உனக்குள்ளே தொலைகிறேன்

இதயம் துளிர்க்க
விழியில் மலர்ந்தவனே...
பார்த்த முதற்தருணம்
பாவையுள் சிறு
விதையாய் விழுந்தவனே...

புதைந்திருந்தாய் எனக்குள்
விதைக்காத விதையாய்...
மௌனித்தே இருந்தாய்
மரித்திருந்தன உணர்வுகள்...

எட்டிப்பார்க்க என்று நினைத்தாயோ...
புதைந்து நெடுங்காலம் கடந்த பின்
முளைவிட நினைத்ததேனோ!..

இதயத்தைக் கேளாமலே
உயிரில் நிறைந்தாய்...
உதிரம் அறியாமலே
உணர்வில் கலந்தாய்...

என்றோ விதையான நீ
வேர் பரப்பி விருட்சமாகி
நிமிர்ந்து நிற்கிறாய் என்னுள்...

மறக்கச்சொல்கிறாய் எனையே இன்று...
நானெனும் அத்தனையிலும் உன்னை
நாழிகை தவறாது நிரப்புகிறாய்...

நீயென்னும் உருவையே
என் உலகமாய்ச் செதுக்குகிறாய்...
நிஜத்தையும் அபகரிக்கிறாய்..

நினைவுகளிலும் ஆட்சியமைக்கிறாய்...
கனவுகளையும் கபளீகரம் செய்கிறாய்...
உனக்கே உயிராகி
உனக்குள்ளே மெல்ல மெல்ல
தொலைந்தே போகிறேன் நான்!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 10:55 am)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 41

மேலே