ஒரு காதல் கதையும் ஒரு கோப்பை தேநீரும்

....ஒரு காதல் கதையும்
ஒரு கோப்பை தேநீரும்....


அந்த டீ ஸ்டாலில் அவளது வருகைக்காய் காத்துக் கொண்டிருந்தான் ஆதித்தியா...அவனது கண்கள் இரண்டும் வாசலை நோக்கியவாறே இருந்தன..நகர்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மணித்துளிகளும் அவளை எதிர்நோக்கியதாகவே இருந்தது அவனுக்கு..

பெண் பார்க்கும் சடங்கெல்லாம் அவனுக்கு பிடிக்காத காரணத்தாலேயே அந்த டீ ஸ்டாலில் அவளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை பண்ணியிருந்தார்கள் அவனது பெற்றோர்கள்...அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்து வந்து அவன் வேலையில் சேர்ந்ததுமே அவனது பெற்றோர்கள் அவனுக்கான வரனைத் தேடத் தொடங்கிவிட்டார்கள்...அப்படி அவர்கள் தேடியதில் அவனுக்கென முடிவு செய்யப்பட்டவள்தான் ஆராதனா..அவளுக்காகத்தான் அவன் இப்போது காத்துக்கொண்டிருக்கிறான்...

சிந்தனைக்குள் மூழ்கியிருந்தவனை அவளது குரல் தட்டியெழுப்பியது...

"ஹலோ மிஸ்டர் ஆதித்தியா..."

அருகில் அவள் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தவன்,தன்னருகே சேலையில் அழகோவியமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தவளேயே சிறிது நேரம் அப்படியே கண் அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்...மீண்டும் அவளது குரலிலேயே சுயநினைவிற்கு வந்தான்..

"ஹலோ சேர்...என்ன நின்னுகிட்டே தூங்கியாச்சா??.."

அவளது கேள்வியில் அசடு வழிய...அந்த சூழ்நிலையை சிரித்தே மழுப்பியவன்..,

"ஹலோ மிஸ் ஆராதனா...சொரி...உட்காருங்க ப்ளீஸ்.."

"அப்பாடா இப்போயாச்சும் என்னை இருக்க சொல்லனும்னு தோனிச்சே...தாங் யூ மிஸ்டர் ஆதித்தியா..."என்றவாறே அவன் எதிரே அமர்ந்து கொண்டாள்...

"ஹா...ஹா.....நல்லாத்தான் கதைக்குறீங்க மிஸ் ஆராதனா.."

"ஓஓஓ....அப்படியா..?"

"ம்ம் அப்படி அப்படித்தான்...ஓகே என்ன சாப்பிடுறீங்க.."

"ம்ம்....சாப்பாடுன்னு என்ன தந்தாலுமே சாப்பிடுவன்தான்...பட் இப்போதைக்கு டீ போதும்..."

"அட அப்போ ஓகே...என்றவாறே லேசாக சிரித்தவன்,வெயிட்டரை அழைத்து இரண்டு டீ என சொல்லிவிட்டு அவளுடனான உரையாடலைத் தொடர்ந்தான்...

"ம்ம் அப்புறம்...??"

"அப்புறம்....அப்புறம் என்று அவள் இழுத்துக் கொண்டிருக்கவே அவர்கள் ஓடர் பண்ணிய டீயும் வந்து சேர்ந்தது...

அவளது டீ கப்பை அவள் பக்கமாய் நகர்த்தி வைத்தவன்,

"என்ன மேடம் வந்ததும் பட்டாசு மாதிரி வெடிச்சீங்க...இப்போ என்ன இழு இழுன்னு இழுக்குறீங்க...?"

"இல்லை அது வந்து...உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும்...ஆனால் அதை எப்படி சொல்றன்னுதான் தெரியல.."

"பரவால எதுவா இருந்தாலும் நேரடியாவே சொல்லுங்க ஆராதனா..."

"ம்ம்...ஓகே..நீங்க இந்த கோப்பை தேநீரை குடிச்சு முடிக்கிறதுக்குள்ள என்னோட காதல் கதையை சொல்லிடலாம்னு நினைக்கிறேன்..சொல்லவா..??

அவள் ஒரு விசயம் என்று ஆரம்பிக்கும் போதே உள்ளூரக் கொஞ்சம் பயந்தவன்...அவள் காதல் கதை என்றதும் முழுவதுமாகவே சோர்ந்து போனான்...ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அவளிடம் சரியென்று சொன்னான்...

"..ம்ம்...சரி சொல்லுங்க..."என்றவாறே அவனுக்கான தேநீரை எடுத்து பருக அரம்பித்தான்...அவளும் அவளது காதல் கதையைச் சொல்லத் தொடங்கினாள்...

