கவியோகி சுத்தானந்த பாரதி - சிரிப்புத்தான் வருகுதய்யா - சாருகேசி

கல்கியின் ‘பொன்வயல்’ என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் சாருகேசி ராகத்தில் பாடிய ’சிரிப்புத்தான் வருகுதய்யா’ ஒரு அற்புதமான பாடல்.

சீர்காழி கோவிந்தராசன் பாடும் கச்சேரி மேடைகளே பக்கவாத்தியங்களால் களைகட்டும். வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் என அத்தனை பக்கவாத்தியங்களையும் அருமையாக சேர்த்து இசைக்க வைத்துப் பாடி மகிழ்விப்பார்.

இப்பாடலைப் பலமுறை கேட்டிருந்தாலும், பாடல் வரிகளைத் தேடிய போது, இப்பாடலை இயற்றியவர் கவியோகி சுத்தானந்த பாரதி என்று அறிந்தேன். அத்துடன் அவர் இயற்றிய மற்ற சில பிரபல பாடல்களையும் கேட்டிருக்கிறேன். இவர் சிவகங்கை அருகிலுள்ள சோழபுரம் என்ற ஊரில் பிறந்தவர்.

சிரிப்புத்தான் வருகுதையா- உலகைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையா

வெறுப்பினை வைத்துள்ளே இனிப்பாகப் பேசியே
எட்டுக் கடையாய் வாழும் பித்தர் கூட்டத்தைக் கண்டால் (சிரிப்புத்தான்)

பல்லையிளித்துக் காட்டும் பகட்டுக்கு கொட்டுவார்
பசியெனும் ஏழையை பரிவின்றித் திட்டுவார்

செல்வம் கொள்ளையடித்து சிறையிலே பூட்டுவார்
திருடர் மிரட்டினாலே திறவுகோலை நீட்டுவார் (சிரிப்புத்தான்)

நாமே சகலமென்று நாடகம் ஆடுவார்
நாலுதாசரும் பின்னேயே நாமாவளிப் பாடுவார்
ஏமாளி அலைந்து ஏய்க்கும் கோமாளிக் கூத்துக்கள்
எத்தனை எத்தனை பித்துலகத்தில் அந்தோ
எத்தனை...எத்தனை பித்துலகத்தில் அந்...தோ... (சிரிப்புத்தான்)

சிவகங்கையில் 1897 ல் பிறந்த கவியோகி சுத்தானந்த பாரதியின் இயற்பெயர் வேங்கடசுப்ரமணியம். சிறு வயதிலேயே தனது தந்தை மூலமாகத் தமிழ் கற்றிருக்கிறார்.

சிறுவயதில் சிதம்பரம் நடராஜப் பெருமாளை வழிபடப்போன இடத்தில் இயற்றிய பாடல் தான் ’எப்படிப் பாடினாரோ - ராகம்: கர்நாடக தேவகாந்தாரி’.

எடுப்பு

எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

தொடுப்பு

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

முடிப்பு

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினமும்
(எப்படிப் பாடினாரோ!)

என்று தொடங்கும் பாடல் ’கர்நாடக தேவகாந்தாரி’ ராகத்தில் டி.கே. பட்டம்மாள் அவர்களால் பாடப்பட்டு இசைத்தட்டாக அக்காலத்தில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தது.

கவியோகி சுத்தானந்த பாரதியார் காவி உடையணிந்து, தலையில் காவித்துணி முண்டாசும், நரைத்த தாடியுமாகக் காட்சியளிப்பார். பிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ எழுதிய 'லே மிசரபிள்' என்கிற நாவலின் தமிழாக்கமே 'ஏழை படும் பாடு' கதை. தமிழாக்கம் செய்தவர் சுத்தானந்த பாரதியார்.

'ஏழை படும் பாடு' திரைப்படம் 1950-ல் வெளிவந்தது. இப்படத்தில் வி. நாகையா மிகவும் அருமையாக நடித்திருந் தார். 'ஜாவர் சீதாராமனுக்கு 'ஜாவர்' பட்டம் இந்தப் படத்தில் நடித்தபோது கிடைத்தது.

