கருகியதென் கருவறைப் பூ

கருவிலுனைத் தாங்கி
எனதுருவாய் உனைக் காண
காத்திருந்தேன் நான்
காலங்கள் கனியுமென்றே!..

என் கருவறை பூக்கவேண்டி
கடவுளை துதித்திருந்தேன்...
கடந்துபோவோரையெல்லாம்
எனக்காய் வேண்டக்கேட்டிருந்தேன்!..

தேடியலையா மருத்துவரில்லை
தேகத்தில் செய்யா சோதனையில்லை...
தேய்ந்துபோனேன் உள்ளுக்குள்
தேடல் நீயென்னைத் தேடிவராததில்!..

வேண்டலெல்லாம் ஒருநாள்
கூடிக் கடவுளை வேண்டியதோ...
பூத்ததென் கருவறையும்
பாதி வாலிபம் கடந்ததன்பின்னே...

மீதி நாட்களுக்கு அர்த்தம் கிடைத்ததெண்ணி
பூரித்துப்போனேன்...
பிந்திய பிரசவம் பாதி உயிர்க்குடித்தும்
பாசமாய் வளர்த்தேன் உன்னை...

வளர்ந்து பெரியவனனாய் நீ...
வயது முதிர்ந்து பலவீனமானேன் நான்...
படித்து பட்டங்கள் பெற்றாய் நீ...
நீ படிக்கவே பட்டினிகிடந்தேன் நான்...

கைபிடித்தாய் மனங்கவர்ந்தவளை
பூத்ததவள் கருவறைப் பூ...
கைவிட்டாய் உயிர் சுமந்தவளை
கருகியதென் கருவறைப் பூ!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 12:20 pm)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 59

மேலே