அவள் என்னவள்

பரத நாட்டியம்
படிக்காத
அழகிய
அபிநயக்காரி
அவள்

ஓவியமே கொண்ட
வண்ண தூரிகை
அதிசய விந்தை
அவள் விரல்கள்

வண்ணத்து பூச்சியின்
சின்ன சிறகுகள்
மூடி திறக்கும்
அவள் விழிகள்

ரசித்தும்
புசிக்கப்படாத
காட்டு பழம்
அவள் உதடுகள்

கோபத்தின்
பீரங்கியின்
இரு துளைகள்
அவள் மூக்கு
துவாரங்கள்

பாலைவனத்தில் கண்ட
தொங்கு திராட்சை
நெற்றி நீளத்தின்கீழ்
அவள் கண்கள்

எல்லோரும் நிலவை
ரசிக்க வெண்ணிலவை
ஆற்றாமையோடு விழித்து
பார்க்கும் நட்சத்திரம்
அவள் வட்ட முகத்தோடு
போட்டியிட்டு தோற்ற
அவள் நெற்றி பொட்டு


காற்றோடு சேராமல்
கதைப்பேசும் இலைகள்
வராமல் வரச்சொல்லும்
அவள்கூந்தல் அசைவு ...

காடுகளில் மேடுகளில்
தவம்புரியும் முனிவர்கள்
தோற்று போனார்கள்
கலையாத
அவள் மனமும்
மவுனமும்
வெற்றி கண்டன...

தூங்குவதாய் கொஞ்சம்
நடிக்கும் குழந்தை
என் குரல் கேட்டும்
கேட்காத அவள் காது...

வேகமாக தின்னதெரியாமல்
விக்கிநிற்கும் குழந்தை
உணர்ச்சிகளை உள்ளே
மறைக்க தெரியாமல்
அசையும் அவள்
தொண்டைக்குழி

அணை திறந்ததும்
பாய்ந்தோடும் வெள்ளம்
எனக்காக அவள்
விரிக்கும் உதடுகளில்
எட்டிப்பார்க்கும் பற்கள்

ஆட்டு கொட்டகையிலிருந்து
தெறித்து வெளியே ஓடும்
செம்மறியாட்டின் ஓட்டம்
அவள் காதலை
அவள் அறியாமல்
கக்கி செல்லும்
அவள் பெருமூச்சு

தனிமையில் ஓராயிரம்
பேர் தவித்துக்கிடக்க
இறங்கிவர மனமற்று
தள்ளியே நின்று
பார்க்கும் நிலா
உதடுகளுக்குள்
ஒளிந்துகொள்ளும்
அவள் நாக்கு

மாலை நேரம்
மலை முகட்டுக்குள்
மறைய முயன்று
பார்க்கும் சூரியன்
கன்னியின் துப்பாட்டாகள்
போர்த்திய மலைகளின்
பின் ஒளித்த
கள்ளி அவள் மனம்

தெறிக்க ஓடும்
குதிரையை தடுக்கும்
சின்ன கடிவாளம்
என்னருகில் தன்னையறியாமல்
வரத்தொடங்கும்
அவள் பாதங்களை
கோலமிட்டு அடக்கும்
அவள் பெண்மை

நாற்று நட்டு வியர்வை சிந்தி
அறுவடைக்கு காத்திருக்கும்
விவசாயின் ஆசையும்
கவலையும் சுமந்த நிலம்
என்றோ வரும் மழைக்காக
குடையோடு காத்திருக்கும்
நானும் என் மனமும்

இருளின் நிசப்தம்
தாங்காமல் எழுந்து
வந்த சூரியன்
உதடுகள் பேசாத
கதைகள் பேசிச்சென்ற
அவள் விழிகள் ...

பக்தனின் பிரார்த்தனையை
பரமனிடம் சுமந்து செல்லும்
கோவில்மணி சத்தம்
அவள் ஏக்கத்தையும்
வெட்கத்தையும்
சொல்லி சென்ற
கொலுசு சத்தம்

தேர்கள் தன்னை
தானே தூக்கி
நடப்புதுண்டோ
அவள் நடக்க
தொடங்கினாள்

காலையிலும்
நிலவு நகர்வலம்
வருவதுண்டோ
அதிகாலையில்
அவள் முக தரிசனம்

தேவதைகளும்
தெருவில்
நடப்பதுண்டோ
சாலையில்
அவள் போகிறாள்

அந்த வானுக்கும்
இந்த மண்ணுக்குமான
உறவை மெல்ல
முத்தமிட்டு சொன்ன
மழை துளி
தேவதைகளுக்கும்
பூமிக்குமாக
உறவை புதுப்பித்த
அவள் பாதங்கள்

அருகே இருந்தும்
இணையா தண்டவாளங்களின்
தாங்கா ஏக்கம்
அவள் பாதங்களையும்
பூமி பந்தையும் பிரித்த
காலணிகள் மேல்
கோபம் கொண்ட பூமி

அவள் புடவை
வீசி சென்ற
வாசத்தின் மிச்சத்தை
மூச்சாக்கி வாழ
தொடங்கியது
அன்றைக்கான
என் காதல்


யாழினி வளன் ...

எழுதியவர் : யாழினி வளன்+ (10-Aug-17, 8:46 pm)
பார்வை : 792

மேலே