வந்தனா எனும் வானவில்

எத்தனை வயதானாலும் பார்க்கவும், கேட்கவும், ரசிக்கவும் அலுக்காத விஷயங்கள் வாழ்க்கையில் பலப்பல உண்டு தூறாலாய் தூவினாலும் கொட்டித் தீர்த்தாலும் மழை அழகு, சிலுசிலுவென்று ஓடினாலும், அடித்துப் புரட்டியபடி ஆர்பரித்தாலும் ஆறு, கடல், அருவி என்று தண்ணீர் என்றுமே அழகு தான், மணியோசை எழுப்பியபடி நடந்து செல்லும் யானை, நீளமான பாம்பாய் கூவியபடி செல்லும் ரயில், வானில் பறக்கும் ஏரோப்ளான், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காமல் திரும்பத்திரும்ப பார்க்க வைக்கும் பாலச்சந்தரின் கதாபாத்திரங்கள்¢¢, உயிரை உருக்கும் ஜேசுதாசின் பாடல்கள் இவை அனைத்தும் நான் சொன்னது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு, அது நான் திருட்டுத்தனமாய் படித்த என் முன்னாள் காதலி, இந்நாள் மனைவி வந்தனாவின் டைரி வாசகங்கள்.

ஒரு முனிவர் தண்ணீரில் விழுந்து தத்தளிக்கும் தேளை திரும்பத் திரும்பக் காப்பாற்றினாராம் அதுவும் அவரை திரும்ப திரும்ப கடித்ததாம், அது கடிக்கும் என்று தெரிந்தும் அதை ஏன் காப்பாற்ற வேண்டும் என ஒருவர் கேட்டதற்கு கொட்டுவது அதன் இயல்பு, காப்பாற்றுவது என் இயல்பு என்றாராம் இது பல வருடங்களாக என்னால் பற்பல தருணங்களில் பலரிடம் சொல்லப்பட்ட எனக்கு பிடித்த ஒரு கதை, ஏனென்றால் மனிதனின் உண்மை இயல்பு சில காலம் ஒளிந்திருந்தாலும், சூழ்நிலை கருதி அது நடித்தாலும் அது தன் இயல்புத் தன்மையை இழக்காது என்பது என் கருத்து, இது தான் வந்தனாவின் உண்மையான குணம், இவ்வளவு ரசனையான பெண்ணான வந்தனா வெளியில் காண்பித்ததோ வித்தியாசமான தோற்றத்தை.

வந்தனா நான் வேலை பார்க்கும் ஆபிசில் புதிதாய் சேர்ந்திருந்தாள்¢. யாருடனும் பேசாமல் எப்போதும் சோகம் அப்பிய விழிகளுடன் வலம் வருவாள். யாரும் அவளிடம் நெருங்கிப் பேசவே பயப்படும் அளவிற்கு அவளது முன்கோபம் பிரசித்தம். அவளுடைய அந்த கோபமும், சோகமுமே என்னை மிகவும் கவர்ந்தது. என் மேல் வந்து விழுந்து சிரித்தபடி அதிகமாய் பேசும் பெண்களை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. கவிதைகள், ஓவியங்கள் கூட ஊமைகள் தான் அவைகளின் மௌனம் தான் அதிகம் பேசப்படும். அதிகம் பேசும் பெண்களை எனக்குப் பிடிப்பதில்லை. குறைவாகப் பேசுபவரிடம் விஷயம் அதிகம் இருக்கும் என்பது என் கணிப்பு. என் கணிப்பிற்கு வந்தனா தப்பவில்லை. அவளிடம் அதிக விஷயம் கொட்டிக்கிடந்தது.


