வஞ்சிமகள் வாய் திறவாய்

ஊமையின் கனவாய் உருதெரியா கருவாய்
உள்ளத்தில் நிறைந்தவளே உணர்வாய்!
ஆமையின் நகர்வாய் அசைவதனை களைவாய்!
ஆசைகளின் திருவாய் திறவாய்!

ஏக்கத்தின் தெருவாய் இதயத்தின் பெருவாய்
இருந்திடவே செய்தவளே வருவாய்
தூக்கத்தில் நிறைவாய் தொடர்கின்ற நிலவாய்
தொடர்ந்தென்றும் தேனமுதம் தருவாய்

மௌனத்தின் சிறைவாய் மயக்கத்தின் மொழிவாய்
மனம்கொண்ட மல்லிகையே மணப்பாய்
பௌர்ணமியின் ஒளிர்வாய் பனித்துளியின் பொழிவாய்
பசுமையது விதைப்பவளே குளிர்வாய்!

உரிமையுடன் உயர்வாய் உனதன்பை வனப்பாய்
உள்ளத்தின் வயல்வெளியில் விதைப்பாய்
கரிசனத்தின் முகிழ்வாய் காருண்ய மழைவாய்
கண்களினால் தினந்தோறும் ஈவாய்

நெஞ்சத்தின் நினைவாய் நீங்காத நிகழ்வாய்
நீதந்தால் போதும்உன் கனிவாய்
வஞ்சித்தேன் எனவாய் வாயார புகழ்வாய்
வஞ்சிமகள் நீயுன்வாய் திறவாய் !
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Aug-17, 2:07 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 192

மேலே