காமராஜரின் ஆட்சிக்காலம் - தமிழகத்தின் பொற்காலம்

ஏப்ரல் 13. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள். இந்திய தேசத்தின் ஈடுஇணையற்ற தலைவர் பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற நாள்.

விருதுபட்டியிலே பிறந்து, தன் இல்வாழ்வைத் துறந்து, பதினாறு வயதிலேயே பாரதத்தின் விடுதலைக்காகப் பாடுபடத் துவங்கி, அண்ணல் காந்தியின் அகிம்சை வழி நின்று, பலமுறை சிறைசென்று, தீரர் சத்தியமூர்த்தியின் பாசத்திற்குரிய சீடராகத் திகழ்ந்து, தமிழக காங்கிரஸின் தலைவராக உயர்ந்து, தன்னிகரற்ற தலைவராகத் திகழ்ந்த கர்மவீரர் காமராஜர், 13 ஏப்ரல் 1954-ம் ஆண்டு சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை, 9 ஆண்டுகள், காமராஜரின் ஆட்சிக்காலம். அது தமிழகத்தின் பொற்காலம்.

தமிழ்ப் புத்தாண்டு தினமான 13 ஏப்ரல் 1954 அன்று காமராஜர் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். எவருடைய தலையீடுமின்றி தனது அமைச்சரவையைத் தேர்வு செய்தார்.

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது சட்டமன்ற உறுப்பினராக இல்லை, மாறாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மிக எளிதாக சட்டமேலவை உறுப்பினராவதற்கு அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆயினும், தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதையே அவர் விரும்பினார். எளிதில் வெற்றி பெறக்கூடிய சாதகமான பல சட்டப்பேரவைத் தொகுதிகள் அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பலர் அவருக்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் முன்வந்தனர். ஆனால் காமராஜர் அதை விரும்பவில்லை. மாநிலம் முழுவதற்குமான பிரதிநிதியாக, முதலமைச்சராக, இருக்கும் தான், மாநிலத்தின் எத்தொகுதியில் இருந்தும் போட்டியிட தயங்கக் கூடாது எனக் கருதினார். அப்போது வட ஆற்காடு மாவட்டத்தில் காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார். அத்தொகுதியில் காமராஜருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கே. கோதண்டராமன் என்ற வேட்பாளரை நிறுத்தியது. பெரியார் ‘பச்சைத் தமிழனுக்கு’ தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். அண்ணாதுரை தனது கட்சியின் திராவிட நாடு இதழில் காமராஜருக்கு ஆதரவாகக் கட்டுரைகள் பல எழுதினார். ஏகோபித்த ஆதரவு பெற்ற காமராஜர் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட குடியாத்தம் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார்.

படிப்பறிவில்லாத காமராஜர் எப்படிப் பாராள முடியும் எனப் பலரும் பரிகாசம் செய்த நிலையில் பதவி ஏற்ற அவர் தனது அனுபவம் மிக்க திறமையான நடவடிக்கைகளால் தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை நிரூபித்தார். அவருடைய நியாயமான, எளிமையான அணுகுமுறை கட்சியில் மட்டுமின்றி, ஆட்சியிலும் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தது. சரியான முடிவுகளை விரைந்து எடுப்பதில் அவர் வல்லவராகத் திகழ்ந்தார்.

தன் தலைமையை விரும்பாதவர்களாயினும் கூட அவர்களது திறமை இந்த தேசத்திற்குப் பயன்படுமானால், அவர்களையும் அரவணைத்துச் செல்ல காமராஜர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவ்வகையில், முதலமைச்சர் பதவிக்கான உட்கட்சித் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியத்தை மட்டுமின்றி, இராஜாஜியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த எம். பக்தவச்சலம், ஏ.பி. ஷெட்டி ஆகியோரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பி. பரமேஸ்வரன் அவர்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக்கினார். அது தீண்டாமையை ஒழிப்பதற்கான காமராஜரின் ஒரு சிறந்த இராஜதந்திர நடவடிக்கையாக அமைந்ததோடு, தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த அக்கறையையும் வெளிப்படுத்தியது. அது தமிழகம் முழுவதும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவை அவருக்குப் பெற்றுத்தந்தது.

