​நன்றிக்கடன் ​

ராகவன் தனது கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தார் .
தம்பி கொஞ்சம் சீக்கிரம் போப்பா ...ரயிலுக்கு நேரமாச்சு ..டிராபிக் வேற
அதிகமா இருக்கு. ...அவசர வேலையா கோயம்பத்தூர் போகிறேன் ...என்றதும்
அந்த ஆட்டோ ஓட்டுநர் உடனே சார் நீங்களே பார்க்கறீங்க ...டிராபிக் நெரிசலை .
நானும் முடிந்த அளவு வேகமாக போகிறேன் . கவலைப்படாதீங்க சார்.
ஒருவழியாக சென்ட்ரல் ஸ்டேஷனை அடைந்ததும் பணத்தைக் கொடுத்து , நன்றி
கூறிவிட்டு விரைந்தார் ராகவன் .

நீலகிரி எக்ஸ்பிரஸ் நின்றுள்ள பிளாட்பாரத்தை அடைந்து தனது பெட்டியை
கண்டு பிடித்து நெருங்கினார் .அப்போது ஒரு வயதானவர் அங்குள்ள ரயில்வே
டிக்கெட் பரிசோதகரிடம் ( TTR ) மிகவும் கெஞ்சும் விதமாக பேசிக்கொண்டிருந்தார் .
நான் எனது இருக்கையை உறுதி செய்துவிட்டு , மீண்டும் அந்த பயணியை நெருங்கி
என்ன பிரச்சினை என்று கேட்டேன் . அவர் கலங்கிய கண்களுடன் பேச ஆரம்பித்தார் .

தனது பெயர் சந்திரசேகர் என்றும் , நேற்று தான் சென்னைக்கு ஒரு அலுவல் காரணமாக வந்ததாகவும் , இன்று காலை அவரின் மனைவிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்திருப்பதாகவும் செய்தி வரவே உடனடியாக திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது . ஆகவே ஒரு ஏஜென்சி மூலமாக இரண்டாவது A /C வகுப்பில் முன்பதிவு செய்து இருந்தார் . அங்குள்ளவர்கள் பணமும் , சில முடிவுகளை எடுக்க கணவரான எனது கையொப்பமும் தேவையென கூறியதால் இந்த அவசரப்பயணம் . ஆனால் என் துரதிருஷ்டம் அந்த டிக்கட்டும் பணமும் மொபைல் போனும் வைத்திருந்த பையும் எங்கேயோ தவற விட்டுவிட்டேன் . அந்த ஏஜென்சி நேரம் கடந்ததால் அலுவலகத்தை மூடிவிட்டனர் . TTR ஒன்றும் செய்ய முடியாது . காலியிடம் இல்லை . கேன்சல் எதுவும் ஆகவில்லை இதுவரை என்று கைவிரித்து விட்டார் . என் கையில் பணமும் இல்லை என்றார் சந்திரசேகர் .

ராகவன் சென்று கேட்டும் ,என்னால் ஒன்றும் செய்ய முடியாது எந்த வழியிலும் என்று அதிகாரி அதையே கூறினார் . ஒன்றும் புரியாத நிலை . ரயில் கிளம்ப இன்னும் 10 நிமிடங்களே இருந்தது .
ராகவன் தனியாக அந்த ரயில்வே அதிகாரியிடம் சென்று பேசினார் . அவரின் நிலையை எடுத்துக் கூறினார். ஆனாலும் பலனில்லை. ராகவன் உடனே தனது கையில் உள்ள பணத்திலிருந்து அவரிடம் ஏதோ ஒரு தொகையை கொடுத்து எப்படியாவது உதவும்படி கேட்டார். முதலில் யோசித்த அந்த அதிகாரி சில நொடிகளுக்குப் பிறகு அடுத்த பெட்டியில் ஒரு இருக்கை ஏற்பாடு செய்து தருகிறேன் என உறுதி அளித்தார் . அதன்படி பக்கத்து பெட்டியில் படுக்கைவசதியுடன் கொண்ட இருக்கையை சந்திரசேகருக்கு அளித்தார் . ராகவன் உடனே அவரை கைத்தாங்கலாக அழைத்து சென்று அந்த இருக்கையில் அமர செய்தார் . அவரிடம் ஆறுதலாக சில வார்த்தைகள் பேசி, தன்னுடைய முகவரி மற்றும் அலைபேசி எண்ணையும் கொடுத்தார் . ஏதாவது தேவை எனில் என்னை அழையுங்கள் ...இயன்ற அளவுக்கு உதவுகிறேன் என உறுதியளித்தார் . தங்களின் மனைவியின் உடல்நிலைப்பற்றி தெரிவியுங்கள் என்றார் . காலையில் ரயில் கோவையை அடைந்ததும் , சந்திரசேகர் அவராகவே பக்கத்து பெட்டிக்கு வந்து ராகவன் அவர்களை கண்டுபிடித்து , அவரின் கையைப் பற்றிக்கொண்டு , கலங்கிய விழிகளுடன் உங்களுக்கு மிக்க நன்றி தம்பி . என் வாழ்நாளில் இந்த உதவியை மறக்க முடியாது என்றும், நிச்சயம் மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்று சென்றார் .