"அவனை நாலு வருசத்திற்கு முன்னாடி முதன் முதலா என் ப்ரண்ட் வீட்டைதான் பார்த்தேன்...என் ப்ரண்டோட அண்ணாவோட க்ளோஸ் ப்ரண்ட்தான் அவன்...நான் அப்போ முதல் வருடம் பி.கொம் படிச்சிட்டு இருந்தேன்...அவன் இறுதி வருடம் இஞ்சினியரிங் படிச்சிட்டு இருந்தான்...அவனோட ப்ரொஜெக்ட் சம்மந்தமா அவன் அங்க டெய்லி வந்திட்டு இருந்தான்...அவனைப் பார்க்கிறதுக்காகவே நானும் ஏதாவது காரணத்தை வைச்சு என் ப்ரண்ட் வீட்டுக்கு போறதையே வாடிக்கையாக்கிகிட்டேன்...."

"நான் அவனை தினமும் பார்த்திட்டே இருந்தாலும் அவன் என்னை ஒருதடவை கூட நிமிர்ந்து பார்த்ததில்லை...இப்படியே நாட்கள் வாரங்களாகி...வாரங்கள் மாதங்களாகி...ஒரு வருசமும் போனது தெரியாமல் போச்சு...அவனும் அவனோட இஞ்சினியரிங் படிப்பை முடிச்சிட்டு மேற்படிப்பிற்காக பொஃரின் போக தயாராகிட்டான்....அவனை இனிமேல் பார்க்கவே முடியாதுன்னு நினைச்சப்போ மனசுக்கு ரொம்ப கஸ்டமாய் இருந்திச்சு...அப்போ என் காதலை அவன்கிட்ட சொல்றதுக்கு தைரியமும் வரல..."

"படிச்சு முடிச்சு நல்ல வேலைன்னு ஆனதும் அவன்கிட்ட என் காதலை சொல்லனும்னு முடிவு பண்ணேன்....அப்போதையிலிருந்து இந்த நிமிடம் வரைக்கும் அவனுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்...என்னோட காதலோட..."என்று பழைய நினைவுகளுக்குச் சென்று அவளது முதல் காதலைச் சொல்லி முடித்தவள்..அவனை நிமிர்ந்து நோக்கினாள்..

அவள் அவளது காதல் கதையை சொல்லத் தொடங்கியதும் எந்த உணர்வுகளையுமே முகத்தில் காட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தவன்,அவள் சொல்லி முடித்ததும் குடித்து முடித்த தேநீர் கோப்பையை கீழே வைத்துவிட்டு எந்தவித உணர்ச்சியுமில்லாமல் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்...

அவனின் அந்த தோற்றம் அவளை ஏதோ செய்ய..

"என்ன ஒன்னுமே சொல்லல..."

"என்ன சொல்லனும்...உன்னோட காதல் கதையை நீ சொல்லியாச்சு...இப்போ நீ அவன்கிட்ட உன் காதலை சொல்றதுக்காக காத்திட்டு இருக்காய்...இதில நான் சொல்றதுக்கு என்ன இருக்கு..??"

அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வதென்று தெரியாமல் அமைதியாகவே இருந்தாள்...

"இப்படி அமைதியா இருந்தா எப்படி மேடம்...??இந்த கதையில நான்தான் ஹீரோன்னு நினைச்சேன்...இப்போ நான் வில்லன் அவதாரமில்ல எடுக்கனும் போல..."

அவன் சொல்லிய விதத்தில் தன்னை மீறிச் சிரித்தவள்...அவனது கோபப் பார்வையைக் கண்டதும்,

"எனக்கு ஓகேதான்..."என்றவாறே லேசாக புன்னகைத்தாள்..

"என்ன ஓகே..??"

"ம்ம்....நீங்க வில்லனா மாறினாலும் எனக்கு ஓகேன்னு சொன்னேன்....என்னோட ஹீரோ வில்லனா இருந்தாலும் சரி,ஹீரோவா இருந்தாலும் சரி நான் அவனை காதலிச்சிட்டேதான் இருப்பேன்..."

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் குழம்பியவன்,

"ஹேய் என்ன மாத்தி மாத்தி பேசிட்டு இருக்காய்..??"

"இல்லையே கரெக்டான ஆளுகிட்ட கரெக்டாதானே பேசிட்டு இருக்கேன்..."