அவள் இல்லாத போது அவளுடைய டேபிளைத் திறந்து பார்த்த போது முதலில் கண்ணில் பட்டது நான் மேலே சொன்ன டைரி, அடுத்து தற்கொலை செய்து கொள்வது எப்படி என்ற புத்தகம். அவளுடைய தற்கொலை எண்ணம் அவள் அடிக்கோடிட்டு வைத்திருந்த வரிகளைச் சுட்டியது. சிறு வயதிலிருந்தே எல்லாமே கிடைத்ததாலோ என்னவோ எனக்கு தற்கொலை பற்றி பெரிதாக அபிப்ராயம் இல்லை. ஆனால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தியைப் படிக்கும் போதெல்லாம் சில நாட்கள் அது மனதை சங்கடப்படுத்திவிடும். ஆனால் என் வந்தனா தொடர்பாக அதில் எனக்கு ஈடுபாடு வந்தது.

அவளிடம் நேரில் இது பற்றி கேட்கவும் பயம். மனோதத்துவம் பயின்ற என் நண்பர் ஒருவரிடம் இது குறித்து விவாதித்ததில் அவர், வந்தனா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளாயிருக்க வேண்டும் என்ற அவரின் சந்தேகத்தைச் சொன்னார். நான் என் முதல் காதலை, காதலியை இழக்க விரும்பவில்லை. அவளது சிந்தனையை அதிரடியாய் மாற்றலாம் என்று தோன்றியது.

அன்றைய மழை நாளான சனியன்று வந்தனாவின் வீட்டிற்கு அவள் அழைக்காமலேயே போனேன். அவள் வீடு கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமில்லை. அழகான பெண்களுக்கு அட்ரஸ் தேவையில்லை போலும், எல்லோரும் அவள் வீட்டு விலாசம் சொன்னார்கள். கதவை தட்டி பத்து நிமிடங்களுக்குப் பின் தான் திறந்தாள். கண்களில் அதீத சோர்வு, தூக்கம், கனவில் மிதப்பது போல் இருந்தாள். அவளின் கோபம் எல்லாம் காணாமல் போயிருந்தது. வாங்க எங்க இந்தப் பக்கம் என்றாள்? ஆ என்று கத்தினேன், என்னாச்சு என்று பதறினாள், இல்ல என்ன நானே கிள்ளிப்பாத்தேன் நீங்களா இது நம்பமுடியலை என்றேன். சற்றே சிரித்தவள் இல்ல நாளைக்கோ, இன்னிக்கோ சாகப்போறோம் எதுக்கு உங்களோட கோபத்தை சுமந்துக்கிட்டு சாகணும் என்று உளறினாள். காபி கொடுத்தாள், திடீரென சரி சரி கிளம்புங்க, நான் ஆம்பளைங்களையெல்லாம் என் ஃப்ளாட்டுக்குள்ள விட்டதே இல்லை எனக் கூறி என்னைக் கட்டாயமாக வெளியில் தள்ள எத்தனித்தாள் அவள் செருகும் கண்களும், குழறும் பேச்சும் வித்தியாசமாய் பட சட்டென்று அவளை தாவிப்பிடித்து, வெளியில் நின்ற என் காருக்கு அவள் கத்த கத்த இழுத்து வந்தேன். தெருவே கூடிவிட்டது அவள் போட்ட சத்தத்தில். நான் ஏதோ அவளைக் கடத்துவது போல் கதறினாள், ஏய் ஏதோ ஆபிசில் அவளோடு வேலை பார்க்குறன்னு சொன்னாதால அவ வீட்டைக் காண்பிச்சேன் நீ என்னடான்னா அவளக் கடத்தறியா என்று என்னை அடிக்க வந்தவர்களை அவள் தடுக்கவில்லை. மாறாக விட்றா, விட்றா என்று என்னைப் பார்த்துக் கத்தினாள்.