சுத்தானந்த பாரதிக்கு அநேக மொழிகள் தெரிந்திருக்கிறது. ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருக்கிறார். சுத்தானந்த பாரதி தமது ஆவேசப் பாடல்கள் மூலம் ஆன்மீகப் புரட்சியை முன் வைத்தார்.

'வீரத் தமிழர்களுக்கு ஆவேசக் கடிதங்கள்' என்ற நூல் அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சாதி உணர்வுகளை எதிர்த்துச் சாடிய பெருமையும் உண்டு.

ஆரம்ப காலங்களில் 'சமரச போதினி' எனும் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் பேரியகத்தில் ஈடுபட்டு தேச விடுதலைக்காகப் பாடுபட்டார். அப்போது 'ஸ்வராஜ்யா' என்கிற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்க வேண்டியதாயிற்று.

வ.வே.சு. ஐயர் நடத்திய ‘பாலபாரதி' என்ற பத்திரிகையில் அவருடன் இணைந்து சுத்தானந்த பாரதி பணியாற்றினார். அந்தக் காலத்தில் மெத்தப்படித்தவர்கள், அறிவு ஜீவிகள் படிக்கும் பத்திரிகையான வை. கோவிந்தன் நடத்திய 'சக்தி' பத்திரிகையில் சில காலம் கவியோகி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

'இல்லையென்பான் யாரடா
என் அப்பனை தில்லையிலே போய்ப் பாரடா'

மக்களால் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்ட மிகவும் பிரபலமான பாடல்.

'அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே (அருள்)

இன்னுமொரு பிரபலமான தமிழ்ப் பாட்டு

சுத்தானந்த பாரதியார், அரவிந்தர், ரமண மகரிஷி, மகாகவி சுப்ரமணிய பாரதியார் போன்றோருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

யோகசித்தி, கீதாயோகம், பாரத சக்தி மகா காவியம போன்றவை கவியோகி இயற்றிய மிகவும் முக்கியமான நூல்களாகும்.

பாரத சக்தி மகா காவியத்திற்காக, கவியோகிக்கு ராஜராஜ சோழன் விருது கிடைத்திருக்கிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பெயர் பெற்றவர் பாரதி.

1948 ல் வெளிவந்த ’ஸ்ரீ ஆண்டாள்’ என்கிற படத்தில் இவரது பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

1949-ல் பி.யூ. சின்னப்பா நடித்த 'கிருஷ்ண பக்தி' என்ற படத்தின் கதை 'ஜிபிணி விளிழிரி' என்கிற பிரஞ்சு நாவலின் தழுவல். இக்கதையை தமிழில் மொழியாக்கம் செய்தவர் சுத்தானந்த பாரதி.

மேலும், போஜன், மரகதம், பொன் வயல், சுதர்சனம் போன்ற படங்களில் இவரது பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

'சுதர்சன்' என்கிற படத்தில் இவர் எழுதிய அருமையான பாடல் ஒன்றை பி.யூ. சின்னப்பா பாடியிருக்கிறார்.

'உன்னடியில் அன்பு வைத்தேன்,
கண்ண பரமாத்மா'

என்கிற அப்பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல்.

அதேபோல், 'மரகதம்' என்கிற சிவாஜி, பத்மினி நடித்த படம் 'கருங்குயில் குன்றத்துக் கொலை' என்கிற துப்பறியும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.

இந்தப் படத்தில் கவியோகி இயற்றிய 'மாலை மயங்குகின்ற நேரம் – பச்சை மலை வளரும் அருவியோரம்' என்ற ஒரு அருமையான பாட்டிற்கு வெகு நேர்த்தியாக நடனமாடியிருந்தார் பத்மினி.

அடையாறில், 'யோக சமாஜம்' என்கிற அமைப்பை வெகுகாலம் நடத்தி வந்த கவியோகி 1990-ல் இறைவனடி சேர்ந்தார்.

ஆதாரம்: வலைத் தளத்திலுள்ள 'கிருஷ்ணன் வெங்கடாசலம்' கட்டுரை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-17, 6:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 399

மேலே