ஆவின் குரல்

வல்லமை இதழ் நடத்திய படக்கவிதைப்போட்டியில்
கொடுத்த நிழற்படத்திற்கு....நான்
எழுதிய தலைப்பும் கவிதையும்..
================================================

ஆவின் குரல்..!
================================================

நஞ்சையும் புஞ்சையும் நான்கு போகமும்..
……..நலமாய் விளைந்திட்ட நன்னிலம் தான்!
தஞ்சைத் தரணியென்று போற்றிப் புகழ்ந்த
……..தாரணி அறிந்த நெற்களஞ்சிய நகரம்தான்!
வஞ்சகர் கைக் குளிப்போது அடைபட்டே..
……..வயல் நிலமெல்லாம் பாழ்பட்டுப் போனது!
தஞ்சமடைந்து தாழ்கிறோம் தரணியிலே இன்று..
……..பஞ்ச முண்டானதால்…பச்சைப் புல்லுக்கே.!

விண்ணை முட்டும் வானுயர் கோபுரம்தனை..
……..வியந்து மனிதர்கள் மட்டுமே நோக்கமுடியும்.!
பண்ணை நிலமுழுதும் பங்களாக்கள் ஆனது..
……..பச்சை வயல்களெலாம் சாலைகள் ஆனதே.!
கண்ணை முட்டும் கண்ணீர்க் காட்சியாக..
……..கழினியும் காடுமெங்கே காணாமல் போனது?!
மண்மறைக்கும் தார்ச்சாலை யெங்கும் குப்பை..
……..மலையால் பச்சைப் புல்லுக்குக் கூடப்பஞ்சம்.!

ஆறில்லை என்றாகிப் போனது எங்கும்..
……..அனைத்தும் அறிவியல் ஆன பின்புதான்.!
சோறில்லை என்றாகிப் போனது எங்கும்..
……..நீரில்லை நிலத்தடியில் என்றாகிப் போனதாலே.!
பாரிலிலை இதுபோல் கொடுமையெனப்…பச்சை
……..பசேலென இருந்த வயல்வெளி யழித்தசெயல்.!
ஊரிலில்லை பசுமைப் புல்வெளி இனிவாயில்லா..
……..உயிர்களுக்குப் பசித்தால் குப்பைதான் உணவு.!

கோவின் ஆட்சியில் ஆவுக்கும் நிலத்துக்கும்..
……..கோவிலுக்கும்…குந்தக மென்றுமில்லை மகனே.!
நாவினை யடக்கி நாங்கள் இளைத்து விட்டோம்..
……..நற்செயலாகப் பாலைக் கொடுத்தே பழகிவந்தோம்.!
ஆவின் பசிக்கு அறுகம்புல்லாவது கிடைக்குமா.?
……..அம்மாவெனும் குரலில்..ஆவின்குரல் கேட்கிறதா.?
பாவின் துணையொடு புலவர்களே நீர்..ஆவின்..
……..பசிக்கொரு உபாயமுந்தன் பாட்டிலே கூறுவீரே..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (19-Aug-17, 6:28 pm)
பார்வை : 77

மேலே