என்னவனுக்கு ஒரு தாலாட்டு

என்னவனுக்கு ஒரு தாலாட்டு
என் எழுத்தில் ஒர் இசைப்பாட்டு
கோர்த்து நான் - வேர்க்கும்
உனக்கு விசிறியாவேன்...

முன்நெற்றி விழும் முடிகோதி
உன் மீசைமுடி நீவிவிட்டு
தோளணைத்து உன்னைச் சேயாக்கி
என் முத்தங்கள் மாலை சூட்டி...

தென்றலுக்கு மனு கொடுப்பேன்
தண்மையாய் உன்னைத் தீண்டிட...
நிலவுக்கும் கட்டளையிடுவேன்
தண்ணொளியில் உன்னைத் தாலாட்டிட...

விண்மின்னும் தாரகைகளின்
விடுமுறையை ரத்துச் செய்து
உன் கண்ணோடு காட்சியாக்க
மொட்டை மாடி தவமிருப்பேன்...

தூளியாக்கி என் முடியை
தூங்க வைப்பேன் தலைவனுன்னை...
காதலை உனக்குத் தாலாட்டாக்கி
தலையணை செய்வேன் என் மடியை...

அடம் பிடித்தால் என்னவன் நீ
தண்டிப்பேன் என் கொஞ்சல்களால்..
மஞ்சம் கொள் என்னவனே
மிஞ்சி நிற்கும் எனதன்பில்..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 11:10 am)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 64

மேலே