தரவு கொச்சகக் கலிப்பா

தடையை உடைத்துத் தமிழை உயர்த்து -- தரவு கொச்சகக் கலிப்பா

தடைதனையும் உடைத்திடுவாய் தமிழ்தனையும் உயர்த்திடுவாய் .
இடைவிடாது போராடு இச்சகத்தில் நிலைநிறுத்த .
மடைதிறந்த வெள்ளமாக மாறட்டும் தமிழ்மொழியும் .
படைகொண்டு முறியடிப்போம் பரவட்டும் நம்மொழியே !!

அடைமழையே பொழிந்தாலும் அச்சமில்லை தமிழ்மகனே
விடையாக உன்றனுடை வீரம்தான் பதில்சொல்லும் .
உடையாக உணர்வாக உருவாக்கு செந்தமிழை !
தடைபலவும் வந்திடலாம் தயங்காதே உடைத்திடவே !!!

உயர்ந்திடுக பண்பாலே உருவெடுப்பாய் வேங்கையென .
மயக்கங்கள் வேண்டாமே மலர்செய்வாய் பைந்தமிழை .
தயக்கங்கள் காட்டினாலோ தளர்ந்துவிடும் வீரமுமே .
வியக்குமடா உனையெண்ணி விண்ணளவு வெற்றியாலே !!

வீரத்தைப் பறைசாற்றும் விந்தைகளை நீசெய்ய .
பாரத்தை சுமந்திடுவாய் பார்போற்ற வாழ்ந்திடவே !
தீராத வேட்கையுடன் திக்கெட்டும் தமிழ்பரவ
சேராத இடமென்று செந்தமிழும் சொல்லிடுமா !!!

பாரினிலே தமிழ்மொழியே ஆளுதலும் வேண்டுமன்றோ
ஊரினிலும் உலகத்திலும் உன்னதமும் தமிழ்மொழியே !
காரிருளும் சூழ்ந்தாலும் கறைபடியா மொழியன்றோ !
சீரிளமைத் திறத்தாலே சிறப்பாக ஒலித்திடுமே !!

சங்குகொண்டே முழங்கிடுவோம் சந்ததியும் மேம்படவும்
எங்கெங்கும் தமிழொன்றே என்னுயிராம் என்றேநாம் .
சங்கங்கள் பலவமைப்போம் சாதிப்போம் தமிழாலே .
மங்காத பைந்தமிழும் மணக்கட்டும் எவ்விடமும் !!!

உலகெங்கும் பரவிடவும் உடைத்தெறிவாய் தடைகளையும்
பலர்பேசும் மொழியாக பந்தமுடன் மாற்றிடுவாய் !
மலரட்டும் தமிழ்த்தென்றல் மாசற்ற தோட்டத்தில்
உலவுகின்ற மதிகூட உரைத்திடுமே தமிழ்தனையே !!!

பேசுங்கள் எல்லோரும் பேர்சொல்லும் வகைதனிலே
வீசுங்கள் காற்றாகி விடிவெள்ளி தமிழென்றே .
ஆசுகவி இயற்றிடுங்கள் அன்னைமொழி கற்பதற்கே !
காசுநோக்கா நற்கருணை காசினியில் தமிழ்மொழியே !!

வந்திடலாம் பலதடைகள் வருமுன்னே தகர்த்தெறிவாய்.
முந்திச்செல் தமிழாநீ முதல்மொழியும் நமதென்றே .
தந்திடுவாய் செல்வங்கள் தமிழ்க்காக்க நீயுந்தான் .
செந்தமிழும் தரணிதனில் சேர்த்திடுமே செல்வங்கள் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ,
முகவரி :- 50 , சேதுராமன் பிள்ளை காலனி , டிவிஎஸ் . டோல்கேட் , திருச்சி - 20 , 620020
தொடர்புக்கு :- 9443206012

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Aug-17, 1:47 pm)
பார்வை : 84

மேலே