நிலவோடு நான்

முகிலேறி உனை நானும் தொடலாகுமோ
முகிலுந்தன் துகிலாக உருமாறுமோ
தடுமாறும் எனதுள்ளம் தடையாகுமோ
தடைதாண்டி இரு உள்ளம் இடம் மாறுமோ

சிறுமீண்கள் உனையண்டி நகையாகுமோ
இருள் கூட உனக்கான சிகையாகுமோ
ஆணெண்ணும் அகங்காரம் அதிகாரமோ
பெண்ணே உன் பேரழகு பிடிமானமோ

பெண்ணென்றால் நிலவென்று சொலலாகுமோ
நிலவே நீ பெண்ணென்றால் தவறாகுமோ
நமக்கென்று இருக்கின்ற கடன் தீருமோ
வருங்காலம் அதற்கான தளமாகுமோ

விடிகாலை நமக்கான பிரிவாகுமோ
அழுகின்ற நீர்த்துளி தான் பனியாகுமோ
விடிவெள்ளி வானத்தில் உருவாகுமோ
மறுநாளில் மறுபடியும் வரலாகுமோ

இனிக்கின்ற இதழ் ரொம்ப சுவையாகுமோ
இனிப்பே உன் இதழில் தான் உருவாகுமோ
நிலவே நம் பெருங்காதல் நிறைவேறுமோ
இலையேல் என் கவி போல கனவாகுமோ

எழுதியவர் : சுதாகர் (25-Jul-17, 5:47 pm)
சேர்த்தது : சுதாகர்
Tanglish : nilavodu naan
பார்வை : 435

மேலே