1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, தமிழகத்தில் 1957-ம் ஆண்டு 205 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாவது சட்டமன்றப் பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று காமராஜர் மீண்டும் முதல்வரானார். காங்கிரஸ் கட்சி 204 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களைக் கைப்பற்றியது. இம்முறை அவருடைய அமைச்சரவையில் நான்கு புதியவர்கள் பொறுப்பேற்றனர். தமிழகத்தின் தொழில்துறையை முன்னேற்றம் காணச்செய்வதற்கு ஆர். வெங்கட்ராமன் அவர்களை தொழில்துறை அமைச்சராகவும், பெண்ணினத்திற்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக மீனவ சமூகத்தைச் சார்ந்த கிருஸ்தவப் பெண் லூர்தம்மாள் சைமன் அவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், தியாக மனமும், திறமையும் ஒருங்கே பெற்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தலைவர் பி. கக்கன் அவர்களை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், மின்சாரத்துறை அமைச்சராக வி. இராமையா அவர்களையும் தனது அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக்கினார். உள்துறை அமைச்சராக எம். பக்தவச்சலமும், நிதித்துறை அமைச்சராக சி. சுப்பிரமணியமும், வருவாய்த்துறை அமைச்சராக எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கரும் பொறுப்பேற்றனர்.

1962-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காமராஜர் மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார். மொத்தமிருந்த 206 தொகுதிகளில் காங்கிரஸ் 130 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறையும் பொது சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகச் ஜோதி வெங்கடாசலம், கூட்டுறவு மற்றும் வனத்துறை அமைச்சராக என்.எஸ்.எஸ். மன்றாடியார், விளம்பரம் மற்றும் தகவல் துறை அமைச்சராக ஜி. பூவராகவன் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.எம். அப்துல் மஜீத் ஆகிய நான்கு புதியவர்கள் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றனர். கல்வித்துறை அமைச்சராக எம். பக்தவச்சலமும், நிதித்துறை அமைச்சராக ஆர். வெங்கட்ராமனும், விவசாயத்துறை அமைச்சராகப் பி. கக்கனும், பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக வி. இராமையாவும் பொறுப்பேற்றனர். அஷ்டதிக்கஜங்களைப் போல் எட்டு அமைச்சர்களை மட்டுமே கொண்ட அவருடைய சிறிய அமைச்சரவை மிகத் திறமையாகச் செயல்பட்டது.

“எந்தப் பிரச்சனையாயினும் அதனை எதிர்கொள்ளுங்கள், பிரச்சனைகளைத் தவிர்க்காதீர்கள், அவற்றிற்கு உரிய தீர்வுகளைக் காணுங்கள், நீங்கள் செய்யும் காரியம் சிறிதாயினும் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்” என்பதே காமராஜர் தன் அமைச்சர்களுக்குச் சொன்ன அறிவுரையாகும்.

காமராஜர் ஒரு மக்கள் தலைவராவார். அவர் பாமர மக்களில் ஒருவராக இருந்து, இந்த தேசத்தின் விடுதலைக்காகவும், வாழ்விற்காகவும் தன் வாழ்வைத் தியாகம் செய்து, மக்களின் ஆதரவோடு காங்கிரஸ் தலைவராகி, தமிழகத்தின் முதல்வராகி, முதல்வரான பின்னரும் மக்களிடையே நடமாடி, அவர்களது இன்பதுன்பங்களில் பங்கேற்ற ஒரே அரசியல் தலைவர் காமராஜர் தான். அவர் மக்களின் நிலையை அறிவதற்காகவும், நெருங்கிப் பழகுவதற்காகவும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றார். மக்களின் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளைக் கண்டார். தனிப்பட்ட தன் நலனைப் பெருக்கிக் கொள்ளாமல், பொது நலனைப் பேணிக்காப்பதில் முனைந்து நின்றார். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கினார்.