அவள் விஷம் சாப்பிட்டிருக்கா, சாகட்டுன்னு விட்டிருவா? என்று கூட்டத்தைப் பார்த்து கத்தினேன். உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா தாராளாமா யாரோ நாலு பேர் என் காருல வாங்க என்று ஆண், பெண் என மூன்று பேரை ஏற்றிக்கொண்டு, என் பேமிலி டாக்டரிடம் அவளைக் கொண்டு சேர்த்தேன். கண் விழித்து டாக்டரைப் பார்த்து கண்டபடி திட்டினாள். அழகான பெண்கள் கெட்ட வார்த்தைகளையும் பிரயோகிப்பர்கள் என வந்தனாவைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். டாக்டரே சற்று மிரண்டு தான் போனார்.

இரண்டு நாளாக கையில் கிடைத்தவற்றைத் தூக்கிப்போட்டு உடைத்து அதகளம் பண்ணினாள். ஆஸ்பத்திரியே ரெண்டுபட்டது. அங்கேயே உள்ள மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்றேன். அவர் அவளை பொறுமையாக அணுகினார். வந்தனாவை டாக்டர் தன் அணுகுமுறையால் பேசவைத்தார், அவரிடம் அவள் குடும்பத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினாள். என் அப்பாவிற்கு கவர்மெண்ட்ல நல்ல வேலை, கை நிறைய சம்பளம். பார்க்க சுமாராத்தான் இருப்பார். பெயர் சிவராமகிருஷ்ணன்.

அவருடைய வேலைக்காகவே ரொம்பவும் அழகான என் அம்மாவை அவருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்களாம், அம்மாவின் அப்பாவுக்கு மும்பைல பிசினஸ் அங்கயே செட்டிலானவுங்க, தமிழ்நாட்டு மாப்பிள்ளை வேணும்னு அப்பவே எங்க அம்மாவுக்கு 50 பவுன் நகை போட்டாங்களாம். ஆனால் என் அப்பாவுக்கு நானும் என் அக்கா, அண்ணா பிறந்த பிறகு அம்மா சலிச்சுட்டாங்க. அவருக்கு நிறைய ப்ரண்ட்ஸ் அவங்களோட சுத்திட்டு நைட் லேட்டாத்தான்¢ வீட்டிற்கே வருவாரு. எங்களை ஹாஸ்டல்ல சேர்த்தாங்க.

அம்மாவுக்கு தனிமையே மிகப்பெரிய எதிரியாயிருச்சு, சரியா தமிழ் தெரியாததால அம்மா பக்கத்துல யார் கூடவும் பேச மாட்டாங்க. அப்பாவும் வெளியில சுத்தறதால, பெரிய வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்து அவங்களுக்கு டிப்ரஷன் வந்திருச்சு, இப்ப மாதிரி அதுவும் ஒரு வியாதிதான் காய்ச்சல் தலைவலி மாதிரின்னு சொல்ல அப்ப யாரும் இல்ல, அப்பதான் அப்பா அத சரி பண்ணவேண்டி, பக்கத்து சிட்டில இருக்கற ஒரு மனநல டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அடிக்கடி போக வர அந்த டாக்டருக்கும் எங்கம்மாவுக்கும் பழக்கம் ஆயிருச்சு, அம்மானால அவர மறக்க முடியல.

அம்மாவோட வியாதி அப்பாவை பாதிக்கல அவரு வழக்கம் போல லேட்டா வரவும் அம்மா அடிக்கடி அந்த ஆளைப்¢ பார்க்க அங்க போக ஆரம்பிச்சாங்க. ஒரு நாள் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சு போக அவரு பயங்கரமா அடிச்சு, அம்மாவை வீட்டுல அடைச்சு வெச்சுட்டாரு.
அம்மா எப்படியோ தப்பிச்சு அவர போய் பாத்திருக்காங்க. அப்பாவால அம்மாவைத் தடுக்கவும் முடியல, அவுங்களுக்காக டைம் ஒதுக்கவுமில்லை. அம்மாவைக் கூப்பிட்டு அவங்க கொண்டு வந்த 50 பவுன் நகை, பணம் கொஞ்சம் கொடுத்து வெளியில விரட்டிட்டாரு. அவுங்க எங்க போவாங்க, அந்த டாக்டர் கிட்டப் போய் நின்னாங்க. அவரும் அவங்களை ஏத்துக்கிட்டு தனியா குடித்தனம் வெச்சுருக்காரு. அம்மாகிட்ட இருந்த நகை, பணம் எல்லாமே செலவான பின்னால அவங்களை அந்தாள்¢ திரும்பிக்கூட பார்க்கல.

