சுக்கா மிளகா சுதந்திரம்

சுக்கா மிளகா சுதந்திரம்?
========================================ருத்ரா

"சுக்கா மிளகா சுதந்திரம்?"
சொல் கிளியே!

பாவேந்தர் சுதந்திரம் பற்றி
சுக்கு மிளகு போல்
சுலபம் இல்லை என்று
சூத்திரம் சொன்னார்.

சுதந்திரத்தின் உள்ளே
விலங்கு என்றும்
ஒரு அர்த்தம் உள்ளது.

சுதந்திரம் என்பது
சுதந்திரமாய்
நமக்கு நாமே
விலங்கு மாட்டிக்கொள்ளும்
வாழ்க்கை ஆகிப்போனது.

நமக்கு பிடித்த பிள்ளையாரை
கும்பிட ஆரம்பித்து
பிறகு அவரையும்
அந்த அரசமரத்தையும்
சுற்றி சுற்றி வர ஆரம்பிக்கிறோம்.

பொழுது போக்க‌
சுதந்திரமாய் பார்க்க ஆரம்பித்த
டி.வி
அப்புறம்
அதன் ரிமோட்டுகளில்
நாம் விலங்கு மாட்டிக்கொள்கிறோம்.

சுதந்திரமாய்
டெக்ஸ்டிங்கும் வீடியோவும்
பயன்படுத்திய பிறகு
அந்த செல்ஃபோன்களே
நம்மை அடைத்துப்போடும்
"செல்"கள் ஆகின.

அப்பா சொன்னாரே
தாத்தா சொன்னாரே
என்று
சும்மா ஜாலியாய் போட்டுக்கொண்ட‌
சாதிப்பெயர்
நம் பெண்குழந்தைப்பிஞ்சுகள்
நமக்குத்தெரியாமல்
நம் சாதிக்கோடுகள் தாண்டி
காதல் கத்தரிக்காய்
என்று
கிலோக்கணக்கில் வாங்கி வந்து
வாழ்க்கை வியாபாரம் தொடங்கியபோது
பல்லை நற நறக்கிறோம்.
நரம்பு புடைக்கிறோம்.
ஏதோ ஒரு வெறி
நம்மை விலங்கு பூட்டுகிறது.

ஓட்டுகள் போடும் சுதந்திரம்
என்று
அவர்கள் கொடுத்த சீட்டுகளில்
அவர்கள் விரட்டுகின்ற மிரட்டுகின்ற‌
அல்லது
"காக்காய் காக்காய் நீ அழகாய் இருக்கிறாய்"
உன் அலகைத்திறந்து பாடு"
என்று அவர்கள் பண்ணுகிற‌
அதிரடி தந்திரங்களில்
அல்லது இலவசங்கள் எனும்
அவர்களின் பேய்மழையில்
நாம் காணாமல் கரைந்து போகிறோம்.
மின்னணுப்பொறிக்குள்
குப்பைமேடுகள் குவிந்து போனது.
பொன்னான அந்த சீட்டு...நம்
புண்ணான மர்மமும்

நமக்குத்தெரியாத ஒரு சுதந்திரம் அது.
அந்த மொண்ணைக்காகிதம்
உறுதியான எஃகினால் ஆன‌
நம் விலங்குகள் எப்படி ஆனது?
சுதந்திரமாய்
ஐந்து ஐந்து ஆண்டுகள் தவணையில்
நாம் ஆயுள் தண்டனை
பெற்றுக்கொள்ள‌
நமக்கே உண்டு சுதந்திரம்.
நம் கண்ணீர்.
நம் வேர்வை.
நம் ரத்தம்...எல்லாம்
உலகப்பொருளாதார வயல்களில்
அவர்களுக்கே மகசூல் ஆகி
ஜனநாயகத்தின்
சூல் கலைந்து
சிதைவுற்று..அந்த‌
வர்ண வர்ண "அபார்ஷன்"களை
நம் டிவியில் நாமே கண்டு கொள்ள‌
நமக்கு பூரண சுதந்திரம் உண்டு!
பிக்பாஸ் போன்றவை மூலம்
நமக்குள்ளிருந்து
"போலி" மகாத்மாக்களை அல்லது
அல்லது
மனத்தில் ரத்தம் வடித்துக்கொண்டிருக்கும்
நம் சைபர் மகாத்மாக்களை
நம் வீட்டுக்கூடத்தில்
ரங்கோலி போட்டு
நாமே கை தட்டி ஆர்ப்பரித்துக்கொள்ளும்
சுதந்திரமும் நமக்கு உண்டு!


===============================================

எழுதியவர் : ருத்ரா (15-Aug-17, 8:09 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 170

மேலே