எனக்கு உன்னை

எனக்கே என்னைத் தெரியாது - இதில்
எப்படி உன்னை நானறிவேன் ?
மனத்தை அடக்கத் தெரியாது - உன்
மாநிழல் எந்த நாளடைவேன் ?

இருளுக்கும் பகலுக்கும் பேதமுண்டு - என்
இருவிழியில் எங்கிலும் போதையுண்டு
பொருளுக்கு வாடிடும் கவிஞனுண்டு - ஒரு
பொலிவுக்குப் பாடிடும் குயிலுமுண்டு !
அருளுக்கு நின்பதம் தேடுகிறேன் - என்
ஆன்மாவின் சத்தத்தில் பாடுகிறேன்
தெருவுக்குள் வாழ்கின்ற தேரையைய்யா - என்
தேவைக்குக் கேட்பதும் யாரையையா ?

பொழுதுக்குத் தூக்கங்கள் தொடுவதில்லை - எனைப்
பொறையென்னும் கைவந்து தடுப்பதில்லை
அழுதற்கும் வழியின்றிப் பாடுகின்றேன் - என்
அவமானக் காயத்தில் கூடுகின்றேன் !
எழுதற்குத் தடியொன்று வேண்டுமென்றே - நான்
எப்போதும் நினைத்திங்கு வீழுகின்றேன்
கழுத்துக்கு மேல்பாரம் ஏறியதால் - ஒரு
கணம்கூட நிமிராமல் வாடுகின்றேன் !

என்பேச்சு மூச்செலாம் யார்தந்தது - தாய்
எனக்கிந்த புவிவாழ்வை ஏன்தந்தனள்
என்றெல்லாம் எண்ணிடக் கதறுகின்றேன் - என்
எழுத்தோடு முணர்வில்லை பதறுகின்றேன்
துன்பத்தில் இன்பத்தைக் கண்டகம்பன் - சொல்
துவளாமல் நாள்தோறும் ஓதுகின்றேன்
அன்பிற்கு நானேங்கி வாழுகின்றேன் - என்
அடிவாழும் நிழல்போலத் தாழுகின்றேன் !

ஓயாமல் உருண்டோடும் நாழிகைகள் - என்
ஒழுக்கத்தைக் குறிபார்க்கும் தோழிகைகள்
சாயாமல் சரியாமல் வாழுதற்கே - பல
சமயத்தில் எதிர்பார்க்கும் வேஷநெஞ்சம் !
வாயாடும் கவிதைமழை என்றபோதும் - அதை
வாசிக்க ஆளற்ற நண்பர்சுற்றம்
தீயாடும் விழியென்று வாழுகின்றேன் - இத்
தீவாழ்வு முடிந்தோட வேண்டுகின்றேன் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:27 am)
பார்வை : 49

மேலே