1954-ம் ஆண்டு காமராஜர் முதன்முறை முதல்வராகப் பொறுப்பேற்ற போது முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1957-ம் ஆண்டு அவர் இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1962-ம் ஆண்டு அவர் மூன்றாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோது மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படத்துவங்கியது.

ஐந்தாண்டுத் திட்டப் பணிகளைத் திறமையுடன் செவ்வனே செயல்படுத்திய காமராஜர் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்சென்றார். அதனால் “மிகச் சிறப்பாக ஆட்சி செய்யப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடு” எனப் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் மனதாரப் பாராட்டினார்.

காமராஜர் நிர்வாகத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளித்ததே இல்லை. பொதுப்பணம் பொதுமக்களின் நன்மைக்குப் பயன்பட வேண்டுமே தவிர யாரோ சிலரின் நலன்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அவர் ஆட்சித்துறை அதிகாரிகளிடம் சுமூகமான உறவினைப் பராமரித்தார். காமராஜரின் எளிமையான, நேரிடையான அணுகுமுறை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சிப்பணி அதிகாரிகளிடத்தில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது. தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் அதிகாரிகளிடத்தில் சுமூகமான உறவுமுறையைப் பராமரிக்கத் தவறினால், அந்த அமைச்சர்களை நெறிப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை.

காமராஜர் மாநில முன்னேற்றத்தை இடைவிடாது கண்காணித்து முன்னெடுத்துச் செல்வதற்காக, ‘மாநில முன்னேற்றக் குழு’ ஒன்றினை ஏற்படுத்தினார். அதில் அனைத்து அமைச்சர்களும், அனைத்துத் துறையின் தலைவர்களும், செயலாளர்களும் இடம் பெற்றிருந்தனர். அக்குழு ஒவ்வொரு மாதமும் கூடி ஒவ்வொரு துறைகளின் திட்டம் சார்ந்த முன்னேற்றம், செயல்பாடுகள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் ஆராய்ந்தது. இது துறையின் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், தேக்கநிலை குறித்தும் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. இந்த நடைமுறையானது திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதத்திற்கு இடமில்லாமல் செய்தது.

இராஜாஜி அவர்கள் கொண்டுவந்த கல்வித்திட்டமே அவர் ராஜினாமா செய்வதற்கும் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கும் காரணமாக அமைந்தது. அதனால் காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்றதும், இராஜாஜி கொண்டுவந்த அத்திட்டத்தை ரத்து செய்தார். இந்திய அரசியலமைப்பின் வழிகட்டு நெறிமுறைக் கொள்கைகளில் தெரிவித்துள்ளபடி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை அளிக்க காமராஜர் முடிவு செய்தார். இராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட வருவாய் இழப்பின் ஒரு பகுதியைச் சரிக்கட்டுவதற்காக மூடப்பட்ட 6000 பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. அதேசமயம் காமராஜர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் இன்னல் படுவதையும், மக்களின் உடல்நலம் பாழாவதையும் தடுத்தார்.

கர்மவீரரான அவர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சியைக் கொண்டுவருவதற்குக் கடுமையாக உழைத்தார். தமிழகத்தில் இருந்த 15,000 ஆயிரம் கிராமங்களில் 6000 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லாத நிலை இருந்தது. அதனால் 500க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி 1954-55 ஆண்டுகளில் 12,967 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல பள்ளிகளைத் திறப்பதற்குக் காமராஜரின் அரசங்கம் பெருமுயற்சிகளை மேற்கொண்டது.

கல்வியை மேலும் பரவலாக்க முடிவு செய்த காமராஜரின் அரசாங்கம் 1962-ம் ஆண்டு 300க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க முடிவு செய்தது. அதன்படி, மேலும் 12267 பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன.

