சாட்டை இல்லாத பம்பரம் [சிறுகதை]


வறுமைக்கோ அல்லது பெருமைக்கோ வேலைக்குபோகும் ஆயிரக்கணக்கானோர் மத்தியில்,நட்பிற்காக வேலைக்குப்போனவன் இன்பா,நண்பன் சிவா கொலையுண்ட பிறகு திக்குத்திசை இல்லாமல் தவித்த சிவா குடும்பத்திற்கும்,சிவா அண்ணன் சேகருக்கும், ஒன்பதாவது திசையாய்சென்று நின்றவன் இன்பா,தோட்டத்தில் வாழைக்காய் முற்றும்முன் அறுப்பது முதல்,காளவாயில் ஆட்களுக்கு வேலைசொல்வதிலிருந்து,கூலி கொடுப்பதுவரை,கடன் கொடுத்தவனுக்கு பதில் சொல்வதிலிருந்து,வரவேண்டிய பணத்தை வாய்ஜாலத்தில் வாங்குவதுவரை எல்லாம் இவன்தான்,உண்மையை சொன்னால்,இவன் ஒரு சாட்டைஇல்லாத பம்பரம்.

காலையில் ஐந்துமணிக்கெல்லாம் இன்பாவுக்கான கோழி கூவிவிடும்,அவனது கைபேசியில் அதிகபட்சமானஅழைப்புகள் சேகர் அண்ணன் அழைப்பாகதான் இருக்கும் அன்றுஅதிகாலையிலும் அப்படித்தான் வெகுநேரமாய் ஒலித்துகொண்டிருந்தது, கைபேசியை இன்பா காதருகே எடுத்துவைத்துவிட்டு வாசலுக்கு தண்ணீர்தெளிக்க சென்றுவிட்டாள் அம்மா ,தொந்தரவு தாளாமல்அந்தபோனை எடுத்துதொலைடா என்று கூறி தன்காலால் அவனை உதைத்துவிட்டு தன் தூக்கத்தை தொடர்கிறாள் தங்கை. சலித்துக்கொண்டு போனை எடுத்தால் எதிர்முனையில் சேகர் அண்ணன்,இளநீர் வாங்கிவர சொல்கிறார்,காலி தண்ணீர்டப்பாவை எடுத்துகொண்டு தண்ணீர்தொட்டு தலையைஒதுக்கியபடி வண்டியை உதைக்கும்வேளையில், ஒருவாய் டீ குடிச்சிட்டு போடா என்று சொல்லும் அம்மாவிடம் நீயேகுடின்னுசொல்லிட்டு போய்டுவான,எட்டாயிரம் சம்பாதிக்கிறபுள்ள பத்துமணிக்குத்தான்போறா இருட்டோடபோனாலும் எட்டணாவுக்கு புரயோஜனம் உண்டாடான்னு போலம்பியபடி அந்தடீயையும் வாயிலஊத்திக்குவா அம்மா ...
