மிச்சிகன் தமிழ் சங்கம் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியின் தொகுப்பு

தமிழ் சங்கத்தின் "கோடை கொண்டாட்டம் " நிகழ்ச்சிக்கு தமிழ் மக்கள் பெரும் திரளாக திரண்டு வந்து சிறப்பித்தனர். அறநூறுக்கும் மேற்ப்பற்றோர் பங்கேற்ற நிகழ்ச்சி maybury state park இல் நடைபெற்றது . பெரும்பாலான வட்டாரத் தமிழ்ச்சொற்களை கேட்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி .

ஒருங்கிணைப்பாளர்கள் நுழைவாயிலிலேயே வருபவர்கள் பதிவு செய்யவும் , தமிழ் சங்கத்தின் உறுப்பினர் கால அளவை புதுப்பித்துக் கொள்ளவும் , புதிதாக சேரவும் அரங்கங்களை அமைத்திருந்தனர். தமிழ் சங்கத்தின் செயல்பாடுகளையும் , உறுப்பினர்களுக்கு தரப்படும் சலுகைகளையும் விளக்கும் தட்டிகளை வைத்திருந்தது நல்ல உத்தி.

11.30 க்கு தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே கூட்டத்திற்கு குறைவு இல்லை. வருபவர்கள் தம் கொண்டு வந்த உணவுப் பதார்த்தங்களை அணிவகுத்து வைக்க தாமதிக்காமல் பந்தியை தொடங்கி விட்டனர் .

அருமையான உணவு வகைகளின் கதம்பம் ,கேழ்வரகுக்கூழ் , கம்மங்கூழ் கூட நெடுநாட்கள் கழித்து சுவைத்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது . உணவுத் திடலில் கூட்டம் சேர்ந்து நீண்ட நேரம் அனைவரும் வரிசையில் நிற்காமல் இருக்க , நிர்வாகிகளும் , தன்னார்வலர்களும் , ஒலி பெருக்கியின் மூலம் சரிபடுத்திக் கொண்டே இருந்தார்கள் .

நிகழ்ச்சியில் அதிக கவனம் பெற்றவை குழந்தைகளுக்கான விளையாட்டுகள் தான் . பங்கேற்ற குழந்தைகள் விதிமுறைகளுக்கு சம்பந்தமே இல்லாமல் விளையாடி ஒருங்கிணைப்பாளர்களை நன்றாக குழப்பி அசத்தினார்கள்.

எடுத்துக்காட்டுக்கள் சில .

Cup- cake eating - கேக்கை சாப்பிட்டு விட்டு ஓடி இலக்கை தொட வேண்டும் என்பது விதி , சுவை பிடித்ததாலோ என்னவோ , சற்றே பெரிய குழந்தைகள் உண்டுவிட்டு ஓடி விட , சிறிய குழந்தைகள் நிறுத்தி நிதானமாக அமர்ந்து சுவைத்துக் கொண்டே இருந்தார்கள் . கடைசி வரை நகரவில்லை .

அடுத்து பஞ்சு உருண்டைகளை மூக்கால் ஒரு குவளையில் இருந்து எடுத்து இன்னொரு குவளையில் போட வேண்டும் என்பது விதி . தமிழ்ச்சங்கத்தின் இளையோர் அணியினர் விதிமுறைகளை நீண்ட நேரம் விளக்க , பெற்றோர்கள் அதனை விட பயங்கரமாக தம் குழந்தைகளுக்கு விளக்க , குழந்தைகளோ பஞ்சு உருண்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் . யார் பேச்சையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை .

ஓட்டப் பந்தயம் - நிறைய குழந்தைகள் இருந்ததால் அணி அணியாக ஓட செய்யலாம் என்று முடிவு செய்து , முதல் அணியை ஓடச் சொன்னால் , அனைத்து அணியில் இருக்கும் குழந்தைகளும் ஓடி , பின்னாலயே பெற்றோரும் அவர்களைப் பிடிக்க ஓடி வெகு சிறப்பாக அமைந்தது .

சிறு விண்ணப்பம் - நம் குழந்தைகளுக்கு தமிழ் மிகவும் சிரமப்பட்டுத்தான் வருகின்றது, அழகு தமிழ் பேச பெற்றோர்கள் நாம்தான் பழக்க வேண்டும் ( அவர்களின் ஆங்கில சொற்பிரயோகங்கள் எனக்கு பல சமயம் புரியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன் )

விளையாட வயதில்லைதான் - வாலிபால் , கோ-கோ , எறி பந்து ? (throw ball ) , நம் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம் , பல்லாங்குழி , பரமபதம் , கபடி , கயிறு இழுத்தல் முதலியவற்றை குழந்தைகள் ஆர்வமுடன் பார்க்க பெரியவர்கள் அதிலேயே மூழ்கிப் போயினர் . பின்னோக்கி ஒரு நினைவுப் பயணம் செய்திருப்பார்கள் போல .குறிப்பாக கபடியின் விதிமுறைகளை பெரியவர்கள் கூட திரும்ப திரும்ப கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

தன்னார்வலர்கள் , நிர்வாகிகள் மற்றும் இளையோர்அ ணியினரின் (youth committee :) ) சிறப்பான பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை .

இறுதியில் தமிழ்ச்சங்கத்தின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது .

முதல் தடவை பங்கேற்கும் பெரும்பாலோனர்க்கு (நான் உட்பட ) மற்றவர் அறிமுகமில்லை எனினும்
தயக்கத்துடன் கூடிய சிறு புன்னகையோ , தலையசைப்புகளோ , சம்பிரதாய பேச்சுக்களோ நமக்கு நாமே கட்டிக்கொண்ட கூட்டிலிருந்து எடுத்து வைக்கும் முதல் அடி, அவை இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பங்கேற்க, புதிய அறிமுகங்களாகவும் , கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் , எதிர் கருத்துக்களை விவாதிக்கவும் , இலக்கிய ஆராய்ச்சி களமாகவும் , ஓர் அணியாக நின்று சமூகத்துக்கு உதவி செய்யும் வாய்ப்பாகவும் கூட பரிமாணிக்கும் திறன் பெற்றவை .

இந்த நிகழ்ச்சியில் கூட கடைசி நேரங்களில் , கோடை கொண்டாட்டம் என்ற பொதுக்கூட்டத்தின் உள்ளே , அறிமுகமானவர்களைக் கொண்டு சிறு சிறு தனிக்கூட்டங்கள் நடைபெற்றத்தைக் காண முடிந்தது .

தமிழ் என்னும் தளத்தில் ஒன்றிணைய தமிழ்ச்சங்கம் களம் அமைத்துக் கொடுக்கின்றது , வாருங்கள் நண்பர்களே பயன்படுத்திக்கொள்வோம் .

எழுதியவர் : பாவி (8-Aug-17, 7:15 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 352

சிறந்த கட்டுரைகள்

மேலே