இறங்கி வரும் வழி தெரியாமல்

அதிகாலையின் அழகை
எதுவும் பேசாமலே பேசியது
புல்லில் படர்ந்திருந்த
பூவாய் பனித்துளி

சுடும் வெயிலின் சுடரழகை
சுட்டு சொல்லாமல் சொன்னது
பட்டு படர்ந்து என்னை
தொடர்ந்து வந்த நிழல்

அந்திமாலையின் அழகை
அபரிதிமாய் சொல்லிப்போனது
மறையப்போகிறேன் என்று மயக்கி
குறைவாகவே மென்கதிர்கள் வீசிய சூரியன்

இரவின் நிசப்த அழகை
இரையாமல் சொல்ல
வரப்போகிறேன் மெல்ல
என எட்டித்தான் பார்க்கிறது
வெண் கண்ணனாய் நிலவு

எங்கு நோக்கிட என
எண்ணி என் கண்களை
குழம்பி தவிக்க செய்ய
துள்ளி தான் வந்தது
மின்னி தகித்த நட்சத்திர கூட்டம்

எல்லாவற்றையும் ரசித்து
என்னையும் மறந்து
தன்னிலை துறந்து
தன்னை இழந்து
பார்த்து கொண்டிருந்ததது
மேலிருந்த நீல வானமும்
கீழிருந்த என் மனமும்

அத்தனையிலும் நானே
அழகு என்று தானே
அடித்து சொன்னது என் மேல்
மோதிய குளிர் தென்றல்

மயங்காத விழிகள் இன்று மயங்கியதோ
தயங்காமல் அது இன்று மூடி கொண்டதோ
வளிமண்டலத்தின் மேல் காதல் கொண்டது
விழி மண்டலம் விவரம் தெரியா வயதில்

இயற்கை நடத்திய
இந்த சுயம்வரத்தில்
இந்த இளவரசியின்
கழுத்தோடு படர்ந்து
காற்றுதான் மாலையிட்டது
கண்ணோடு கதைபேசி
தான் சிரிக்கிறது
கன்னத்தை உரசியும்
என்னை சிலிர்க்க செய்தது

கண்ணன் நிலவன்
அவன் ஒருவன் மட்டும்
இறங்கி வரும் வழி தெரியாமல்
இறைவனை கோபித்து நிற்கிறான்

இரவுகள் தோறும் அவன்
குளிரை தூது அனுப்பி பார்க்கிறான்
இந்த ஜன்னலையும் துளைத்து
ஒளிக்கீற்று வீசிதான் பார்க்கிறான்
இறங்கி வரும் வழி தெரியாமல்
இறைவனை கோபித்து நிற்கிறான்

இமை மூடாமல் எங்கும் ஓடாமல்
எத்தனையோ இரவுகள் கழிந்தும்
அத்தனையிலும் தீராத காதலோடு
இன்னும் என்னை ஏனோ
பார்த்து கொண்டே இருக்கிறான்
இறங்கி வரும் வழி தெரியாமல்
இறைவனை கோபித்து நிற்கிறான்
இந்த வெண்ணிற கள்வன் நிலவன் !!!

யாழினி வளன்

எழுதியவர் : யாழினி வளன் (4-Aug-17, 8:23 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 182

மேலே