​நண்பன் சிறுகதை

--------------------

ஹாய் சிவா ...என்னடா அவ்வளவு அவசரமா பீச்சுக்கு வா என்று
அழைத்தாய் ....நான் கூட மறுபடியும் ஒரு " ஜல்லிக்கட்டு " போல
ஏதோ பிரச்சினை மீண்டும் ஆரம்பிக்கிறது என்று நினைத்தே
ஓடி வந்தேன் ...ஆனால் இங்கே நீ மட்டும் தனியாக இருக்கிறாய் ...
ஏதோ சிந்தனையில் மூழ்கி குழப்பத்தில் ஆழ்ந்தவனாக தெரிகிறாய் ...
ஏதாவது பிரச்சினையா .. என்று ரமேஷ் மூச்சு விடாமல்
பேசினான் . அனைத்தையும் கேட்ட சிவா அருகில் வந்து
உட்கார் என்று சைகையில் ஆணையிட்டான் .

சிவாவும் ரமேஷும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் .
பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள் . ஒரு மாதத்திற்கு
முன்னர்தான் சிவா அரசியல் செல்வாக்குள்ள ஒருவரால்
அரசுவேலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான். இன்னும் ஒரு வருடத்தில்
நிச்சயம் பணி நிரந்தரம் ஆகும் என்று உறுதி அளித்தனர் ,
கை நீட்டி அன்பளிப்பாக ஓர் தொகையை பெற்றுக் கொண்டவர்கள் .
( அதுவன்றி கிடைக்காது இல்லையா ).

ரமேஷுக்கு முதலில் இருந்தே ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற
எண்ணம்தான் .அவனும் ஒரே மகன்தான் அவர்கள் குடும்பத்திற்கு . அதனால் ஆறு
மாதங்களுக்கு முன்னர் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கும் கடை ஒன்றை
ஆரம்பித்துவிட்டான் . வியாபாரம் பரவாயில்லை என்றும் திருப்தியாக உள்ளது
என்று அடிக்கடி சிவாவிடம் பெருமையுடன் கூறுவான் .

மிக நெருக்கமாக காதலி போல சென்று அமர்ந்தான் ரமேஷ் , சிவாக்கு
அருகில் . அப்போதுதான் கவனித்தான் ரமேஷ் ....சிவாவின் கண்கள் கலங்கி
இருந்தது . பதறிப்போய் என்னடா ..என்று அவன் தோளை உலுக்கிக் கேட்டான் .

உனக்குத்தான் தெரியுமடா ரமேஷ் ...என் வீட்டின் நிலை ..அப்பா இறந்து மூன்று
வருடங்கள் ஓடிவிட்டது . அம்மாவிற்கும் லதாவிற்கும் ( தங்கை ) நான்தான் எல்லாம் .
சொந்த வீடோ , வேறு சொத்தோ இல்லை . அப்பாவிற்குப் பின்
வரும் அவரது சிறு பென்ஷன் தொகை மட்டுமே எங்களுக்கு வருமானம் .
நானும் வேலைக்கு சேருவதற்காக ஒருவரிடம் கடன் வாங்கித்தான் அந்த அன்பளிப்பு
(லஞ்சம்)தொகையும் கொடுத்தேன் .

உடனே ரமேஷ் , ஏண்டா நான் ஏதோ நேற்று முதல் தான் அறிமுகமாகி நண்பர்கள்
ஆனதை போல கதை சொல்லிக் கொண்டு இருக்கிறாய் ...முதலில் விஷயத்தை
சொல்லுடா என்று உரிமையுடன் கடிந்து கொண்டான் .

இல்லைடா , ஒரு வாரமாக உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன் . மனதில் உள்ள சுமை தாங்காமல்தான் இன்று அவசரமாக
வரச்சொன்னேன் . சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் இதற்கு காரணம் .
எனக்கும் உன்னைவிட்டால் வேறு எவருமில்லை . நீதான் இதற்கு ஒரு வழி கூற
வேண்டும் என்றான் . சிவாவின் முகத்தில் தெரிந்த சோகத்தின் பதிவுகள் ரமேஷை
கவலைபட செய்ததால் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் .