அதன் விளைவாகப் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பெரிதும் உயர்ந்தது. காமராஜர் கண்ட கனவு நனவாகத் துவங்கியது. காமராஜர் ஆட்சி துவங்கிய 8 ஆண்டுகளில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பல மடங்கு உயர்ந்தது.

அதுவரையில் எங்கெல்லாம் பள்ளிகள் திறக்கப்படவில்லையோ, அக்கிராமங்களிலெல்லாம் மத்திய அரசின் நிதியுதவியுடன் ஓராசிரியர் பள்ளிகளை ஏற்படுத்தினார். அதன் மூலம் வேலைவாய்ப்பற்ற படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு ஆசிரியராகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே கல்வியும் தழைக்கத் துவங்கியது.

ஆரம்பக்கல்வி மட்டுமின்றி மேல்நிலைக் கல்வியை மேம்படுத்தவும் காமராஜர் அரசாங்கம் பாடுபட்டது. அதற்காக அமைக்கப்பட்ட இலட்சுமணசாமி முதலியார் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, 7 ஆண்டுகள் தொடக்கக் கல்வி, 4 ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி, உள்ளடக்கிய 11 ஆண்டுகள் பள்ளிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கணிதமும், அறிவியலும், சமூக அறிவியலும் கட்டாயப் பாடங்களாக்கப்பட்டன. புதிதாகத் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு பெருமளவில் ஆசிரியர்கள் தேவைப்பட்டதால், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டு மாநிலமெங்கும் 40 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

எவ்வளவு ஏற்பாடுகள் செய்தாலும் ஏழ்மையில் உழன்றுகொண்டிருந்த ஏதுமற்ற ஏழை மாணவர்களைப் பள்ளிகளுக்கு வரவழைக்க இயலவில்லை. பசியில் வாடும் பாலகர்கள் படிப்பைப் பற்றி நினைக்கக்கூட இயலாதநிலை இருக்கிறது என்பதை உணர்ந்த காமராஜர் நெஞ்சம் பதறினார். ஏழை மாணவர்களின் வாழ்வை எப்படியேனும் உயர்த்தியே தீருவது என்று முடிவு செய்தார். ஏழைக் குழந்தைகளின் பசியினைப் போக்கி அவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதற்காக, 1956-ம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் தமிழகத்தில் மாபெரும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவது பெரிதும் அதிகரித்தது. அனைத்து மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவநிலை பள்ளிகளில் ஏற்பட்டது.

ஓலைக்குடிசைகளையே உறைவிடமாகக் கொண்டிருந்த ஏழை மாணவர்களுக்கு, உணவு தந்து கல்வி கற்க வகை செய்த காமராஜர், அவர்களுக்கு உடையும் கொடுக்க முடிவு செய்தார். 1960-ம் ஆண்டு பள்ளிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டது. அது மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வைப் போக்கியது.

காமராஜர் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார். “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற மகாகவியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டுவதற்கான காமராஜரின் சீரிய முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதிலும், சீருடைகள் வழங்குவதிலும் மக்களும் துணை நின்றனர். இயன்றவர்கள் பலரும் பணமாகவும், பொருளாகவும் வழங்கினர்.

கல்வி வளர்ச்சிக்கென மாவட்டம்தோரும் பள்ளி மேம்பாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. அம்மாநாடுகள் பொதுமக்களின் ஆர்வம் மிகுந்த பங்கேற்புடன் திருவிழாக்களைப் போல் நடந்தன. தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மலர்ந்த கல்வி வளர்ச்சிக்கு பொதுக் கல்வி இயக்குநராக காமராஜரால் நியமிக்கப்பட்ட நெ.து. சுந்தரவடிவேலுவும் பெரிதும் துணை நின்றார்.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் நலன்காப்பதிலும் காமராஜர் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். ஆசியாவிலேயே முதன்முறையாக ஓய்வூதியம், சேமநலநிதி மற்றும் காப்பீடு ஆகிய மூன்றும் இணைந்த பயன்களை காமராஜரின் அரசாங்கம் ஆசிரியர்களுக்கு வழங்கியது. ஆரம்பப் பள்ளிகளைப் போன்று மேல்நிலைப் பள்ளிகளும் முன்னேற்றம் பெற்றன. 1954-55-ல் 1031 ஆக இருந்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை, 1962-63-ல் 1820 ஆக உயர்ந்தது. மேல்நிலைக் கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் 3.82 இலட்சத்திலிருந்து 6.2 இலட்சமாக உயர்ந்தது.