வந்தனா திடீரென டாக்டரைப் பார்த்து நீங்கள்ளாம் மனுசங்கதானா? நீங்கள்ளாம் எம்.பி.பி.எஸ் படிச்ச ரெப்ரசன்டேடிவ்ஸ், ஒரு கம்பெனியோட பிராடக்ட்டை கமிஷன் வாங்கிட்டு சிபாரிசு பண்றது. கமிஷன் குடுக்கற ஸ்கேன் சென்டர்க்கு பேஷண்டை அனுப்பறது. ஒண்ணுமே இல்லாம ஒம்பது ஸ்கேன் எடுக்கச்சொல்றது. வசூல்ராஜான்னு படம் எடுத்தா மட்டும் வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வர்றது. தனியார் ஆஸ்பத்திரியே யாருமே வெக்கக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரணும், இல்ல அத்தனை தனியார் ஆஸ்பத்திரிக்கும் ஃபீஸ் வாங்கறதுல ஒரு ரெகுலேஷன் கொண்டு வரணும், பிக்ஸ்டா எல்லோருக்கும் ஒரே ரூல்ஸ் கொண்டு வரணும். அப்பதான் நீங்கள்ளாம் திருந்துவீங்க என்ற கத்தினாள்.

ஒரு மருந்தால அதிக கெடுதல் வந்தாக்கூட கமிஷன் வாங்கிட்டு அதையே ரெகமண்ட் பண்றீங்க, ஒரு டைம் நல்லதுன்னு சொல்லி நீங்க எழுதிக் கொடுக்கறதை நீங்களே வேண்டாம் இதைவிட நல்லதுன்னு வேற மருந்தை கொடுக்கறது. இது எல்லாம் கமிஷன் பண்ற வேலை தான. உங்களையெல்லாம் ஃப்ரீ சர்வீஸ் செய்யச் சொல்லலை, மனசாட்சிப்படி நடந்துக்கத்தான் சொல்றேன். என்றவளை இடைமறித்த டாக்டர் வந்தனாவிடம் எல்லோரும் அப்படியில்லம்மா, நல்லவங்களும் எத்தனையோ பேரு இருக்காங்க என்றார்.

இருக்கலாம் ஆனா நூத்துக்கு 99.9மூ நான் சொன்ன மாதிரி ஆளுங்க தானே என்றாள். அதற்கும் அவர் ஆமாம்மா நீ சொன்னது தான் சரி என்றார் அமைதியாக, சட்டென்று பேச்சை மாத்த முயன்ற அவர் ஆமா உங்கம்மா பேரு மீனா தானே என்றார், உடனே அவள் முகம் வியப்பில் ஆழ்ந்தது, சட்டென அவரை முறைத்தாள் உங்களுக்கு எப்படித் தெரியும் என உக்கிரமாய் அவரைப் பார்த்து முறைத்தாள். சொல்லும்மா நான் கேட்ட கேள்விக்கு நீ முதல்ல பதில் சொல்லு என்றார் டாக்டர். ஆமா உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேட்டேன்ல என்றாள் மறுபடியும். உங்கம்மாவ ஏமாத்தின அந்த ஆளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு நீ தீர்மானிச்சிருக்க என்றார்.


