புதிய பார்வை---படித்தது

திராவிட இயக்கம்தான் ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கிறது, திராவிடம் என்கிற பெயரில் நாமெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம், தமிழ்நாடு சீரழிந்து குட்டிச்சுவராகி போனது இவர்களால்தான் என்று நண்பர்கள் சிலர் சொல்றாங்கப்பா''’என்று என் மகன் சொன்னபோது... ‘""அவர்கள் சொல்வது இருக்கட்டும், உன் கருத்து என்ன?'' என்றேன். ""குழப்பமாக இருக்குப்பா. இன்றைக்கு நடக்கும் ஊழல்களைப் பார்க்கும்போது அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கும் போல இருக்கு'' என்றார்.

""மகனே ஓர் இயக்கத்தை எடைபோட ஊழல் மட்டுமே அளவுகோலாக இருக்க முடியாது. ஊழல் என்பது, ஏதோ திராவிட ஆட்சியில் மட்டும் நடைபெறுகிறது எனச்சொல்வது குறுகிய கண்ணோட்டம், மேலும் உள்நோக்கம் கொண்டது. இந்தியாவில் இப்பொழுதுள்ள தேர்தல் அமைப்பு முறையில், ஊழல் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, அன்னாஹசாரேவால் பெரும் எழுச்சியோடு ஊழல் எதிர்ப்பு இயக்கமாக தொடங்கப்பட்டு பின், அதன் நீட்சியாக அரவிந்த்கெஜ்ரிவால் அவர்களால் "ஆம் ஆத்மி' கட்சியாக உருப்பெற்று, டெல்லியில் ஆட்சி அமைத்து இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக முழிபிதுங்கி நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். உள்ளபடியே ஊழலற்ற ஆட்சி தரவேண்டும் என்றாலும் இன்றைய சூழ்நிலையில் தேர்தல் நடைமுறைகளை மாற்றாதவரை நடைமுறையில் அது சாத்தியமில்லாத ஒன்று. ஊழல் என்பது அரசியல்வாதிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் மட்டும் உள்ளதல்ல. ஊழல் இல்லாத துறை என்று ஒன்றினை காட்ட முடியுமா? தனக்கு ஒருவேலை நடக்க வேண்டுமென்றால் எப்படியாவது, எதையாவது செய்து முடித்துக்கொள்ள வேண்டும் என்பது இன்றைக்கு பொதுவிலுள்ள புத்தி. அரசியலில் மட்டும் எப்படி புனிதர்களை எதிர்பார்க்க முடியும். நான் இவைகளை நியாயப்படுத்தவில்லை. ஆனால், இவைகளை வைத்து இந்த அய்ம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியின் சாதனைகளை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால்தான் இவர்களது சாதனைகள் விளங்கும்.

வெறும் கட்சி அரசியலை வைத்து திராவிடத்தைப் பார்க்கக் கூடாது. அது ஒரு தத்துவம். அதற்குமுன் நீ முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது நாம் கடந்துவந்த பாதையை. "நீங்கள்லாம் ஏண்டா படிக்க வரீங்க, எங்கேயாவது போய் மாடுமேய்க்க வேண்டியதுதானே?' -ஆசிரியர் திட்டுகிறார். இன்னொருபுறம் "மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்காத குடும்பத்தில், படிப்பது வீண்வேலை; மற்ற சகோதரர்களைப் போல நீயும் கடையில வேலை செய்யலாமில்ல'’என்பது தாயின் வேண்டுகோள்மனம் வெறுத்துப்போய் சைதை தேரடி வீதியில் நடந்து வரும்போது, அங்கு நடந்துகொண்டிருந்த பொதுக்கூட்டம் கவனத்தை கவர்ந்தது.

