பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 1 ஆ

........................................................................................
பெண் மனது ஆழமென்று... பாகம் 1 ஆ

.............................................................................................

மோகனின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து

2011 ஜூன் 6..

என் தேவதை சரண்யாவைப் பார்த்த நாள்..

அரும்பு மீசை முளைத்த புதிதில் கண்ணயர்ந்த நேரம்..

பருவ காலக் கனவுகள் ஒன்றிரண்டு மிக இனிமையாக அமைந்து விடும்..

அருமையான ஆற்றங்கரை நிலவொளியில் பாலாடை மேனியோடு ஒரு பெண் எழும்பி என்னைப் பார்க்கிறாள்.. பார்வையா அது?

இதுகாறும் கனவில் கண்டவளை நேரில் கண்டேன்..!

பார்வையா அது? இதயத்தை மட்டும் நாசுக்காக கொத்தியெடுக்கும் மீன்கொத்தி அது... என் பக்கம் நடந்து வந்தாள்.. நின்றாள்.. கால் நகங்கள் தரையில் தட்டச்சு செய்தன. அவள் கால் விரல்களைப் பார்த்து விட்டு என் கணிணியின் தட்டச்சுப் பலகையைப் பார்த்தேன்.. அவள் கால் விரல் நகங்களைப் போலவே கீ போர்டின் கீ அத்தனையும் சின்னதாய் அழகிய இளங்சிவப்பு நிறமாய் மாறியது... கை குலுக்கினாள்.. உள்ளங்கையும் உள்ளங்கையும் நூறிலொரு நொடி உரசிப் போனதில் எழுந்த கிளர்ச்சியில் எனக்கு மயக்கம் வந்தது..!

மேலப்புரம் சேதுபதி சொர்ணம்மாள் கலைக் கல்லூரி சாலைகளிலிருந்து சற்றே உள்ளடங்கி நெட்டிலிங்க மரக் கூட்டத்துக்கு மத்தியில் வெளிர் பச்சை பெயிண்டிங்கில் சின்ன கேக் போல் அமைந்திருந்தது. இருபாலார் கல்லூரி.. என் பெயர் மோகன்... நான் தாவரவியல் இளங்கலைத் துறையில் பயின்றேன்.. என் கனவுக்கன்னியை கர்ப்பத்தில் பதுக்கி வைத்திருந்த அந்தத் துறைக்கு கோடானுகோடி நன்றி..!

அவளிடம் கவிதையாக என் காதலைச் சொல்ல முயன்றேன். எனக்கு முன்னர் பலபேர் அப்படி முயன்று பலனற்றுப் போனதை அறிந்தேன். புத்தகம் படிப்பதை விடுத்து அவளைப் படித்தேன். என் கண்மணிக்கு, வாய்க்கிறவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்னும் ஏற்படவில்லை என்று அறிந்தேன். நேரங்காலம் முக்கியம் என்கிற அவள் எண்ணத்தைப் புரிந்து கொண்டேன்.. படிப்பெல்லாம் முடித்து வாழ்க்கையில் பாதுகாப்பான நிலைக்கு வந்த பிறகு வாய்க்கிற துணையைத்தான் அவள் மனம் விரும்பும் என்று முடிவு செய்தேன். இப்போதைக்கு தேவதூதனோ அல்லது அவள் வருங்காலக் கணவனோ வந்து ஐ லவ் சொன்னாலும் அவள் ஏற்கப் போவதில்லை.. பின் அந்த அழகான வார்த்தைகளை ஏன் வீணாக்க வேண்டும்?

நான் காதலைத் தெரிவிக்கவில்லையே தவிர சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் வெளிப்படுத்த தவறவில்லை..!

அன்று சரண்யா வெண்ணிறச் சுரிதார் அணிந்திருந்தாள். அவள் அழகுக்கு வெள்ளையுடை பொருத்தமில்லை என்று தோன்றியது. யாரும் அறியாதவாறு ஆடையின் பின்புறத்தில் குங்குமத்தால் ஒரு சிவப்புத் தீற்றலை ஏற்படுத்தினேன். அன்றைக்கு அவளுக்கு நேர்ந்த அனுபவத்துக்குப் பிறகு அவள் எனக்குப் பிடிக்காத வெள்ளை ஆடையை அணியவில்லை..

இரண்டு பக்கம் இரண்டிரண்டு பெண்கள் அவளுக்குத் தாதிகளாகத் தெரிந்தார்கள்.. அவர்களுக்கும் அழகு இருந்தது... திறமை இருந்தது...

இருப்பினும்..

இக்காலத்தில் பேர் வாங்க இது மட்டும் போதாதே? என் கனவுக்கன்னி தனித்து அடையாளம் காணப்பெற வேண்டும்..

எனக்கு இந்த சமூக ஏற்றத் தாழ்வு, பெண்ணியம், மண்ணாங்கட்டி மீதெல்லாம் ஒரு ஈடுபாடும் கிடையாது. பெண்ணைக் கவர வேண்டுமானால் பெண்களின் பிரச்சினைகளைப் பேச வேண்டும், உருக வேண்டும் என்பது மட்டும் தெரியும்.

பேசினேன்.. உருகினேன்.. அப்படியே என் கருத்துக்களை பரவ விட்டு அவள் மனதில் சேருமாறு செய்தேன்.. இதற்கு பாலா மிகவும் துணையாக இருந்தான்.

