உண்மைகளைத் தேடுகிறேன் - மாயையும் நிலையாமையும்

இவை இரண்டும் ஒரே பொருளையே தருகின்றன என்ற பரவலான, தவறான கருத்து பல காலமாக நிலவி வருகிறது.

மாயை என்பது முழுக்க முழுக்க பொய்த் தோற்றமாகும். மனப்பிரமை, சுய ஏமாற்ற விருப்பம் ஆகியவையே இப்பிரமையான மனத்தோற்றத்துக்கு அடிகோலுகின்றன. இல்லாத இடத்தில் ஏதாவது ஒரு பொருள் இருப்பதாகக் கருதுவதே மாயையாகும். இதற்குச் சரியான ஆங்கிலப்பதமாக Illusion- ஐக் கூறலாம்.

நிலையாமையானது மாயையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இப்பொழுது பிரத்தியட்சமாகக் காட்சியளித்துப் பின்னர் வேறுபடவோ, அழிந்துபடவோ கூடிய எல்லாக் காரியங்களும் நிலையமைத் தன்மை உடையனவாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு அழகிய இளம்பெண்ணைக் காண்கிறீர்கள்; காதலிக்கிறீர்கள்; மணந்துகொள்கிறீர்கள். நாட்கள் மாதங்களாகின்றன; மாதங்கள் வருடங்களாகின்றன. நீங்கள் பார்த்த அந்த இளம்பெண்ணின் அழகு அங்கே இருக்கப்போவதில்லை. நீங்கள் முத்தமிட்ட முகம் சுருங்கிப் போயிருக்கிறது; திருமண மேடையில் நேராக நின்ற அவள் இப்பொழுது காலத்தால் வளைக்கப்பட்டிருக்கிறாள். அந்த அழகு அங்கே இருந்தது என்பது நிச்சயம். ஆனால் இப்போழுது அது எங்கே? அதாவது அழகு என்ற அந்தக் காரியம் நிலையாமைத் தத்துவத்துக்கு உள்ளடக்கப்படுகிறது. அழகு அழியவில்லை. அந்தப் பெண்ணிடம் இருந்த அழகு இல்லாமற்போய்விட்டது. விரைவில் அந்தப் பெண்ணும் மண்ணுக்குள் மறைந்து விடுவாள். அழகு, பெண் என்ற இரு காரியங்களுமே சில வருடங்களுக்கு முன் இருந்தன. ஆனால் இப்பொழுது அவை இல்லை. அக்காரியங்கள் நிலையாமையின் பாற்பட்டவை. நிலையாமைக்குச் சரியான ஆங்கிலப்பதமாக Vanity-ஐக் குறிப்பிடலாம்.

அனைத்து மதத் தத்துவங்களும் மாயாவாதம் அல்லது நிலையாமைவாதத்தைத் தங்கள் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றாகக் கொண்டுள்ளன.

இறைமறுப்பாளனாகிய நான் நிலையாமைக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்கிறேன். நிலையாமை என்பதைப் பரிணாமவாதக் கோட்பாட்டுடன் சார்புடையதாகக் கொள்ளலாம். நிலையாமையைக் காரணமாகக் கொண்டு தவம் செய்யுங்கள் என்று நான் கூறப்போவது இல்லை. நிலையற்ற இவ்வாழ்வில், மனிதகுலம் நீடித்திருப்பது வரை நிலைக்கும் புகழையே குறிக்கோளாகக் கொண்டு மனிதர்கள் செயல்பட வேண்டும் என்பதே எனது அவா.

மாயாவாதக் கோட்பாடு அடிப்படையிலேயே பிழையானதாகும். இந்திய தத்துவ மரபில் மிகத்தீவிரமாக அக்கோட்பாட்டை முன்னிறுத்தியவர் ஆதிசங்கரர். அவர் கயிற்றரவு உபமானத்தை மாயைக்கு நேராக உபயோகப்படுத்தினார். கயிற்றரவு உபமானம் மாயாவாதக் கோட்பாட்டுக்கு உதவி செய்யப்போவது இல்லை.

கயிற்றைப் பாம்பு என்று நினைக்கும் மனப்பிரமையோடு மாயையை ஒப்பிட்டார் ஆதி சங்கரர். இதனை ஒரு மனத்திரிபு என்று கொள்ளலாமேயொழிய மாயை என்று கருத முடியாது. ஏனென்றால் கயிறு என்ற பொருள் பார்ப்பவர் கண்ணுக்குப் பாம்பாகத் தெரிகிறது. அவர் தெளிவாகப் பார்க்க முற்பட்டால் அந்த மனத்திரிபு நீங்கி விடும். மட்டுமல்லாமல் பாம்பு என்ற தோற்றம் ஏற்பட கயிறு என்ற காரணி உதவுகிறது. ஆனால் மாயைக்குக் காரணிகள் இருக்கக் கூடாது.

கானல் நீரை மாயைத் தோற்றத்துக்கு ஒப்பிடலாம். ஆனால் வெளித்தன்மைக்கான விளக்கங்கள் மட்டுமே அவையிரண்டுக்கும் பொருந்துகின்றன. கானல்நீர் என்ற தோற்றத்துக்கு அடிப்படைக் காரணிகள் உள்ளன. ஆனால் மாயைக்கு அடிப்படைக் காரணிகள் எதுவுமில்லை.

மட்டுமல்லாமல் மாயாவாதக் கோட்பாடு மனித முன்னேற்றத்துக்குத் தேவையற்ற ஒன்று; மனிதனின் அழகான பல உணர்ச்சிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பாரதியார் மாயைத்தத்துவத்தைப் பற்றிப் பேசும்போது கேட்டார், "அப்படியானால் என் எதிரில் நிற்கும் என் அன்புக்குரிய மனைவி ஒரு பொய்த்தோற்றம் என்கிறீர்களா?".

நீங்கள் காண்பதைப் பொய்த்தோற்றம் என்று கூறினால் உண்மை எது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள், "இறையருள் பெற்றவர்கள் அதனை அறிவார்கள்".

இதைக் கேட்கும் போது ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் Danish fairy legends and tales என்ற நூலிற்படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. உடைகள் இல்லாமலிருந்தும் அழகிய உடைகளைக் காணச் சக்தி படைத்தவர்களாகக் கூறி தங்களைத் தாங்களே ஏமாற்றும் வகையினரே இவர்கள். இறையருள் இருந்தால் புரிந்து கொள்ளலாம் என்பார்கள். ஆனால் அவர்களுக்கே அது புரியப் போவதில்லை.
-தொடரும்

எழுதியவர் : (17-Nov-11, 10:01 pm)
பார்வை : 556

சிறந்த கட்டுரைகள்

மேலே