எங்கம்மாவை அவன் ஏமாத்தின பிறகு அம்மா திரும்ப அப்பா கிட்டத் தான் வந்திருக்காங்க. அவரும் ஏத்துக்கலை, உடனே மும்பைக்கு பாட்டி வீட்டுக்கு போயிருக்காங்க. அங்க ரெண்டு பேரு ஆண்கள் இருக்காங்களே உங்கள மாதிரி தாத்தான்னும், மாமான்னும் அவங்களும் அவங்களை அடிச்சு விரட்டியிருக்காங்க அங்கேயே ரெண்டு வாரமா பைத்தியம் மாதிரி திரிஞ்சிருக்காங்க. இந்த விஷயமெல்லாம் என் அப்பா சொன்னது தான். இதே தப்ப என் அப்பா செஞ்சிருந்தா என் அம்மா அவர மன்னிச்சு ஏத்திக்கிட்டிருப்பாங்க.

உங்கம்மா விபசார விடுதில இருக்காங்க சுயநினைவில்லாத நிலையில அந்த தொழிலை செய்யறாங்கன்னு யாராவது உங்களைப் பார்த்து சொன்னா உங்க மனசு எப்படியிருக்கும் சார் ? அந்த நிலைமையைத் தான் பாம்பேல நான் சந்திச்சேன். அங்கயும் போனேன் சார் உங்களைவிட மனசாட்சியுள்ள ஆளுங்க அங்க அதிகம் தெரியுமா ? அவங்க தான் அம்மா அங்கிருந்து தப்பிப் போனதா சொன்னாங்க.

ஏன் சார் உங்கள மாதிரி ஆம்பளைகளுக்கெல்லாம் ஒரு நீதி பொம்பளைக்கு ஒரு நீதியா, ஒரு ஆம்பளை இதே தப்பை பண்ணிட்டு வந்தான்னா அவன் பொண்டாட்டியோட அருமையை தெரிஞ்சு திருந்திட்டாம்பாங்க பொண்ணா இருந்தா இப்படித்தான் விரட்டுவானுங்க, என் அண்ணன் அவன் பெரிய இவன் அவனும் அம்மாவைப் பாத்தா நான் அடிச்சே கொன்னுருவேன்னு தன்னோட மேதாவித்தனத்தை காட்டினான். என் அப்பாவை, அண்ணனை, தாத்தா, மாமாவை அத்தனை ஆம்பளைங்களையும் நிக்க வெச்சு சுட்டுத்தள்ளணும் சார் என்றாள்.

என் அம்மா இந்த நிலைமைக்குக் கொண்டு போன எங்கப்பன் இருக்கானே இன்னமும் அதே மாதிரிதான் திரியறான், எப்படிப்பட்ட பேரோட தெரியுமா? பொண்டாட்டி ஓடிப் போயிட்டாக்கூட குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையைத் தியாகம் பண்ணிண தியாகிப்பட்டத்தோட 12 மணிக்கு வீட்டுக்கு வர்ர ஒரு பொறுக்கியா.

இது என்னோட நாலாவது ஊர், அம்மாவ இங்க பாத்தேன், அங்க பாத்தேன்னு ஒவ்வொருத்தரும் சொன்ன ஊருக்கெல்லாம் சுத்தியலைஞ்சேன். கடைசியா அந்த டாக்டர் இங்க இருக்கறதா கேள்விப்பட்டு இங்க வந்தேன், அவனக் கொலை பண்ணணும்னு தோணும், அது மாதிரியெல்லாம் சினிமால தான் நடக்கும், குறைஞ்சபட்சம் அவன தலைகுனிய வைக்கணும், அவமானப்படுத்தணும்னு தான் இங்க வந்தேன். அவன என்னால கண்டுபிடிக்க முடியல, அம்மாவையும் கண்டுபிடிக்க முடியல, அதனால தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவுக்கு வந்தேன். அதையும் இவன் கெடுத்தான் என்றாள் என்னைப் பார்த்து முறைத்தபடி.

