ஒருமுறை அருகில் தான் வந்தாலென்ன

கலாபமே என் கலாபமே
வருடி செல்கிறாய் என் வயசை கூடவே
திருடி செல்கிறாய் என் மனசையும்

துலாபாரம் செய்யவா துலாபாரம் செய்யவா
இறங்காத உன் மனதை
உறங்காத என் விழிகள் கூடவே

இலாபம் இல்லா ஒரு இலாபம் இல்லா
கொடுக்கல் வாங்கல் வியாபாரமாய்
நீ திருப்பிதராத என் காதல் அன்பே

முதல் இழந்த முதலாளியை போல
முழுவதுமாய் எனை இழந்து நின்றேனே
அழுது ஓய்ந்து தூங்கும் குழந்தை போல
விழுதற்ற மரமாய் வாழ்கிறேனே


பலாசம் கொண்ட பனித்துளியாய்
அதிகாலை கனவுகளாய் கண்களில் ஒட்டிக்கொள்கிறாய்
அணைக்க வந்தால் அதிர்ந்து ஏனோ ஒளிந்துகொண்டாய்
ஒருமுறை அருகில் தான் வந்தாலென்ன
சிறுஇதழ் முத்தம் தான் தந்தாலென்ன

நீ விளையாடும் கண்ணாமுச்சி ஆட்டத்தில்
தொலைந்து போவது எனோ நான் மட்டுமே
கண்கள் நான் திறக்க கண்கட்டிய கருப்பு துணியாய்
திசைதெரியாமல் நீ பறக்க எங்கோ காணாமல் போகிறாய்
அங்கே என்னையும் கூட்டி சென்றாலென்ன

விலாசம் தெரியா சிறுவனாய் விலாசம் தெரியா சிறுவனாய்
விழிகள் உருட்டி தான் பார்க்கிறேன் பெண்ணே உன்னை
உன் இதய கூட்டினில் சேர்த்திடு கண்ணே என்னை
என்னை சிறையிட்டு உனக்குள் புதைத்திடு இல்லையென்றால்
என்னோடு சிறகுகள் விரித்து என்னோடு ஜோடியாய் பறந்திடு

எழுதியவர் : யாழினி வளன் (25-Jul-17, 5:09 pm)
பார்வை : 299

மேலே