மூன்று நாட்கள் கழித்து காலை 8 மணி அளவில் ராகவனின் அலைபேசி அலறியது . அதை எடுத்து பேசிய ராகவன் பேசியதை யார் என்று புரிந்துகொண்டு .உங்கள் .மனைவி நலமா என்று விசாரிக்க ஆரம்பித்தார். அவர் சற்று தழுதழுத்தக் குரலில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

அன்றைய தினம் சென்றவுடன் டாக்டரிடம் கலந்து பேசி அவசரமாக இதய அறுவை சிகிசையும் செய்து இன்று மிகவும் நன்றாக தேறி , அபாய கட்டத்தை கடந்து விட்டார் . அனைத்தும் உங்கள் உதவியால்தான் நடந்தது என்றார் . ராகவன் உடனே தனது மகிழ்சசியை தெரிவித்துக் கொண்டு , நான் செய்த உதவிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ...மருத்துவர்கள் தங்களின் திறனால் காப்பாற்றிவிட்டார்கள் . நல்லது என்றார் நெகிழ்ச்சியுடன் . நாம் விரைவில் சந்திக்க வேண்டும் சந்திரசேகர் விரும்பினார் . அதற்கு ராகவன் முதலில் உங்கள் மனைவி நன்றாக குணம் அடைந்து வீட்டில் பழைய நிலைக்கு வரட்டும் ..நான் உங்கள் வீட்டிற்கே வருகிறேன் என்றார் . அதற்கு சந்திரசேகர் ..ராகவன் தம்பி, நான் உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் . எப்படி திருப்பி செலுத்துவது என்று தெரியவில்லை என்றார். ராகவன் சிரித்துக்கொண்டே எல்லோரும் நல்லபடியாக வாழ வேண்டும் குறையின்றி நோயின்றி ..பலகாலம் . அதுபோதும் சார் என்றார் .

சரியாக ஒரு மாதம் கழித்து ராகவன் அவர்களுக்கு சற்று உடல்நிலை பாதித்தது . பல்வேறு மருத்டுவர்களை அணுகி அனைத்து பல பரிசோதனைகளையும் செய்து முடித்தார். இறுதியில் அவருக்கு சிறுநீரகங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ராகவன் சற்று சோர்ந்து விட்டார் உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் . அவருக்கு டயலஸீஸ் சிகிச்சை ஆரம்பித்து விட்டதால் அவர் வீட்டிலும் ஒரு சோகத்தின் நிழலே படர்ந்து இருந்தது அனைவரின் முகத்திலும் . சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் சரியானது என்று முடிவாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

அவரின் உடலுக்கு ஏற்றவாறு ஒருவர், அவரின் சிறுநீரகத்தில் ஒன்றை தானமாக அளித்து காப்பாற்றுவதுதான் ஒரேவழி. ராகவன் வீட்டில் உள்ள அனைவரின் உடலையும் பரிசோதித்த்தில் யாருடைய சிறுநீரகமும் அவருக்கு பொருந்தாது என்று கூறிவிட்டனர். வேறு யாராவது கொடையாக தர முன்வந்தால் அவர்களை அழைத்து வந்தால் அவர்களில் யாருக்கேனும் பொருத்தம் இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார் டாக்டர் . அந்த நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது ராகவன் எண்ணிற்கு . அவரது மனைவி எடுத்து பேசினார் ...அந்தப்பக்கம் சந்திரசேகர் பேசுகிறேன் என்றதும் ராகவன் மனைவி யாரென்று அறிந்து கொண்டார் .

பொதுவாக நலம் விசாரித்துவிட்டு , சந்திரசேகர் கூறினார் ...அவர் மனைவி ராகவன் அவர்களிடம் பேசி நன்றி தெரிவிக்க விரும்புகிறார் என்றார் . உடனே ராகவனின் மனைவி நடந்த விஷயங்களை எடுத்து சொல்லி அவர் தற்போது மருத்துவமனையில் உள்ளார். டயாலிசிஸ் நடந்து கொண்டிருக்கிறது அதனால் தற்போது அவரால் பேச முடியாது என்றார். சந்திரசேகர் மருத்துவ மனையின் முகவரி கேட்டு வாங்கிக்கொண்டார் .

