அம்மாவாகிய அப்பா

என் அம்மாவாகிய அப்பாவிற்கு…

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கு...
முக்காலத்திலும் நீங்கள் துணையெனக்கு...
கருவில் சுமந்த தாயை கண்டது நினைவில் இல்லை...
உங்கள் கைபிடித்து நடைபயின்றது மட்டுமே என் வாழ்வின் ஆரம்பம்....

பள்ளி பருவம் தொட்டு…
உங்களின் பாசம் உணர்ந்த நாள்தொட்டு …
பார்க்கவில்லை ஒருவரை உங்களின்
பாசத்திற்கு ஈடான மற்றறொருவரை ....

பச்சோந்தி பாசம் காட்டி
பாதியில் விட்டுச்செல்லும் பலவகையான உறவுகள் ...
பலியிடப்படுவது என்னவோ பாசம் வைக்கும் உண்மை மனம்...

பணம் என்ற ஒற்றை வார்த்தையில்
மனதினை ஓடவிட்டு செல்லும் உறவுகளிடம்
பாசத்தினை எதிர்பார்த்தால்
பரிசாய் கிடைப்பது என்னவோ கண்ணீர் மட்டுமே ....

அப்பா ..
கடவுளுக்கு அன்றே தெரிந்திருக்கிறது
எங்களுக்கு தாயாய் நீயிருப்பாய் என்று
அதனால் தான் என்னவோ எங்களுக்கு
இரண்டு தாய் வேண்டாம் என்று
ஒரு தாயை அவரிடமே அழைத்துக்கொண்டார் போலும்
ஆம் அப்பா …
உங்களிடம் நான் உணரும் அன்பு- தாய்க்குரியது ....

குழந்தை பருவம் மாறி …
குமரி என்ற பெயர்பெற்ற அந்த நேரம்…
மலர் மாலையுடன் நான் நிற்க …
அதைப்பார்த்து உங்களின் கண்களில் வழிந்த கண்ணீரில்
நான் உணர்ந்ததென்னவோ அம்மாவின் அன்பையே ...

குழந்தை பருவத்தில் ஒரு செயலை
பிழையென்று தெரியாமல் செய்துவிட்டு
பேந்த பேந்த என முழித்தபோது
உங்களின் கணநேர கண்பார்வையில்
கடுமையினை காட்டி
கற்கண்டு சொற்களினால்
கட்டுக்குள் கொண்டு வருவீர்கள் எங்களை...
கோபத்தில் உங்களின் கை உயர்ந்ததை
இன்றுவரை கண்ணினால் கண்டதில்லை ...

எண்ணங்களின் ஓட்டத்தை ஏடுகளில் அடக்கிவிட
என்றுமே வாய்ப்பில்லை ...
இருந்தும் ஒரு சிறு கிறுக்கல் என் அப்பாவிற்காக...
என்றும் அன்புடன்
உங்கள் மகள்...

எழுதியவர் : கடற்கன்னி (17-Aug-17, 4:20 pm)
பார்வை : 232

மேலே