மேலுலகம் சென்ற கவிஞன்

கரிபரி திங்கள் திவாகரம் முதலிய
உரியநல் மங்கலச் சொற்கள் கொண்டு
வரிதொறும் வண்டமிழ் வண்ணம் இழைக்கும்
சரிநிகர் சமானம் இல்லதோர் கவிஞன்

உரைத்து வருணனை செய்தே மங்கையர்
நிரைத்து அவரழகினை நெடிதாய் பாடுவன்
அஞ்சனம் தீட்டிய கண்களைப் பெரிதாய்
வஞ்சனை இன்றி இதழ்களை குவித்ததாய்

கன்னங் கதுப்புடன் களங்கமில் கமலமாய்
சின்னஞ் சிறுத்த இடையது உடுக்கையாய்
பன்னிடும் ஓவியந் தனுக்கொரு வரையாய்
பின்னிடுங் கூந்தலை விரித்த மேகமாய்

இயற்கையின் ஆன்மா அதனைச் சீண்டியும்
செயற்கை ஓவியக் கவிதையாம் அதற்கு
சூரிய ஒளியினைத் தீண்டியும் தீட்டியும்
ஆரியப் பெண்ணெனக் காரணம் கூறுவான்.

சிற்பியிற் பெரிய சிந்தனைச் சிற்பியவன்
முற்பகல் செய்த வினையின் பயனாய்
அற்ப ஆயுளில் மேலுலகம் சென்றனன்
அற்புத உலகது என்றே கண்டனன்.

பேதம் இன்றியும் பெருமையும் இன்றியும்
தேவ தூதர்கள் சூழ்ந்த அவ்விடத்தினில்
வேதம் பயின்றிடா வித்தகன் அவனோ
சேதம் செய்தனன் தன்கை தூரிகையால்

தூதர்தம் கண்களை மானென மீனென
ஊதிப் பெருக்கியே வருணனை செய்தவன்
கன்னமும் இதழ்களும் வட்டம் என்றனன்
சின்ன தொரு ஒளிவட்டமும் பெற்றனன்.

வாயுவு மனமுங் கடந்த மயக்கத்தில்
தூய அறிவுடைத் தூல உடம்பினர்
சேயும் பொருளென இயற்கை அமைந்திட
ஆயும் பொய் மாயை ஆவியானரே

தா. ஜோ. ஜூலியஸ்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (22-Aug-17, 12:42 pm)
பார்வை : 67

மேலே