சிவா தொடர்ந்தான் ...சென்ற வாரம் நான் எங்கள் அலுவலகத்தின் பணத்தை இரண்டு லட்சம் ரூபாயை வங்கியில் கட்டுவதற்காக ,எனது மோட்டர் சைக்கிளில் செல்லும்போது காணாமல் போய்விட்டது . எப்படி எங்கு திருடு போனது என்றே தெரியவில்லை . உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவலை கூறி பதிவு செய்தும் விட்டேன் .அவர்களும் முயற்சி செய்து எப்படியாவது மீட்டுக் கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளார்கள் .

ஆனால் ஒரு வாரம் ஆகிவிட்டது . நாளையுடன் ஆபிசில் கெடு முடிகிறது என் வாழ்க்கையே
முடியப்போகிறது என்று கூறி ரமேஷின் கையைப் பிடித்து அழத் தொடங்கினான் . அதிர்ந்த
ரமேஷும் அவனுக்கு ஆறுதல் கூறினான் . கிடைத்துவிடும் கவலைப்படாதே சிவா என்றான் . இதை ஏண்டா என்னிடம் கூறவேயில்லை என்றபோது , சிவா உடனே இதை உண்மையில் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல , நான் அறியாமலே எதிர்பாராமல் நடந்த நிகழ்வு . என்னுடைய அஜாக்கிரதை எனும் குற்ற உணர்வே மனதளவில் அதிகமாக தாக்கியது. மேலும் என் எதிர்கால வாழ்வும் கேள்விக்குறியாக மாறிவிட்டதால் இடிந்துவிட்டேன் ரமேஷ் . இன்னும் என் வீட்டிலேயே இதை கூறவில்லை ...உனக்கு மட்டுமே தெரியும் என்றான் .

ரமேஷ் சிறிது நேரம் யோசித்து ...பின்பு தன்னுடைய மொபைல் போனை எடுத்து சற்று தள்ளிச்சென்று யாருடனோ பேச ஆரம்பித்தான் . சில நிமிடங்கள் கழித்து , பேசி முடித்தப் பின்பு சிவாவிடம் வந்து ஒன்றும் கவலைப்படாதே ..நான் உதவி செய்கிறேன் , நீ உங்கள் ஆபிசில் பேசி இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் கேள் . அதற்குள் நான் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றதும் ...மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சிவா அவனைக் கட்டிப்பிடித்து அழுதான் . உடனே ரமேஷ் முதலில் நீ அழுவதை நிறுத்து. தைரியமாக இரு . ஒன்றும் கவலைப்படாதே . நீ வீட்டிற்கு கிளம்பு . நான் இரண்டு நாளில் உன்னிடம் பேசுகிறேன் என்றதும் இருவரும் அவரவர் வழியில் கிளம்பினார்கள் .

சரியாக மூன்று நாட்களுக்குப் பின் மாலைப்பொழுது ரமேஷ் அழைத்தான் சிவாவிற்கு போன் செய்தான் . நான் நாளைக்காலை நேராக உன் ஆபிஸிற்கு பணத்துடன் வருகிறேன்,கவலைப்படாதே என்றதும் சிவா ஏதோ சொல்ல ஆரம்பித்தான் ..உடனே ரமேஷ் எதுவும் பேச வேண்டாம் ..நாளை சந்திப்போம் என்று கூறி போனை துண்டித்துவிட்டான் .

மறுநாள் காலை சரியாக காலை 11 மணியளவில் ரமேஷ் ஒரு பெட்டியுடன் சிவாவின் அலுவலகத்தில் நுழைந்தான் . அவனைக்கண்டதுமே சிவா எழுந்து ஓடினான் . பிறகு ரமேஷும் சிவாவும் ஒன்றாக அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரியின் அறைக்கு சென்றார்கள் . ரமேஷ் அவரிடம், சார் , இதில் இரண்டு லட்சம் உள்ளது . சிவா கட்டவேண்டிய பணம். அவனுக்கு இனி வேறு ஏதும் பிரச்சினை வராது பார்த்து கொள்ளுங்கள் என்றான். அந்த அதிகாரியும் அதை சரிபார்த்து வாங்கிக்கொண்டார் . சிவா அவரிடம் ரமேஷைப்பற்றி கூறினான் . அவன்தான் எனக்கு உதவுகிறான் என்றான் பெருமை கலந்த மகிழ்ச்சியுடன் . அதுமட்டுமன்றி எனக்கு கால அவகாசத்தை மேலும் ஒருவாரம் நீடித்து கொடுத்தமைக்கும் அந்த அதிகாரிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான் . ரமேஷ் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளியே வந்தான் சிவாவுடன் . மேலும் சிவாவிடம் மெல்லியக் குரலில் , மாலை நாம் கடற்கரையில் சந்திப்போம் என்று கூறிவிட்டு பறந்துவிட்டான் .