செவ்விளநீர் ரெண்டுவாங்கிக்கொண்டு அண்ணன்
வீட்டிற்குசென்றால் அண்ணன் செய்தித்தாள் படித்து கொண்டிருப்பார் அது ஒரு பிரபல திராவிட கட்சியின் செய்தித்தாள் ,யார் படித்தாலும் படிக்காட்டியும் அத்தனை செய்தித்தாள்களும் அண்ணன்வீட்டு திண்னையில் படபடத்துக்கொண்டிருக்கும் ,இளநீரை வாங்கி ஒருமடக்கில் குடித்து தீர்த்துவிட்டு சொல்வார், தம்பி கொஞ்சம்
துவர்க்குதுடா நாளைக்கு வழுக்கையாவாங்கியாடா ,அவனுக்கு இளநீரையும் வழுக்கையையும் சம்பந்த படுத்தினாலே அண்ணன் கவுண்டமணி நினைப்புதான் வரும் பொன்முறுவல் சிரிப்பை உதிர்த்துவிட்டு படபடக்கும் செய்தித்தாள்களை அள்ளி
சுருட்டும் வேலையில் நடுஅண்ணியிடமிருந்து ஒருகுரல் அதுல கொஞ்சம் பேப்பர் கொடு இன்பா,பாப்பா ஆயி தொடைக்கணும்,ஐயோ இது புது பேப்பர் என்பான் ,பேப்பர்ல ஏது புதுசு பழசு படிச்சோமா கிழிச்சொமானு இருக்கணும் என்பாள் ,இன்னும் படிக்கலையே
என்பான் இவன்,அதான் தொடைக்க போறேன் லூசு போ போயி வேலயப்பாரு என்று தலையில் தட்டி சிரிப்பாள் ,
செய்தித்தாள்களை வண்டி கவரில் சொருகி காளவாய்க்கு புறப்படும் தருவாயில ,அண்ணன் தலை நிமிர்த்தி கேட்ப்பார் தம்பி இன்னக்கி என்ன லோடுன்னு ,அருண் என்ஜினியருக்கு ஒரு லோடு,சமாதானம் மேஸ்திரிக்கு ரெண்டு லோடு ,ஏற்க்கனவே பணம் கொடுத்த கலீல்பாய்க்கு ஒருலோடு வைக்கனும்னு இன்பா முடிப்பதற்குள் பணம் தந்தவனுக்கெல்லாம் அப்பறம் வைக்கலாம் புதுசா பணம் வரும் இடமாய் பார்த்துவை கட்சி வேலையா இன்னைக்கு கடலூர் போகணும் என்பார் கூடவே, டேய் பணம் வந்ததும் அண்ணிக்கு தெரியாம கட்சி ஆபீசுக்கு எடுத்துடுவா என்பார்.
சூரிய உதயத்திற்கு முன்னமே காளவாய் வேலைக்கான ஆட்கள்,கொல்லை வேலைசெய்யும் ஆட்கள் எல்லாம் இன்பா வருகைக்காக காத்திருப்பார்கள்.லோடுமேன்களை அழைத்து,கற்கள் போகவேண்டிய விலாசம் கொடுத்துவிட்டு, நடவு ஆட்களுக்கு வேலை சொல்லிவிட்டு செய்தித்தாளை எடுத்து பிரிப்பான் முதல் பக்கம் படிக்கு வழக்கம் அவனுக்கு இல்லை கடைசி பக்கம்தான் அவனுக்கு முதல்பக்கம் ஏனென்றால் சினிமா செய்தி கடைசிப்பக்கம்
தானே இருக்கும் ,
கல் அடுக்கும் பெண்கள் அவர்களுக்கு
வாங்கிவந்த டீதன்னிய இந்தா கணக்கு என்று இன்பாவுக்கும் ஒருமடக்கு கொடுப்பார்கள்,அழுக்கான அந்த டம்ப்ளரை கையில் வாங்கியதும் அம்மா கொடுத்த டீயவேணான்னு சொல்லிட்டோமே என்று வருந்தியபடியே வாயில் ஊற்றிக்கொள்வான் , வயத்த
கலக்கி கரும்புக்குள்ள ஒதுங்கும் வேலையில் அண்ணனிடமிருந்து அழைப்பு, சிகரெட் வாங்கியாடாவென்று . நமக்கு டீ குடிச்சா வரும் அவருக்கு சிகரெட் குடிச்சாதான்வரும், அரைபாக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு படிஇறங்கி வந்ததுமே தூக்கு வாளியோட நடுஅண்ணி காத்து நிக்கும். கொல்லையில குண்டு டிரைவர் உழவு
ஓட்டுறாரு இத கொஞ்சம் கொடுத்துட்டுவா இல்லாட்டி அந்தாளு பாதியிலேயே இறங்கி போயிடுவான்னு சொல்லும் . சரின்னு வாங்கிட்டுபோய் பார்த்தா டிரைவர் மரத்தடியில படுத்து தூங்குவாரு, யோவ் வண்டி ஒட்டாம காலயிலையே தூங்குற விளங்குவியாவென்று இன்பா கேட்பதற்கு ,வாயா வா " இது என்ன மூத்திரத்திலா ஓடுது,போபோயி எண்ணெய்வாங்கியா,அரைமனிநேரத்தில வரல துண்டை ஒதறி தோல்லபோட்டுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் என்பார் , எண்ணெய் வாங்கியாறது கஷ்டமா இல்ல நடுஅண்ணிகிட்ட காசு வாங்குறது கஷ்டமான்னு இன்பாவிடம் கேட்டால் காசு வாங்குறதுதான் கஷ்டம் என்பான்.