திடீரென நினைவு வந்தாற்போல் டாக்டர் எங்கம்மாவை உங்களுக்கு எப்படித் தெரியும் என்றாள். சரிம்மா அந்த டாக்டர் பேரென்ன என்றார். அவன் பேரா ராம்மோகன் என்றாள். ராம்மோகன் தாம்மா என்றார் அவர். உங்கம்மாவை எனக்கு நல்லாத் தெரியும். ராம் என் ஃப்ரண்ட் தான், உங்கம்மாவ அவன் கிளினிக்ல பார்த்திருக்கேன். உங்கம்மா அவன விட்டுப் போன பிறகு, அவன் குடும்பத்தோட திருப்பதி போயிருந்தான், அப்ப ஒரு ஆக்சிடெண்ட்ல அவன் மொத்த குடும்பமே செத்துருச்சு அவனத் தவிர. அத நேரில பாத்த அதிர்ச்சியில அவனுக்கு மனநிலை சரியில்லாம கொஞ்ச நாள் அலைஞ்சான். நானும் கொஞ்ச நாள் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன். ஒரு நாள் காணாம போயிட்டான். ஒரு நாள் டிரெய்னல அடிபட்டு செத்துட்டான்னு அடையாளம் காட்ட வரச்சொன்னங்க நான் தான் போய் அடையாளம் காட்டினேன்¢.

சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்த வந்தனா, அவனுக்கு கடவுள் சரியான தண்டனை தான் கொடுத்திருக்காரு தேங்க் காட் என்று கையுயர்த்தி காற்றுக்கு முத்தமிட்டாள்¢. முதல்ல சங்கருக்கு நன்றி சொல்லும்மா, அவரு உன்னை இங்க கூட்டிட்டு வராம இருந்திருந்தா இந்த சந்தோஷமான நியூஸ் உனக்கு கிடைச்சிருக்காதில்லையா, சங்கடத்தோடயே செத்திருப்ப இல்லயா? எல்லா ஆண்களும் அந்த டாக்டர் போலவும் உன் அப்பா போலவும் இல்லம்மா, நல்லவங்களும் இருக்காங்க, பேசாம இந்தப்பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தைகளை பெத்துக்கிட்டு ஒரு நல்ல அம்மா, அப்பாவா நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்து காமிங்க உன் அம்மாவும் அப்பாவும் உனக்கு கொடுக்காததை நீங்க உங்க குழந்தைகளுக்கு கொடுங்க. உங்களால முடிஞ்சா இந்த மாதிரியான செயல்களுக்கு எதிராப் போராடுங்க, மனசுக்கும் நிம்மதி கிடைக்கும். உன் அம்மாவும் திரும்ப கிடைப்பாங்கன்னு நம்பிக்கையோட பேப்பர்ல விளம்பரம் கொடுத்து தேடுங்க என்றார். வந்தனா என் மனைவியானது இப்படித்தான்.

ஒரு அலுவலக விஷயமாய் மும்பை செல்லும் வந்தனாவை வழியனுப்பிவிட்டு வந்த போது அங்கு வந்தனாவிற்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டரை தற்செயலாய் சந்திக்க நேரிட்டது. அவர் ஹாய் சங்கர், ஹவ் ஈஸ் வந்தனா, என் ஃப்ரண்ட் டாக்டர் ராம்மோகன்¢, சைக்கிட்யாட்ரிஸ்ட் லண்டன்ல செட்டிலாகி பதினஞ்சு வருஷமாச்சு, ஒரு கான்ப்ரன்சிற்காக இங்க வந்துட்டுப்போறான் அவன வழியனுப்ப வந்தேன் என்றவரை நான் ஆச்சரியமாய் பார்க்க யெஸ் மை பாய் பொய்கள் அழகானவை, உன் காதலைப் போல என்றார்.

எழுதியவர் : ரக்ஷனா (19-Aug-17, 4:31 pm)
பார்வை : 518

மேலே