தமிழ்ப் பண்பாடு ---தமிழ் வேதம் ----

சங்க இலக்கியத்தில் 18 நூல்கள் உண்டு: பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டிலும் 18 நூல்கள். இவைகளை பதினெட்டு மேல் கணக்கு நூல்கள் என்றும் பகர்வர். இவைகளில் எதைப் படிக்காவிடிலும் புறநானூற்றின் 400 பாடல்களைப் படித்தாலேயே தமிழர்களின் பெருமையை அறிந்து விடலாம். தமிழ்ப் பண்பாடு என்று எதுவும் கிடையாது என்பதும் விளங்கும். பாரதம் இப்பொழுது உலகில் ஏழாவது பெரிய நாடு. புற நானூற்றுக் காலத்திலோ பாரதம்தான் உலகின் மிகப்பெரிய நாடு. இவ்வளவு பெரிய நாட்டில் பிரதேசத்துக்குப் பிரதேசம் சில புதிய நம்பிக்கைகளும் புதிய வழக்கங்களும் இருப்பது இயல்பே. இது தனிப் பண்பாடு ஆகிவிடாது.



என் மனைவி திருநெல்வேலிக்காரி; நான் தஞ்சாவூர்க்காரன்; இருவரும் பிராமணர்கள்; அதிலும் ஒரே பிரிவு- வடமா; ஆயினும் கல்யாணம் நிச்சயமானவுடன் என்ன சீர் செட்டு, எப்படி கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதில் விவாதம்!!! எங்கள் வழக்கம் இது, எங்கள் வழக்கம் அது என்று அங்கலாய்ப்பு; பின்னர் ஒரு காம்ப்ரமைஸ் Compromise– இது வேறு வேறு பண்பாடு அல்ல. திருநெல்வேலி அல்வா, பெட்டி வெல்லம், மணப்பாறை முறுக்கு போல சில சிறப்புகளே!



இமயம் பற்றியும் கங்கை பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பல புலவர்கள் போகிற போக்கில் பாடித் திரிந்தது இந்த நாடு ஒன்று என்பதைக் காட்டும். அது மட்டுமல்ல. வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று பேசுவோரை முட்டாள்கள் என்றும் காட்டிவிடும். அவன் சாலையும் ரயில் பாதையும் போடுவதற்கு முன்னரே கரிகாலனும் ஆதி சங்கரனும் சேரன் செங்குட்டுவனும் இமயம் முதல் குமரி வரை வலம் வந்த நாடு இது .



இதோ முடமோசியார் என்னும் பெண் புலவர் பாடிய பாடல்:



முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!

ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே!

பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!-

நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி

குவளைப் பைஞ்சுனை பருகி, அயல

தகரத் தண் நிழல் பிணையோடு வதியும்

வடதிசையதுவே வான் தோய் இமயம்

தென் திசை ஆஅய்குடி இன்றாயின்,

பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே.

–பாடல் 132, முடமோசி



“யாவர்க்கும் முன்னால் நினைக்கப்பட வேண்டியவனான ஆய் வள்ளலை பின்னால்தான் நினைத்தேன். அவ்வாறு நினைத்த குற்றத்தால், என் மனம் அழிந்து போவதாகுக. மற்றவரைப் புகழ்ந்த என் நாவும் பிளவு படுவதாகுக. மற்றவர் புகழைக் கேட்ட என் செவியும் தூர்வதாகுக. நரந்தையையும், நறுமணமுள்ள புல்லையும் மேய்ந்த கவரிமான், சுனை நீரைக் குடித்து பெண்மானுடன் தகர மர நிழலில் தங்குகின்ற வடக்கில் உள்ள வானளாவி உயர்ந்த இமய மலையும் தெற்கிலுள்ள ஆய்க்குடியும் இல்லையானால் இந்தப் பரந்த உலகம் தலை கீழாகப் புரண்டுவிடும்”.



இப்படி இமய மலையையும் தெற்கிலுள்ள பொதியம் முதலிய மலைகளையையும் ஒப்பிடுவது பாரத ஒற்றுமையையும் பழங்காலத் தமிழர்களின் புவியியல் அறிவையும் காட்டுகிறது. கங்கை நதியையும் பல புலவர்கள் பாராட்டியுள்ளனர்.



புறம். பாடல் இரண்டில் முரஞ்சியூர் முடிநாகனார் “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே” என்று பாடுகிறார்.



இதற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த அப்பர் பெருமான் “ஆயிர மாமுக கங்கை என்று வங்காளத்தில் கடலில் கலக்கும் கங்கை நதி பற்றிப் பாடுகிறார். வங்க தேசத்தில் கடலில் கலக்கும் கங்கை, 1000 கிளைகளாகப் பிரிகிறது. இவை எல்லாம் மேப் , அட்லஸ்(Map and Atlas) இல்லாத காலத்தில் நம்மவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.



இவை எல்லாம் காளிதாசன் பாடல்களிலும் உள்ளன. பூமியை அளக்கும் அளவுகோல் என்று இமயமலையை வருணிக்கிறார் காளிதாசன். அதிசயப்படக்கூடிய பூகோள அறிவு இது!

சுவாமி நாதன்

எழுதியவர் : (16-Aug-17, 2:22 pm)
பார்வை : 141

சிறந்த கட்டுரைகள்

மேலே