மலையின் மடியில்

மலையின் மடியில்

உன் காலடியில் காலூன்றி
நிமிர்கின்றேன்
உன் வதன வனப்பில்
குத்திட்ட பார்வைதனை
மீட்டெடுக்க இயலாது
நிலைகுலைந்த பேதையாய்
நான் . . .

பல்வண்ண மலர்சொரிந்து - நீ
கொய்துவிட்ட என்
மனம் தன்னில்
எண்ணிலா மலர்தழுவி
இதழ் வடியும் மதுரத்தோடு
மயக்கத்தில் மடிவிழுந்து
உளறும் ஒர் குளவியாய்
நான் . . .

காரிருள் பூத்த மேகம்தனை
சுகமான சுமையாக்கி
வெள்ளியென நீ சிந்தும்
அருவிப் புன்னகையில்
அடித்துச் செல்லப்பட்டவனாய்
சங்கமிக்கிறேன்
ஆனந்தக் கடலில்
நான் . . .

பிரியா விடை கேட்டு
உனை பிரிந்து விட்டேன்
நெடுந்தூரம் - ஆயினும்
அயரவிடாது கண் தன்னில்
அகல விரிக்கின்ற
உன் ஆயிரம் பிம்பங்களோடு
நான் . . .

நீ தந்த சுவாசத்தில்
உயிர்த்திருந்த
அந்த சில நாட்களின்
நினைவுகளை மூட்டை கட்டி
முளைத்துவிட்ட
மூன்றாம் சிறகோடு
சிலாகிக்கும் ஓர் பறவையாய்
நான் . . . . .

எழுதியவர் : சு.உமாதேவி (26-Jul-17, 7:42 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : malaiyin madiyil
பார்வை : 261

மேலே