நானே நீ

சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாமென படுத்துக் கண்ணயர்ந்த நேரம், வானவீதியிலே மேகங்களின் மீதினிலே மிதந்து செல்ல சடுதியிலே இருவர் வந்து இழுத்துச் செல்ல,
எங்கே என்னைக் கொண்டுச் செல்கிறீர்களென்று கேட்பதற்குமுன் ஆகாயம் தாண்டிய கோட்டைக் கதவுகள் திறக்கப்பட அக்னிக்கடலுக்கு புகுந்துவிட்டேன் ஆகுதியாக.

அட! என்ன அதிசயம்!
என்மீது தீ பற்றியெரிய சிறிதும் வேதனையை என்னால் உணர முடியவில்லையே!

தீக்கடலைத் திரைக்கடலாய் நீந்திக்கடந்து கரைச் சேர, அங்கு நின்றிருந்த இருவர் இவன் அக்னியைக் கடந்துவிட்டானாதலால் பனிக்கட்டிக்குள் உறையவைக்க வேண்டுமென என் காதுபட உரைத்து உறைபனி மலைக்குள் என்னை உட்புகுத்தி வைக்க அட! என்ன ஆச்சரியம்! பனிக்கட்டியுமென்னை ஏதுவும் செய்யாமல் உருகி நீராகிப் போக நானும் நீந்தி கரை சேர்ந்தேன் மரக்கட்டைத்துண்டாய்.

இரகசியமென்ன?
எதனால் நான் மரிக்கவில்லை?
கத்திவிட எண்ணினேன்.
அதற்குள் ஒரு குரலெழும்பி அதிர ஒலித்தது, " நீயொரு ஆன்மாவாதலால் இறப்பேது உனக்கு? ", என்று..

என்னது இது?
நான் மனதில் தானே நினைத்தேன்?
அதையறிந்து பதிலெப்படித் தருகிறாய்? என்றே கேட்டிட , " நானே நீ ", என்றே பதில் இரையப் பதறிக் கண் விழித்தேன்.
தரை குளிர்ந்தது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Aug-17, 8:28 pm)
Tanglish : naaney nee
பார்வை : 532

மேலே