பழங்காலப் பெண்கள் ---தமிழ் வேதம்

நாம் மிகவும் போற்றும் மூன்று பெண்களை எமனென்று வருணிக்கிறது இந்தப் பாடல்! ஓரளவுக்கு அர்த்தம் விளங்குகிறது!



முதலில் பாடலைப் படித்துவிட்டு விவாதிப்போம்:-

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்

தன்னேர் திரேதத்திற் சானகியே – பின்யுகத்திற்

கூடுந்திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில்

வீடுதொறும் கூற்றுவனாமே



பொருள்:-

கிரேதத்து- கிரேதா யுகத்தில்

இரேணுகையே – இரேணுகை என்பவளே

கூற்றுவன் ஆம் – யமன் ஆகும்

திரேதத்தில் – திரேதா யுகத்தில்

தன் நேர்- தனக்குத் தானே ஒப்பாகிய (வேறு எவரையும் உவமை சொல்ல முடியாத)

சானகியே – சீதை என்பவளே

கூற்றுவனாம் – யமன் ஆகும்

பின் யுகத்தில் – அதற்கடுத்த துவாபர யுகத்தில்

கூடும் – வந்த

திரௌபதியே – திரௌபதையே

கூற்றாம் – யமன் ஆகும்

கலியுகத்தில் – இப்பொழுது நடக்கும் கலி யுகத்தில் என்றாலோ

வீடுதொறும் – ஒவ்வொரு வீட்டில் இருக்கும் (ஒவ்வொரு பெண்ணும்)

கூற்றுவனாம் ஆம் – யமன் ஆகும்

என்னே – இஃது என்ன ஆச்சரியம்!



மொத்தத்தில் கருத்து என்னவென்றால் பெண்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல் அடக்க ஒடுக்கமாக வாழவேண்டும். முன் யுகத்தில் இருந்ததைவிட இப்பொழுது பெண்கள் மிகவும் கெட்டுப் போய்விட்டார்கள் என்பதே.



அது எப்படி?



ரேணுகா – பரசுராமன் கதை பலருக்கும் தெரிந்ததே. ரேணுகாவுக்கு காமம் தொ டர்பான தீய எண்ணங்கள் வரவே அவரது கணவர் ஜமதக்னி ரேணுகாவைக் கொல்ல உத்தரவு இடுகிறார். உடனே பரசுராமன் அதைச் செய்கிறார். அதைப் பாராட்டி ஜமத்னி முனிவர் ஒரு வரம் தருகிறார். தன்னுடைய அம்மா ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். ரேணுகா மீண்டும் உயிர் பெறுகிறாள்.



இதில் ரேணுகா செய்த தவற்றால் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஆனால் எல்லாம் சுபமாக முடிகிறது. பரசுராமர் க்ஷத்ரியர்கள் மீது கோபம் கொண்டு 21 தலைமுறையை அழித்ததற்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை.



சீதை, ஒரு மாய மானுக்காக ஆசைப்பட்டதால் ராவணன் கடத்துகிறான். இலங்கையே அழிகிறது. பிறகு சீதையைப் பற்றி ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகம் கிளப்பவே அவள் பூமாதேவியிடம் திரும்பிச் செல்கிறாள். இங்கு சீதை செய்த தவறு எல்லாப் பெண்களையும் போல தங்கத்துக்கு (பொன் மான்) ஆசைப்பட்டது. அதாவது அது பொன் மான் இல்லை என்று கணவன் தெளிவு படுத்தியும் அடம்பிடித்ததால் வந்த வினை.



மூன்றாவது, திரவுபதி சிரித்ததால் வந்த வினை. ரத்தினக் கல் போல இழைக்கப்பட்ட தரையைத் தண்ணீர் என்று நினைத்து துரியோதனன் தனது பட்டாடையைத் தூக்கவே பலகணியில் இருந்து அதைப் பார்த்த திரவுபதி ‘களுக்’ என்று சிரித்துவிட்டாள்; பெண்களுக்கான அடக்கம் அவளுக்கு அப்போது இல்லை.



இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்க, வேறு ஒரு சந்தர்ப்பத்தில், அவளுடைய ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டான். அவள், உடனே சபதம் செய்து, மஹா பாரதப் போருக்குப் பின்னால், துரியோதனன் ரத்தத்தை முடியில் தடவி பழி தீர்த்துக்கொண்டாள். இது பெண்ணின் நகைப்பினால் வந்த வினை.



கலியுகத்தில் ஒவ்வொரு பெண்ணும் இப்படித் தவறு செய்யக்கூடும் என்பதால் புலவர் எச்சரிக்கிறார் போலும்.



இன்று டெலிவிஷன்களில் வரும் சீரியல்களிலும் அப்படித்தானே பெண்களைக் (நீலாம்பரிகளாக) காட்டுகிறார்கள்.



புலவர் பெருமான் காரணம் சொல்லாவிடிலும் மூன்று கதைகளையும் நாமாகத் தொடர்புபடுத்தி விளக்கம் காண முடிகிறது.

எழுதியவர் : (16-Aug-17, 2:45 pm)
பார்வை : 206

மேலே