அவள் அவ்வளவு சொல்லியும் அவளையே ஒரு மார்க்கமாய் அவன் பார்த்துக் கொண்டிருந்ததில் கடுப்பாகியவள்,

"டேய் டியூப்லைட்...என்னோட காதல் கதையோட ஹீரோவே நீதான்டா....அந்த குனிஞ்சதலை நிமிராத ஆண் சிங்கமும் நீதான்....உன்கிட்ட என் காதலை சொல்றதுக்குதான் இவ்வளவு வருசமா காத்திட்டு இருக்கேன்...போதுமா..??"என்று சொல்லி முடித்தவள் ஆறிய டீ என்றும் பார்க்காமல் அதை எடுத்து மடமடவென்று குடித்து முடித்தாள்.....

"சே இவனுக்கு புரிய வைக்கிறதுக்குள்ள என் மொத்த எனேர்ஜியும் குறைஞ்சிடும் போலயே...சரியான மாங்கா மடையன்.."என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்...அவனது அடுத்த கேள்வியில் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்...

"என்னடி சொல்லுற...எனக்கொன்னும் புரியலையே..??.."

"எது டீடீடீடீடீடீடீடீடீயா??

"இப்போ இது ரொம்ப முக்கியம்...நான் உனக்கு டீ வாங்கித் தரும் போது டீ போட்டு கூப்பிடக்கூடாதா..??

அவனது விளக்கத்தை கேட்டவள்..."அடப்பாவி.."என்றவாறே அவனை நோக்கி வாயைப்பிளந்தாள்...

"நீ கூடத்தான் டா போட்டாய் நான் ஏதாவது சொன்னனா...முதல்ல சொல்ல வாறதை சுத்தி வளைக்காம ஒழுங்கா சொல்லு..."

அவன் ஓவர் டீயூப்லைட்டாக இருந்ததில் ஏகத்திற்கும் கடுப்பாகியவள்..,

"அதெல்லாம் சொல்ல முடியாது...போடா.."

"சொல்லலைனா போ....இதுக்கு மேலையும் உன் லவ் ஸ்டோரியைக் கேட்கிறதுக்கு நான் என்ன லூசா..."என்றவாறே எழ முயற்சித்தவனை கையைப் பிடித்து தடுத்தவள்...,

"டேய் இடியட்...நான் அப்போதையிலிருந்து இப்போவரைக்கும் உன்னத்தான்டா காதலிச்சிட்டு இருக்கேன்...உனக்காகத்தான் காத்திட்டும் இருக்கேன்....ஐ லவ் யூடா இடியட் ஆதி...என்று கத்திச் சொன்னவள்..

"இனியும் புரியலைனா போய் அமெரிக்காகாரியையே கட்டிக்கோ போடா மரமண்டை.."என்றவாறே எழ முயற்சித்தவளை அவனது சிரிப்பு தடுத்து நிறுத்தியது...

அவள் சொல்லியதைக் கேட்டு பெரிதாகச் சிரித்தவன் அவளது கையைப் பிடித்தவாறே..

"எனக்கு அமெரிக்காகாரி எல்லாம் வேணாம்...இந்த உள்ளூர்க்காரிதான் வேணும் என்றவாறே அவளைப் பார்த்து கண்ணடித்தான்...

"என்னது.."என்றவாறே கண்ணை முழித்து பார்த்தவளை பார்த்து இன்னும் பெரிதாகச் சிரித்தவன்...,

"பார்த்து பார்த்து....கண்ணு சுளுக்கிக்க போகுது...எப்படி எப்படி நாங்க டியூப்லைட் மரமண்டையா...இப்போ நீங்க யாராம் மேடம்..??"

"டேய் என்னடா சொல்லுறாய்..?"

"ஆஆ...சொல்லுறாங்க சுரக்காய்க்கு உப்பில்லைன்னு..எப்படி ஐயாவோட பெர்வோர்மென்ஸ்.."

"ஹேய் ஒன்னுமே புரியல...ஒழுங்கா சொல்லுடா.."

"இரு வாறன்...என்றவன்...வெயிட்டரை அழைத்து இன்னொரு டீக்கு சொன்னான்..."

"இப்போதானே டீ குடிச்சோம்...மறுபடியும் எதுக்குடா சொல்லுற..?"

"ம்ம்...இப்போ நீ என்னோட காதல் கதையைக் கேட்கனுமே...என்றவாறே லேசாகப் புன்னகைத்தான்...

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டவள்,அவளும் புன்னகைத்தவாறே அவனது காதல் கதையைக் கேட்கத் தயாரானாள்...

அங்கே தேநீர் முடிந்து கொண்டிருந்தது...ஆனால் காதல் தொடர்ந்து கொண்டேயிருந்தது...



இனி எல்லாம் வசந்தமே....

எழுதியவர் : அன்புடன் சகி (23-Aug-17, 4:55 pm)
பார்வை : 881

மேலே