மாலை அலுவலக நேரம் முடிந்தவுடன் உடனடியாக புறப்பட்டான் சிவா கடற்கரைக்கு. அவனுக்கு முன்னரே வந்து காத்திருந்தான் ரமேஷ். அவனைக் கண்டதும் சிவா அவன் கைகளை பிடித்துக் கொண்டு , ரமேஷ் நீ எனக்கு செய்த பேருதவியை என்றும் மறக்க முடியாது . அதுமட்டுமல்ல மறுவாழ்வு பெற்றேன் உன்னால். எப்படி அவ்வளவு விரைவாக உதவ முடிந்தது என்றான்.

அதற்கு ரமேஷ் நான் அன்று இரவே அப்பாவுடன் விவாதித்தேன் பணத்திற்காக. அவரால்தான் இது சாத்தியமாயிற்று என்றான் . அவர்தான் இதற்கு வழியும் வகுத்தார் . தன்னுடைய சேமிப்பு பணம் டிப்பாசிட்டாக வங்கியில் வைத்துள்ளதாகவும் அதிலிருந்து ( LOAN ) வாங்கிடலாம் என்றார். மறுநாளே சென்று வங்கியில் அதேபோன்று கடன் வாங்கி என்னிடம் பணத்தை கொடுத்தார். இடையில் வங்கிகள் ஒருநாள் ஸ்ட்ரைக் என்பதால் பணம் எடுக்க தாமதம் ஆயிற்று என்றான் . அந்த டெபாசிட் மூன்று வருடக் கணக்கு ( FD for 3 years ) . அதற்குள் நீ கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கடனை அடைத்தால் போதும் . ஒன்றும் பிரச்சினை இல்லை என்றான் .

ரமேஷ் , உண்மையில் உங்கப்பா எனக்கு தெய்வம் என்றான். அதானே பார்த்தேன் ...உடனே இடையில் உள்ள என்னை மறந்துவிடுவாயே ...என்று சிரித்தான் . ரமேஷ் மேலும் தொடர்ந்தான் ... தெய்வம் என்று ஒன்றும் இல்லைடா ... இது உலகில் பிறந்த எவருக்குமே உள்ள மனிதநேயம் . போகும்போது எதுடா நம்கூட வரப்போகிறது . விடுடா ....என்றான் . நான் உங்கப்பாவை நேரில் சந்தித்து நன்றியும் கூறி அவரின் ஆசியும் பெற வேண்டும் என்றான் சிவா . முதலில் நாம் டீ குடிக்கலாம் வாடா என்று அவன் தோள் மீது கைப்போட்டுக்கொண்டு அழைத்து சென்றான் ....

சிவாவின் மனதில் ஒரு புதிய வாழ்க்கையின் பாதை தெரிந்தது .அவன் நடையில் ஒரு நம்பிக்கைத் தெரிந்தது . ரமேஷின் கையை அழுத்திப் பிடித்து கொண்டே நடக்க ஆரம்பித்தான் . அந்த அழுத்தத்தில் நட்பின் ஆழமும் தெரிந்தது .

ஆனாலும் இதுபோன்ற நிகழ்வுகளும் உதவிகளும் நட்புகளும் இன்றைய காலத்தில் காண்பது மிக அரிது என்ற ஓர் எண்ணமும் என்னுள் மட்டுமல்ல , வாசிக்கும் உங்கள் மனதிலும் எழுவது புரிகிறது.

நட்புடன் வாழ்வோம் ...நன்மைகள் செய்வோம் . நாமும் வாழ , மற்றவர்களும் வாழ்ந்திட .

சாதிமதம் , இனம் , மொழி என்பதை அறியாமலே வெறுங்கையோடுதான் பிறக்கின்றோம் . செல்லும்போது அனைத்துத் தரப்பினரும் வழியனுப்பிட , தனியாகத்தான் ஏதும் எடுத்து செல்லாமல் மறைகிறோம் .

உள்ளவரை உண்மையுடன் அர்த்தமுடன் வாழ்வோம் .

எழுதியவர் : பழனி குமார் (9-Aug-17, 2:54 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 712

மேலே