அன்றைய மாலையே சந்திரசேகர் அவரின் மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்து ராகவன் குடும்பத்தினரை கண்டார் . சிறிது நேரம் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து பின்னர் , ராகவன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை தனியாக சந்தித்து பேசினார் . கிட்டத்தட்ட சுமார் ஒருமணி நேரம் அவர் உள்ளேயே இருந்ததால் என்ன பேசினார்கள் ..என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியவில்லை . பிறகு சந்திரசேகர் தனது மனைவியை வெளியே அழைத்து சென்று ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார் . இறுதியாக இருவரும் சிரித்துக்கொண்டே வந்து ராகவன் அவர்கள் குடுமபத்தினரிடம் நாளை காலை நாங்கள் வந்துவிடுகிறோம் . கவலை வேண்டாம் அனைத்தும் நல்லபடியாக முடியும் என்று கூறி சென்றுவிட்டனர்.

மறுநாள் அதிகாலையிலேயே கூறியபடி சந்திரசேகர் அவர் மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்து டாக்டர் கூறியடி வேறொரு அறைக்குள் சென்றார் . பிறகு அதே அறைக்கு ராகவனையும் அழைத்து சென்றார்கள் . மேலும் பல மருத்துவர்களும் நர்சுகளும் உள்ளே சென்றனர் . ராகவன் குடும்பத்தினருக்கு ஒன்றும் புரியாமல் பயந்துகொண்டே நின்றிருந்தார்கள் . சுமார் ஆற மணி நேரம் கழித்து முதல் முதலாக பார்த்த டாக்டர் வெளியே சிரித்துக்கொண்டே வந்து அனைவரையும் அழைத்தார் .

ஒன்றும் கவலை வேண்டாம் ...இருவரும் நலம் ...சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . படிப்படியாக முன்னேற்றம் கண்டு இரு வாரங்களில் இருவருமே வீட்டிற்கு செல்லலாம் என்றதும் ..ராகவனின் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை . பிறகு சந்திரசேகர் அவர்களின் மனைவி , அவரிடம் உங்கள் கணவருக்கு எனது கணவரின் ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி பொருத்தி உள்ளார்கள் . பயப்பட தேவையில்லை . என்னிடம் கூறிவிட்டுத்தான் முழு மனதுடன் ஒப்புக்கொண்டு இதை நாங்கள் செய்தோம் என்று கூறியதும் , ராகவன் அவர்கள் மனைவி , சந்திரசேகரின் மனைவி காலில் விழப்போனார் . அவரை தடுத்து தன்னோடு அணைத்துக்கொண்டு எல்லாம் ஒருவருக்கொருவர் உதவி செய்வது இயற்கைதானே என்றார் சாதாரணமாக .

இரண்டு வாரங்கள் முடிந்து இருவரையும் வீட்டிற்கு செல்ல மருத்துவர்கள் அமைதி பெற்று வெளியே வந்தார்கள் . அதுவரை ராகவன் அவர்களுக்கு சந்திரசேகர் தான் அவரின் ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்திருந்தார் என்று தெரியாது. ஆனால் அவர் மனைவி நடந்ததை கூறியதும் , ராகவன் சந்திரசேகரை கட்டிப்பிடித்து அழுதார் ....அவர் காதில் சந்திரசேகர் மெல்லிய குரலில் சொன்னார் ...அன்று என் மனைவிக்கு ஆபத்து என்றவுடன் உங்கள் முயற்சியால் , உங்கள் பணத்தால் நான் கோவை சரியான நேரத்தில் வர முடிந்தது . என் மனைவியும் இன்று சுகமாக இருப்பதற்கு அன்று நீங்கள் செய்த உதவிதான் காரணம் என்றார் நெகிழ்ச்சியுடன் . அந்த " நன்றிக்கடனை " நான் இப்போது இப்படித்தான் திருப்பிக்கொடுத்து தீர்த்துக்கொண்டேன் என்றார் சிரித்துக்கொண்டே....

இதை கேட்டதும் அங்கு சுற்றி நின்றிருந்த அனைத்து கண்களிலும் ஆனந்த கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .

நன்றிக்கடனை திருப்பி செலுத்தவதற்கும் நல்ல மனம் வேண்டும் அல்லவா....

உள்ளவரை உதவிடுக
உவகையுடன் வாழ்ந்திடுக...

பழனி குமார்
07.08.2017

எழுதியவர் : பழனி குமார் (7-Aug-17, 2:11 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 370

மேலே