தண்ணீரின் கண்ணீர்

====================
தாகத்திலே கிணறும். தண்ணி கேட்டு திணறும்
பூமி நாக்கு உலறும். பசுமை உயிர் பிரியும்
கண்ணீருக்கும் தண்ணீர் இல்லா காலம் வரும் உணரு
கண்ணால் அதை காணும் முன்னே காடு மரம் வளரு (தாகத்திலே)

வேர வெட்டி நீர கொன்ன பாவம்
வேர்வையாலே குளிக்கிற நம் சாபம்
ஊர விட்டு ஓடிப் போச்சு மேகம்
உழவரோட வாழ்வில் நாளும் நீளும் சோகம்
புகுந்த வீடாம் பூமியிலே வாழவந்த தண்ணி கன்னி
மாமியாரா கொடுமை செய்த மனுஷங்களை எண்ணி
வடிக்கிறதே கண்ணீர் . துடிக்கிறோமா எண்ணி
வாழா வெட்டி ஆக்கி விட்டோம் காட்டை கொலை பண்ணி. (தாகத்திலே)

அடவி கணவன் கட்டிக் காத்த வேலி
ஆறு மேலே ஓடும் நீரு தாலி
நீரு தாலி அறுந்த ஆறும் விதவை
நிர்க்கதியா நிற்கும் பிள்ளை மிதவை
மரணம் கொண்ட காட்டினிலே மாடிமனை கட்டத் தானே
மலரிழந்த ஆற்றை அள்ளி வண்டியிலே ஏற்றி
மணல்கடத்தும் பாவி. மனுசபய சாதி
துயரம் தன்னை விலைக்கு வாங்க குறித்து விட்டான் சேதி (தாகத்திலே)
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Jul-17, 3:33 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 177

மேலே