மானுடம் வெல்லுமம்மா....

(என் உயிர் தமிழர்களுக்கு சமர்ப்பணம்)

இரவின் மௌனம் தன்னை விழுங்கிக்கொண்டிருக்க, தனிமையின் கொடுமையை உணர்ந்து கொண்டிருந்தான்,சத்யா. சத்யாவுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களே ஆயின.கர்ப்பவதியாக இருந்த தன் மனைவி மாதங்கியை முதல் நாள் போரில் தொலைத்திருந்தான்.தன் உயிருக்கு உயிரான மனைவியை இழந்து தன் உடமைகளையும் இழந்து தனது உரிமையைக் காக்க தப்பிச்சென்று கொண்டிருந்தான்.
தன் நண்பர்களுடன் தன் ஈழத்தமிழருக்காகத் தன் உயிரையும் விடத் துணிந்து செல்கின்றான்.சத்யா மட்டும் அல்ல,அவனுடனிருந்த ஒவ்வொருவரும் தனது தந்தை,தாய்,சகோதரி,மனைவி என தனது உறவுகளை இழந்து தவித்தனர்,
நேற்றுவரை தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருந்த வாலிபர்களும்,நிகழ்காலத்தையே அறியாத குழந்தைகளும் மரணத்தின் பிடியில் சிக்கி மாய்ந்துகொண்டு இருந்தனர்.மானுடம் மடிந்துகொண்டு இருந்தது.மனிதநேயம் சுருங்கிக்கொண்டு இருந்தது.
சத்யாவின் மனதில் மீதமிருந்தது கோபமும் வெறியும் மட்டுமே.ஒருவழியாக ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமை வந்தடைந்தனர்.
"என்னே கொடுமை!! தமிழர்களுக்குத் தமிழகத்திலேயே அகதிகள் முகாம்!!".
அங்கு தான் சந்தித்தனர் அந்தப் பெரியவரை.இருபது வருடங்களுக்கு முன் சத்யவைப்போலவே முகாமிற்கு வந்தவர் தான் அவர்.துடிப்பான இதயமும்,கொதிப்பான இரத்தமும் கொண்டவரது மனம் இங்கு தான் மக்கள் படும் வேதனைகளைக் கண்டு மனம் நொந்து போராட்டத்தை வெறுத்து வெறுத்து அலுத்துப் போனவர்.
முகாமில் இருந்த தோழர்கள் அனைவரும் இணைந்து இலங்கை ராணுவத்திற்கு எதிராக போரிடத் தயாரானார்கள்.அன்று இரவு புறப்பட்டுச் செல்லத்திட்டமிட்டனர்.அப்பெரியவரோ "சத்யா!! போராட்டம் முறையான வழி அல்ல.நமது உரிமையைக்காக்க எதிர்ப்பு மட்டும் போதாது.நிதானமும் வேண்டும்" என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் இளநெஞ்சங்கள் கேட்கவில்லை.ஆகவே பெரியவரும் அவர்களுடன் செல்லத் தீர்மானித்தார்.
"தமது சொந்த சொத்துக்களைத் தன்முன்னே அபகரித்ததையும் தன் தாய்தந்தையரை தன் கண் முன்னே கொன்றதையும், பிஞ்சிளங்குழந்தைகளைப் பிய்த்து விளையாடியதையும்,தங்கையராக நினைக்க வேண்டிய மகளிரின் பெண்மையை இழிவுபடுத்தியதையும் எவரால் தான் மறக்க முடியும்?"
செல்லும் வழியில் ஒவ்வொரு முறையும் பெரியவர் கூறிய ஒரே வார்த்தை"பொறுமையைக் கடைபிடி".அவரது வயதிற்கு மரியாதையைக் கொடுத்த இளசுகள் அவரது வார்த்தையை மதிக்கவில்லை.
பெரியவருக்குக் காவலாக ஒரு தோழரை விட்டுவிட்டு சத்யனும் நண்பர்களும் போராடச் சென்றுகொண்டிருந்தனர்.காதல் மனைவியுடன் கனவில் நடந்து சென்ற பாதையில் இன்று மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறான் சத்யா.
மனைவியின் நினைவு வரவே சத்யா ஓரிடத்தில் அமர்ந்தான்.திடீரென அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அங்கங்கு வெடிகுண்டுகள் வெடிக்கத்தொடங்கின.தங்களால் இயன்றவரை சத்யனும் தோழர்களும் போராடிக்கொண்டிருந்தனர்.உயிர் பயத்தை விட உணர்வே அவர்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது.
நீண்ட சண்டைக்குப் பிறகு சத்யனும் தோழர்களும் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர்.திடீரென பெரியவரது நினைவு வரவே அங்கு ஓடினான்.அனால் பெரியவரோ தனது இறுதி மூச்சினை சுவாசித்துக் கொண்டிருந்தார்.கலங்கிய சத்யனின் கண்களைத் துடைத்து,நடுங்கிய அவனது கரங்களைப் பிடித்து அவர் கூறிய கடைசி வார்த்தைகள்"பொறுமையை இரு.நமக்கு உரிமையும் வேண்டும்,உறவுகளும் வேண்டும்.மானுடம் நிச்சயம் வெல்லும்,உண்மைக்கு என்றும் அழிவில்லை".

இருபது வருடங்களுக்குப்பின்,
சத்யா ராமேஸ்வரம் முகாமில் காத்திருக்கிறான்."தனக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு பொறுமையை சொல்லிக் கொடுக்க..... மானுடத்தின் வலிமையை சொல்லிக் கொடுக்க......."
"மானுடம் வெல்லுமம்மா....."

எழுதியவர் : Geetha (28-Oct-11, 5:58 pm)
பார்வை : 1140

மேலே