அவள் வருவாளா

சூரியதேவன் தனது தண்ணொளியை கொஞ்சம் கொஞ்சமாக
வெப்பக்கீற்றுக்களாக மாற்றி பூமியெங்கும்
விதைத்துக் கொண்டிருந்தான்
அவன் வான வெளி உலா நேர் உச்சியைத் தொட
வெப்பச் சிதிலங்கள் பாளம் பாளமாய் பூமிஎங்கும் பட்டுத் தெறித்தன
வெக்கைநாடான் கொள்ளித் தணல் ஏந்தி பூமியெங்கும்
தீ நடனம் ஆடிக்கொண்டிருந்தான்

அவள் தனது பள்ளிப் பரிவாரங்களோடு அப்போது
அடியெடுத்து நடந்து வந்து கொண்டிருந்தாள்
மரநிழல் சுகம் தேடி ஒதுங்கிய காளை மாட்டின்
வாயிலிருந்து வெளியேறிய வீணித் திரவம்
நிலத்தை நனைத்துக் கொண்டிருந்தது
பல் கொடிகளின் நடுவே முல்லை மலர்கள் பூத்த
எழில்ப் பூச் சரமாய் அவள் அசைந்து நடந்து தந்தாள்
வறண்டு கிடந்த என் இதயக் கட்டாந்தரை சில்லென்று செழித்தது
அவள் நினைவு மழை பெய்து பெய்து
எனது பாலை உடல் நிலம் பசுந்தரையானது
என்னிதய வீடு தன் தாழ் கதவு திறந்து அவளுக்காகக் காத்துக் கிடக்கிறது
வலைகளில் சிக்காத பறவையாக என்னிடம் அவள் பறந்து வருவாளா

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (27-Jul-17, 2:26 pm)
பார்வை : 314

மேலே