தமிழ் வாழ்க எனச் சொன்னால் தமிழிங்கு வளர்ந்திடுமா கவிஞர் இரா இரவி

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு
தமிழ் வாழ்க எனச் சொன்னால்
தமிழிங்கு வளர்ந்திடுமா?
கவிஞர் இரா. இரவி
தமிழ் வளர்ந்திட என்ன செய்ய வேண்டும்
தமிழை தமிழாகவே பேசிட வேண்டும்!
தமிழோடு பிறமொழிச் சொல் கலப்பதை
தமிழர்கள் முதலில் நிறுத்திட வேண்டும்!
பிறசொல் கலந்து பேசினால் இனிமேல்
பேசியவர்களிடம் தண்டத்தொகை வாங்கிட வேண்டும்!
தமிங்கிலம் வேண்டாமென்றால் கேட்பது இல்லை
தமிங்கிலம் பேசுதல் குற்றம் என்றாக வேண்டும்
இல்லத்தில் இனிய தமிழில் பேசிட வேண்டும்
எங்கும் தமிழில் பேசிட முன்வர வேண்டும்!
பெயர்ப் பலகைகளில் தமிழ் இடம்பெற வேண்டும்
பெயர்கள் நல்ல தமிழில் சூட்டிடுதல் வேண்டும்!
வடமொழி எழுத்து வரும் பெயர்கள் வேண்டாம்
வண்டமிழ் மொழியில் இன்சொற்கள் வேண்டும்!
ஊடகங்களில் தமிழ்க்கொலை நிறுத்திடல் வேண்டும்
ஊடகங்களுக்கு நல்ல பாடம் புகட்டிட வேண்டும்!
நாளிதழ்களில் நல்ல தமிழ் இடம்பெற வேண்டும்
நாள்தோரும் நல்ல தமிழில் பேசி மகிழ வேண்டும்!
ஆலயங்கள் அனைத்திலும் தமிழே ஒலித்திட வேண்டும்
அன்னைத் தமிழ் அரியணை ஏற்றிட உழைத்திட வேண்டும்!
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாக வேண்டும்
எங்கும் தமிழுக்குத் தடை இல்லை என்றாக வேண்டும்!
உலகின் முதல்மொழிக்கு உரிய மதிப்பு வேண்டும்
உலகெலாம் தமிழ் பரவிட தமிழர்கள் முனைந்திட வேண்டும்!
புதிய புதிய நூல்கள் தமிழில் வந்தாக வேண்டும்
புதிய இலக்கியங்கள் தமிழில் குவிந்தாக வேண்டும்!
மரபு புதிது ஹைக்கூ முப்பாவும் வந்திட வேண்டும்
மரபு தமிழ் மரபு அனைவரும் காத்திட வேண்டும்!
வாய்ச்சொல் வீரர்களாக மட்டும் இருக்காமல்
வளம் சேர்க்க தமிழுக்காக உழைத்திட வேண்டும்

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (16-Aug-17, 7:16 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 138

மேலே