பள்ளிக்கல்வி மட்டுமின்றி கல்லூரிக் கல்வியை மேம்படுத்துவதிலும் காமராஜர் கவனம் செலுத்தினார். 1953-54 ஆண்டுகளில் 53 கல்லூரிகளும் அவற்றின் பயின்ற 39 ஆயிரம் மாணவர்களுமாக இருந்த நிலை, அடுத்த 9 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டு 1962-63 ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை 63 ஆகவும் அதில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாகவும் அதிகரித்தது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆய்வுக் கூடங்களும், நூலகங்களும் துவங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்களைப் போலவே கல்லூரி ஆசிரியர்களையும் பாதுகாத்தார் காமராஜர். 1962-ம் ஆண்டிலிருந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

கல்விக்கு அடுத்தபடியாக காமராஜர் விவசாய மேம்பாட்டில் கவனம் செலுத்தினார். 2007 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேட்டூர் கால்வாய்த் திட்டமானது சேலம், கோயம்பத்தூர் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 33400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 29 கோடி ரூபாய் செலவில் காவேரி டெல்டா பாசன மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆளியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை, அமாராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி போன்ற நீர்த்தேக்கத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்தும் முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் செய்து முடிக்கப்பட்டன. இவற்றில் பல பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றி முடிக்கப்பட்டது அவருடைய நிர்வாகத் திறமைக்குச் சான்றாகும்.

புதிய கட்டளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் வீடூர் அணை போன்றவை இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் முடிக்கப்பட்டவை ஆகும். முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் தமிழகத்திலிருந்த அனைத்து நதிகளும் அதன் அதிகபட்சப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. ஆகவே, மூன்றாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் காமராஜரின் அரசாங்கம் சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியது. ஏரிகள், குளங்கள் போன்றவை தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டன. 1957-61க்கும் இடைப்பட்ட காலத்தில் 1600 ஏரிகளும், 1628 குளங்களும் தூர்வாரப்பட்டன. 2000 கிணறுகள் வடிகால் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டன. விவசாயிகளுக்கு 25 சதவீத அரசு மானியத்துடன் நீண்ட காலக் கடன்கள் வழங்கப்பட்டன.

விவசாய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவும், கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதற்காகவும் அவர் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார். பெரியார் நீர் மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர் மின் உற்பத்தித் திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. விவசாயத்திற்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக 23103 கிராமங்கள் மின்சாரம் பெற்றதோடு, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார நீரேற்றிகளின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்திலிருந்து 5,00,000 ஆக உயர்ந்தது. பாசனத் திட்டங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்கள் மிக நேர்த்தியாகச் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக காமராஜரின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, மிகை உற்பத்தி கொண்ட மாநிலமாக உயர்ந்தது.

மின் உற்பத்தி செய்வதற்கும் அவற்றைப் பகிந்தளிப்பதற்கும் அரசுக் கட்டுப்பாட்டில் மின்சார வாரியம் உருவாக்கப்பட்டது. விவசாயத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்ந்தது. விவசாயத்துறையில் மின்சாரத்தின் பயன் 44 கோடி யூனிட்டுகளிலிருந்து, 186 கோடி யூனிட்டுகளாக அதிகரித்தது. நீர் மின் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. மின்சார உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் தொடந்து முன்னேறி மின்சாரத் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ்ந்தது.

காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் தொழில் துறையில் பெரும் ஏற்றம் கண்டது. அடிப்படையில் தமிழகம் விவசாய பூமியாக இருந்த போதிலும் தொழில்கள் பல தழைத்தோங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் இருந்தன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார் காமராஜர். தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தி, தமிழ் நாட்டின் தொழில் வளரச்சிக்கு வழிகோலினார்.

கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் ஏற்படுத்தப்பட்டன. அதன் மூலம் சிறுதொழில் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்பட்டது. காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கனரகத் தொழிற்சாலைகள் பல ஏற்படுத்தப்பட்டன. சென்னை, நெய்வேலி, தூத்துக்குடி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் தொழிற்சாலை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆவடி டாங்க் தொழிற்சாலை, திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், ஊட்டி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, சென்னை ரயில்பெட்டித் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், கிண்டி தொலைநகல் தொழிற்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற கனரகத் தொழிற்சாலைகள் வெளிநாட்டு முதலீட்டுடனும், மத்திய அரசின் உதவியுடனும் தொடங்கப்பட்டன. மேலும், பள்ளிப்பாளையம் சேஷாயி காகித ஆலை, ராஜபாளையம் ராம்கோ தொழிற்சாலை, சங்கரிதுர்க்கம் இந்தியா சிமெண்ட ஆலை, வண்டலூர் ஸ்டண்டர்டு மோட்டர் தொழிற்சாலை, எண்ணூர் ராயல் என்பீல்டு மோட்டார் தொழிற்சாலை, வடபாதி மங்கலம் சர்க்கரை ஆலை மற்றும் அசோக் லேலண்டு தொழிற்சாலை ஆகிய தனியார் துறை தொழிற்சாலைகளும் தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தின.

கனரகத் தொழிற்சாலைகளைப் போலவே, கார்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள், டீசல் எஞ்ஜின்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், மின்சார நீரேற்றிகள், மின் மீட்டர்கள், மின் கலங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளும் வளர்ச்சி அடைந்தன. 9 ஆண்டுக் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 4500-ஐ தொட்டது. தொழில் வளர்ச்சியில் மகாராஷ்டிராவிற்கும், மேற்கு வங்காளத்திற்கும் அடுத்த நிலையில் இருந்த தமிழகம் மேற்கு வங்காளத்தைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

காமராஜரின் ஆட்சிக்காலத்தில் சென்னை இராமானுஜம் கணித நிலையம், சென்னை இந்திய தொழில் நுட்ப நிலையம் (ஐ.ஐ.டி), அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி மண்டல தொழில் நுட்பக் கல்லூரி, கோவை அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி மின்-வேதியியல் ஆய்வு நிலையம், சென்னை அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி போன்ற அறிவியல், தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதுதவிர பல பாலிடெக்னிக் கல்லூரிகளும், தொழில் பயிற்சி நிறுவனங்களும் (ஐ.டி.ஐ.) துவக்கப்பட்டன. தனியார் துறையிலும் பல அறிவியல், தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.

காமராஜர் ஒரு இலட்சியவாதி மட்டுமல்ல அவர் ஒரு செயல் வீரரும் ஆவார். இந்திய தேசம் பருவ மழைகளையும், விவசாயப் பொருளாதாரத்தையும் சார்ந்தே இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர் விவசாயத்தை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.

விவசாய முன்னேற்றத்தில், விவசாயத் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது என்பதை உணர்ந்த காமராஜரின் அரசாங்கம், 1956-ம் ஆண்டு விவசாயக் குத்தகைதாரர்கள் சட்டத்தைக் கொண்டு வந்தது. அச்சட்டம் உழுபவரின் உரிமைகளை உறுதிப்படுத்தியது. 1962-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில உட்சவரம்புச் சட்டத்தின் படி விவசாய நிலத்திற்கான உட்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டது. அச்சட்டம் அதிகப்படியான நிலம் வைத்திருந்த நிலச்சுவான்தார்களிடமிருந்து உட்சவரம்பிற்கு மேற்பட்ட நிலத்தை எடுத்து, அதை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது.

