வாழும் தெய்வங்கள்

ஏன்யா, என் மகன் கிட்ட இருந்து எதாவது கடுதாசி வந்ததா?, தபால்காரர் தங்கராசுவிடம் கேட்டு கொண்டிருந்தால் ராமாயி பாட்டி.

போன வாரம் தான பணம் அனுப்பினான் இப்போ வேலை பளு அதிகமா இருக்கும் அதான் கடுதாசி போட மறந்திருப்பான், சொல்லிவிட்டு நகர்ந்தார் தபால்காரர்.

அவரை அழைத்தேன் "அண்ணே ஒரு நிமிஷம்" .

என்னப்பா சங்கர வேலைக்கு விண்ணப்பம் போட்டதுக்கு பதில் வந்திருக்கதானே கேக்க போறே, அவரே முந்திகொண்டார்.

அதில்லனே, வேற ஒன்னு கேக்கணும்.?

என்னப்பா, வேற என்ன கேக்கபோற? தபால்காரர் என்னை பார்த்தார்.

அந்த ராமாயி பாட்டி மகன் டவுன்ல இருந்து மாசம் மாசம் பணம் அனுப்புறான். ஒரு தடவையாவது நேர்ல வந்து பாக்கலாம்ல? இல்லனா ஒரு கடுதாசியவது போடலாம்ல? உங்க கிட்ட அவன் பணம் அனுப்புற விலாசம் இருக்கும்ல அத குடுங்க, கிழவி இப்பவோ அப்போவோனு இருக்கு நானாவது ஒரு கடுதாசி போட்டு அவன வர சொல்லுறேன்.

நான் கேட்டதும் என்னை ஒரு முறை பார்த்தார், "விடு சங்கரா அவன பத்தி பேசி இனி ஒரு பிரயோசனுமும் இல்ல" தங்கராசு அண்ணன் குரலில் ஒரு சோகம் தெரிந்தது,

ஏண்ணே? ஒன்றும் புரியாமல் கேட்டேன்.

"உன் கிட்ட சொல்றதுக்கு என்ன, அந்த கிழவி மகன் டவுன்ல வேலைக்கு போன இடத்துல ஒரு விபத்துல இறந்துட்டான், ஆறு மாசத்துக்கு முன்னாடி தந்தி வந்தது கிழவி கிட்ட சொல்லலாம்னு பாத்தா அது மகன் மேல உசிரா இருக்கு, இந்த செய்திய கேட்டு அது மண்டைய போட்டால்? என்னால ஒரு உசிரு போக வேண்டாம்னு மறைச்சிட்டேன். நான் செய்யிறது என் தொழிலுக்கு துரோகமா? இருந்தாலும், தன மகன் இருக்கான் நம்பிக்கைல இன்னும் கொஞ்ச நாள் வாழட்டும். என் சம்பளத்திலிருந்து கொஞ்ச பணம் அது மகன் அனுப்புற மாதிரி மாச மாசம் குடுதிட்டிருக்கேன், என்னால ஒரு உசிரு வாழுதேனு ஒரு சந்தோசம்." சரிப்பா எனக்கு மணி ஆச்சு நான் வரேன், சொல்லிவிட்டு சென்றவரை கண்களில் நீருடன் பார்த்துகொண்டிருந்தேன்!

"கடவுள் நேரில் வரமாட்டார் ஏதாவது மனித ரூபத்தில் வருவார்" எப்போதோ? யாரோ? சொன்னது நினைவுக்கு வந்தது.

எழுதியவர் : jesse ஷாலோம் (17-Nov-11, 10:22 am)
பார்வை : 1096

மேலே