வெண்தாடியுடன் தந்தை பெரியார் சிங்கத்தைப் போன்று கர்ஜனை செய்கிறார். சிறுவன் கவனமாக உரையைக் கேட்கிறான். பல விஷயங்கள் அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு புரிகிறது. பிரச்சினை தன்னை சார்ந்தது அல்ல, ஒட்டுமொத்த சூத்திரர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஒருசாரார் படிக்கவிடாமல் தடுப்பது புரிந்தது. தண்ணீரில் அழுத்தும்போது பந்து நியூட்டனின் மூன்றாவது விதிப்படி மேலே எழும்புவது போல, சிறுவன் தன் விதிப்படி என்று விட்டுவிடாமல் உந்துதலுடன் படித்து தங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி... பின், மேல்நிலை பட்டதாரி என்று உயர்கிறார். அவர் வேறு யாருமல்ல... உனது தாத்தா, கோபாலகிருஷ்ணன்தான். அவர் படித்ததால், பொருளாதாரத்தில் மேம்பட்டதால், என்னையும் உன் அத்தையையும் படிக்க வைக்க முடிந்தது. இன்றைக்கு நீ உன்னதநிலைக்கு வருவதற்கு அடித்தளம் பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் உன் தாத்தாவின் உள்ளத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்பதை உணரப்பா!


திராவிட இயக்கத்தின் ரத்தநாளம் சமூகநீதி. இன்றைக்கு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது தமிழகம். இடஒதுக்கீட்டால் தகுதி திறமை அடிபட்டுவிட்டது என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சிலர் பேசுவர். இந்தியாவின் மருத்துவ சுகாதாரத்திற்கு தலைநகரமாக விளங்குவது சென்னை. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோலின் படி எல்லா அளவுருக்களிலும், தமிழகம் கேரளத்துடன் சேர்ந்து முன்னணியில் உள்ளது. நாட்டில் கல்விஅறிவு பெற்றுள்ளவர்களில், பெரிய மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடுதானே முதலில் உள்ளது. முன்மாதிரி மாநிலம்’எனப்படும் குஜராத்தைக்கூட பட்டியலில் தேடவேண்டியுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் கல்லூரிகளின் தரத்தினை ஆய்வு செய்தபோது தரவரிசையில், முதல் நூறு கல்லூரிகளில் நமது மாநிலத்தை சேர்ந்த 37 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் முதல் மேம்பாலம் சென்னையிலுள்ள அண்ணா மேம்பாலம். இது கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகின்றன. இன்றுவரை அதில் எந்த விரிசலும் விடவில்லையே. தகுதியானவர்கள்தானே கட்டினர். பொறியியல் அல்லது மருத்துவ படிப்பிற்கு குறைந்த மதிப்பெண்கள் என்று அளவுகோல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு மூலம் தகுதி மதிப்பெண்களுக்கு குறைவாக யாரும் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லையே. இன்னும் கூர்ந்து பார்த்தால், எல்லாப் பிரிவினர்களுக்கும் "கட் ஆஃப்' எனப்படும் மதிப்பெண்களுக்கு பெரும்
வித்தியாசம் இல்லையே. தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இடஒதுக்கீடு கொள்கையில் உறுதியாக உள்ளது. இதனால் ஆயிரம் ஆண்டுகளாக ஏகபோகமாக அனுபவித்து வந்தவர்களுக்கு எரிச்சலும் ஆத்திரமும் வருவது நியாயம்தானே. இடஒதுக்கீடு சலுகையல்ல, உரிமை என்பதை உணரவேண்டும்.

அதுமட்டுமா, கோயில்கள் வழியாக கோடி கோடியாக பணமும், பொன்னும், பொருளும், நஞ்சையும் புஞ்சையுமாக அனுபவித்து வந்தவர்களை இந்து அறநிலையத்துறை வாயிலாக கட்டுப்படுத்தி சீரான நிருவாகத்தை வழங்கிவருவது எரிச்சல் கொள்ளத்தானே செய்யும்.