காமராஜரின் ஆட்சியில் வீட்டுவசதியும், நகர்ப்புற வளர்ச்சியும் வேகம் பெற்றன. அரசு ஊழியர்களுக்கும், காவல் துறையினருக்கும், நேசவாளர்களுக்கும் வீட்டுவசதிகள் செய்து தரப்பட்டன.

காந்தியடிகளின் கொள்கை வழி நின்றவரான கர்மவீரர் கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத் திட்டங்களிலும் கவனம் செலுத்தினார். 1960-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி விழாவின் போது தமிழ் நாட்டில் புதிய கிராமப் பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து ஒன்றியங்களும், மாவட்ட வளர்ச்சி மன்றங்களும் துவக்கப்பட்டன. உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அதிகாரங்களும், நிதி ஆதாரமும், உள்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தழ்த்தப்பட்ட நிலையில் இருந்த எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்குக்கென்று சிறப்பு சமூக நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், பெண் தொழிலாளர்களின் நிலையினை உயர்த்துவதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. புதிய பஞ்சாயத்து ஆட்சி முறை காமராஜர் கொண்டு வந்த அமைதிப் புரட்சியாகும்.

தேசத்தின் வளர்ச்சிக்கு மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு பெருந்தடையாக இருப்பதை உணர்ந்த காமராஜரின் அரசாங்கம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அத்திட்டத்தை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே ஒரு வாரியத்தை உருவாக்கியது.

எல்லாவற்றிக்கும் மேலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குக் காமராஜர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால், ஒரு போதும் தான் தமிழ் மொழியை வாழ வைத்ததாக அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. 1955-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. 1958-ம் ஆண்டு தமிழ் ஆய்வுக் குழுவினை நிறுவியது தமிழ் வளர்ச்சிக்குக் காமராஜர் செய்த மாபெரும் சாதனையாகும். அலுவல் மொழிச் சட்டத்தின் மூலம் தமிழ் ஆட்சி மொழியாக்கப் பட்டதைச் செயல்படுத்தவும், தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்தவும் அக்குழு ஏற்படுத்தப்பட்டது. 14 ஜனவரி 1958-ம் ஆண்டு முதற்கொண்டு தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதே நாளில் தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. அதேசமயம், தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக காமராஜரின் அரசாங்கம் மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டது. 1961-ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் தான் தமிழ் மொழி கல்லூரிகளில் பயிற்று மொழியாக்கப்பட்டது. 1962-ம் ஆண்டு தமிழ் அகாடமி தனது முதல் தமிழ் கலைக்களஞ்சியத் தொகுதியை வெளியிட்டது.

1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காமராஜரின் தலைமையின் கீழ் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலத்தைக் காங்கிரஸ் பெற்றிருந்த போதிலும் கூட, முந்தைய தேர்தலில் 15 இடங்களே பெற்ற தி.மு.க. இத்தேர்தலில் 50 இடங்களைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக, தான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அப்பதவியை இராஜினாமா செய்ய காமராஜர் முடிவெடுத்தார். முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப் பணிக்காக டெல்லி சென்ற காமராஜரை, பண்டித நேரு அவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார். தேசிய அரசியலிலும் தன் தனி முத்திரையைப் பதித்த காமராஜர் அசைக்கவியலாத ‘கிங் மேக்கர்’ ஆகத் திகழ்ந்தார்.

கடைக்கோடித் தமிழனும் கரம் கூப்பித் தொழுத கர்மவீரராக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தேசத்தின் முன்னேற்றமே தன் வாழ்வாகக் கொண்ட தீயாக சீலராகக் காமராஜர் திகழ்ந்தார். “ஏழைகளின் துன்பம் போக்காமல் எந்தப் பதவியிலும் இருப்பதில் எவ்விதப் பயனுமில்லை” என்பதைத் தன் கொள்கையாகக் கொண்டிருந்த காமராஜர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளனாகத் தமிழக மக்களின் மனங்களில் நீங்காது நிறைந்தார்.

எழுதியவர் : முனைவர் நா.சேதுராமன் (18-Aug-17, 3:35 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 977

மேலே