமிழகத்தில் பொதுவாக வெள்ளையச் சுற்றுலாப்பயணிகள் அவமதிக்கபப்டுவதாக புகார்கள் உண்டு. முட்டம் கன்யாகுமரி போன்ற ஊர்களில் பல நிகழ்ச்சிகள் பதிவாகியிருக்கின்றன . கேரளத்திலும் எண்பதுகளில் அப்படி ஒரு சூழல் இருந்தது. காவல்துறையின் கடும் நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு வழியாகவே அது இல்லாமலாயிற்று. கேரளச் சுற்றுலாக் கடற்கரைகளில் இன்று குற்றச்செயல் அனேகமாக இல்லை.அதனால்தான் போலும், எந்நேரத்திலும் கடற்கரைகள் முழுக்க காதலர்கள் நிறைந்திருந்தார்கள். தென்னை மரத்தடிகளில் அமர்ந்து மெல்ல முத்தமிடும் இணைகள். சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இணைகள். ஒன்று கவனித்தேன், பையன்கள்தான் பதறுகிறார்கள். பெண்கள் துணிச்சலாக உற்சாகமாக இருக்கிரார்கள்


எழுத்தாளர் ஜெயமோகன்

எழுதியவர் : (22-Jul-17, 1:46 am)
பார்வை : 96

மேலே