​காட்சியும் கவிதையும் - 2​

காட்சி :-​

கடைவீதிக்குச் சென்று திரும்பிய கன்னியொருத்தி
எதிரே வந்த இளைஞன் ஒருவனை கண்டு காதல்
வயப்பட்டு அவனையே நினைத்து உருகினாள் .
காதல் மயக்கத்தால் கற்பனை உலகில்
மிதப்பவளின் மனதில் ஊற்றெடுத்த உணர்வலைகள் : .
------------------------

எதேச்சையாகப் பார்த்தேன்
என்னெதிரே வந்த உன்னை
ஏறெடுத்தும் நீ பார்க்கவில்லை
ஏனோ எனக்கும் புரியவில்லை
என்னெஞ்சில் ஏதோ ஊடுருவல்
என்னுள் பாய்ந்தது மின்சாரமாய் ...!

உணர்ந்திடா உணர்வும் உருவாகி
உழுதது உள்ளத்தை உடனடியாய்
கணித்தது நெஞ்சும் கணநேரத்தில்
கனிந்தது எனக்கும் காதலென்று ...
பருவத்தில் விளையும் பயிரிதுவா
பருவமும் செய்திடும் செயலிதுவா ...!

நிழலாய் தொடர்கிறது உன்நினைவு
நிம்மதியின்றித் தவிக்கிறது மனது ..
சுழல்கிறது நெஞ்சில் உன்னுருவம்
சுற்றமாக்கத் துடிக்குது உன்னையே ...
அறியாமலில்லை ஒருதலை காதலிது
அறிந்திட விழைகிறேன் உன்முடிவை ..!

எண்ணங்கள் சிதறுது எந்நேரமும்
வண்ணங்கள் மாறுது பார்வையில் ..
முற்றத்தில் அமர்ந்தால் மனத்திரையில்
முரண்படும் காட்சிகளே கற்பனையில் ..
இதயத்தை ஈர்த்தவனே உனைக்காண
இனிதான நிகழ்வேதும் மலர்ந்திடாதா ..

அகராதியாய் மாறியவனே என்காதலுக்கு
ஆளும்தகுதி என்னையும் ஆயுள்வரை ...
காத்திருப்பேன் அவனையே கரம்பிடிக்க
காலமும் இன்பமுடன் வாழ்ந்திருக்க ...
சிந்தையெடுத்த தெளிவான முடிவிது
மனங்கவர்ந்த மன்னனே என்மணாளன் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Jul-17, 7:32 am)
பார்வை : 430

மேலே