இந்தியா என்பது பல மொழிகளையும், கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கிய நாடு. அதன் பன்முகத்தன்மையை தகர்க்கும் வகையில் மொழியை அழித்தால் ஓர் இனத்தை அழித்துவிடலாம் என்கிற எண்ணத்தோடு இந்தியைத் திணிக்க முயற்சித்தபோது அதை தடுத்து நிறுத்தியது திராவிட இயக்கம்தானே. மற்ற மாநிலத்தவர்கள் இப்போதுதானே தங்கள் மொழி, அழிவின் விளிம்பில் உள்ளதை உணர்கிறார்கள். சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா, "கன்னடர்கள் தமிழர்களைப்போல மொழியுணர்வு கொள்ளவேண்டும்' என்று பேசியிருப்பது திராவிட ஆட்சியின் மாண்பினை உணர்த்தவில்லையா?
பெண்களை சமையலறையோடு கட்டிப் போட்டு, அவர்களது ஆசைகளை ஒடுக்கி, ஆண்களுக்கு சேவகம் செய்பவர்களாக மட்டும் பார்த்த சமூகத்தில், தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் பல நலத் திட்டங்களை -குறிப்பாக பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு என்கிற முத்தாய்ப்பான திட்டத்தைக் கொண்டுவந்தது திராவிட ஆட்சிதானே. சமூகநீதி திட்டங்கள் சாத்திரங்களுக்கும், சனாதனத்திற்கும், மனுநீதிக்கும் எதிரானவை. ஆகவே, அவற்றையெல்லாம் கட்டிக்காத்து சமூகநீதியை குழிதோண்டி புதைக்கவேண்டும் என்று விரும்புவோர் திராவிட ஆட்சியைப் பழிப்பது அவர்களுக்குச் சரிதானே.

இந்தியாவின் முதலாவது மனிதவள மேம்பாட்டு (2001) அறிக்கையின்படி மக்கட்தொகை கட்டுப்பாட்டில் தமிழகம் மேலானதாக விளங்குவதற்கு மிகமுக்கியமான காரணம்... தந்தை பெரியாரின் சுயமரியாதை திருமணவழி முறையும், பகுத்தறிவுக் கருத்துகளுடன் மணமக்கள் அளவோடு பெற்று வளமோடு வாழவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதும்தான். சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டவடிவம் வழங்கியது திராவிட ஆட்சி.

இயக்கங்களையும் அதன் கொள்கைகளையும் தர்க்கரீதியாக எதிர்கொள்ள முடியாதபோது தனிநபர் தாக்குதல் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர். திராவிட இயக்கங்களின் ஆட்சிக் காலங்களில் பயனடைந்து ஏற்றம் கண்டவர்கள் இன்றைக்கும் நன்றியுடன் உள்ளனர். எந்த காலத்திலும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை வீழ்த்திவிட முடியாது. காரணம், அக்கொள்கைகள் "அனைவரும் அனைத்தையும் பெறவேண்டும்' என்கிற உயர்ந்த நோக்கம் கொண்டது. ஊழலாளர்களை காலவெள்ளத்தில் கரைத்து புதியவர்களை வார்த்தெடுத்து எழுச்சியுடன் பீடுநடை போடக்கூடிய வல்லமை இந்த இயக்கத்திற்கு உண்டு. நூறாண்டு வரலாறு நமக்கு அதை தெளிவாகப் புலப்படுத்துகிறது.

"நீதிக்கட்சி ஆழத்தில் புதைக்கப்பட்டது' என்று சத்தியமூர்த்தி கொக்கரித்தபோது... பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா, "புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டது... நாங்கள் இன்று முளைத்து வந்துள்ளோம்' என்றார். திராவிட இயக்கம் ஆயிரங்காலத்து பயிர். அவர்கள் ஆட்சி தமிழர்தம் கொடை.

என்னுடைய விளக்கங்களால் மகன் தெளிவு பெற்றாரா என்று எனக்கு தெரியவில்லை. அவரை உற்றுப் பார்த்தேன். ‘"இன்றைக்கு மாலை, பெரியார் திடலுக்கு கூட்டம் ஒன்றிற்கு செல்லவேண்டும் என்றீர்களே, எத்தனை மணிக்கு புறப்படுகிறீர்கள்'’என்று கேட்டார். ‘"ஏன்?'’ என்று வினவினேன். ‘"நானும் வரலாமென்று இருக்கிறேன்'’என்றார். புன்முறுவலோடு நகர்ந்தேன்.

எழுதியவர் : (25-Jul-17, 2:40 am)
பார்வை : 253

மேலே