எங்கிருந்து பெற்றோம் என்பது தெரியாமலேயே என் பேச்சை அவள் பேசினாள்.. ’மறுபடி மங்கலம்’ உருவானதிலும், செயல்பட்டதிலும் பிறருக்குத் தெரிந்ததை விட மகத்தான பெரிய பங்கு எனக்கு உண்டு என்பது எனக்கும் பாலாவுக்கும் மட்டுமே தெரியும்..!

ஒருமுறை சரண்யாவை நீச்சலுடையில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை தோன்றியது. திட்டம் போட்டேன்...

பெண்கள் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் போன்ற கருத்துக்களை என் பாணியில் பரப்பி அவள் மனதில் விதைத்தேன்.. நல்ல உடற்பயிற்சி என்ற பொருளை விவாதமாக்கியபோது சரண்யாவே தன் வாயால் நீச்சலைப் பற்றி பேசுமாறு செய்தேன்..

அப்புறமென்ன?

சில இளந்தாய்மார்களின் பயிற்றுநர் என்ற முறையில் சரண்யா நீச்சலுடை அணிந்தாள். பிற ஆண்கள் அறியாதபடிக்கு பூச்செண்டு பெண்களோடு இந்த முகாமை ஒரு ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்தவன் என்ற முறையில் அங்கே நான்... நான்..! !

இதுவும் கூட சரண்யாவுக்குத் தெரியாது..!

சரண்யாவை கண்களால் காவல் காத்தேன். தப்பித் தவறி எவனாவது அவளைத் தொட்டானோ, தொலைந்தான்..

இந்த இந்திராவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

இப்படி சரண்யாவை தூரத்திலிருந்து ஆட்டி வைத்தது போதாதென்று ஐடி கம்பெனிக் காரன்தான் சரண்யாவுக்கு மாப்பிள்ளையாக வரவேண்டுமென்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த சரண்யாவின் அண்ணன் முகேஷை மூளைச் சலவை செய்து ஐடிகாரன் மோசம் என்கிற முடிவுக்கு வரவழைத்தேன்..!

முகேஷ் முரடன் போலத் தெரிந்தாலும் உண்மையில் முரடனல்ல. தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்கிற ஆர்வமும் பயமும் கொண்ட சராசரி அண்ணன்தான் அவன்.. எனக்கும் ஒரு அக்கா இருந்தாள்.. மனச்சிதைவு நோய் கண்டு பல வருடங்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டு ஒரு நாள் இறந்தே போனாள்.. கூடப் பிறந்த சகோதரி பாசம் எப்படிப்பட்டதென்று எனக்கும் தெரியும்..!

என்ன, முகேஷ் வெளித்தோற்றதுக்கு முக்கியத்துவம் கொடுப்பான்.. இவ்வளவு உயரம், இந்த நிறம், இப்படி பல் வரிசை என்று.. நல்ல வேளையாக எனக்கு அதில் எந்தக் குறையுமில்லை..

சரண்யாவின் அப்பா ஜாதி பார்ப்பவரல்ல.. ஆனால் மதம் பார்க்கிறார்..! நல்ல குடும்பம், வறுமையின்றி குடும்பம் நடத்த ஏதோ ஒரு வருமானம், கெட்ட பழக்கமில்லாத ஒரு நபர்.. இதுதான் அவர் எதிர்பார்ப்பு..

எல்லாம் நல்லபடிதான் நடந்து கொண்டிருந்தது. இனி நான் என் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும்...

படிக்கிற போதே அதற்கும் அடித்தளமிட்டேன்.. படிப்பு முடிந்ததும் வேலை தேடினேன். கையில் வேலையோடு முறைப்படி பெண் கேட்டால் தர மறுக்க மாட்டார்கள். அப்படி மறுத்தால் சரண்யாவை தூக்கிக்கொண்டு போய் விட வேண்டியதுதான்.. !

சென்னையிலிருக்கும் ஒரு அயல்நாட்டுக் கம்பெனியில் ஒருங்கிணைப்பாளர் வேலை.. அந்த வேலையை மிகவும் சிரமப்பட்டு, செலவு பண்ணி அலைந்து திரிந்து வாங்க வேண்டியிருந்தது. ஒரு ஐம்பத்திரெண்டு நாட்கள்.. ஐம்பத்திரெண்டே நாட்கள்..! என் உடலும், மனதும் சரண்யாவை விட்டு, சரண்யாவுக்காக தொலைதூரம் சென்று, வேறு விவகாரத்தில் கவனம் பதித்த நாட்கள்..

வெற்றிகரமாக, வேலையோடு வீட்டுக்கு வந்தால் கண்ணில் தட்டுப்பட்டது அந்தத் திருமண அழைப்பிதழ்.. பிரித்தேன்... சரண்யா- திவாகர் என்று இருந்தது.. அப்போது கூட அது என் சரண்யாதான் என்று புத்திக்கு உறைக்கவே இல்லை..!

பாலா ஃபோன் பண்ணி சொன்னான்..

விஷயம் காதில் விஷமாய் இறங்கியது..! என் சரண்யாவுக்கு கல்யாணமாகி இரண்டு நாள் கடந்து விட்டது..! ! !


தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (8-Aug-17, 11:43 am)
பார்வை : 310

மேலே