அண்ணி, எண்ணெய் வாங்க காசுன்னு கேட்பான், அவ்வளவுதான் எனக்கு என்ன ஒன்பதுகையா இருக்குஎன்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் ,இந்தா இந்த ரெண்டு புள்ளையையும் பள்ளிகூடத்தில கொண்டி கெடாசிட்டுவா பணம் கொண்டாந்து வக்கிறேன்னு சொல்லும் ,முறைப்பதையும் சிரிப்பதையும் தவிர ஒன்னும் செய்யமுடியாது ,போயிட்டு
வந்தா காசோட காத்திருக்கும் காச வாங்கிகிட்டு வண்டிய திருப்புவதற்குள்ள இன்னொரு குரல் , சின்னஅண்ணி ஒரு துண்டு சீட்டை கொடுத்து இத பிரிக்காம மெடிக்கல் சிவாகிட்ட கொடு ஒரு பார்சல் தரும் கோவிச்சிக்காம கொஞ்சம் வாங்கிவரசொல்லும், சீட்ட பிரிக்காதன்னு சொன்னதுமே பாதி புரிஞ்சிடுச்சி ,பார்சல்ன்னு சொன்னதும் மீதியும் புரிஞ்சி போச்சி தலைஎழுத்து என்று
புலம்பியபடி புறப்படும்தருவாயில் மீண்டும் ஒரு குரல் யாரென்றுபார்த்தால்,பெரியஅண்ணி இன்பா இந்த மளிகை சீட்டை நாடார் கடையில் கொடுத்துட்டுபோ சாயங்காலம் போய் வாங்கியாந்தா போதும்ன்னு சொல்லும்,முறைத்தபடி என்னாஅண்ணி என்று
கேட்டால் போதும்,சரி வேணாம்குடு நான் சொன்னா செய்வியா அவுங்க எதாச்சு சொன்னால் மறுக்கமாட்ட என்று மூஞ்சியை தூக்கிவைத்துகொண்டு புலம்பும் அதுவுமில்லாமல் அவனுக்கு பெரியவங்க மீதும் சின்னவங்க மீதும் கொஞ்சம் அதிகமான
பாசம் ஏன்னா அவங்க சின்ன வயசுலேயே கணவனை இழந்தவர்கள் இந்த ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரே ஆம்பள சேகர் அண்ணன்தான்,
மளிகை சீட்டை நாடார்கடையில் கொண்டுபோய்
கொடுத்ததும் நாடார் சொல்வார்,இன்பா அம்மா இப்பதான் மளிகை சாமான் வாங்கிட்டு நடந்து போகுதுன்னு நாடார் சொன்னதுமே சங்கோஜத்தில் கூனி குறுகியபடி சொல்வான் ,இது எங்க அண்ணன் வீட்டிற்கு என்று ,டீசல் வாங்கி எடுத்துகொண்டு, சிவாமெடிக்கலில் பார்சலைவாங்கி கொண்டுபோய் கொடுத்துவிட்டு வீட்டுக்கு போய் காலை சாப்பாடு சாப்பிட மணி பதினொன்னு ஆயிடும் ,குளிச்சிட்டு சாப்பிட உட்க்காருவான் அம்மா புலம்பலை ஆரமிக்கும் எட்டுமணிக்கு சுட்ட இட்லி இப்பமணி எண்ணடா ஆவுது? ஏண்டாஇப்டிபண்ற நாய்படாத பாடுபட்டு இந்த ரெண்டாயிரம் கொண்டார இது ஒரு பொழப்பாடா பேசாம சொல்லிட்டு வந்துடு ,மாமா இன்னும் ஆறு மாசத்துல விசா அனுப்புறேன்னு லெட்டர் போட்டிருக்கான் உன்னை அதுக்குல்ல டைலர் வேலை கத்துக்க சொல்றான்,நான் அவனுக்கு என்ன சொல்றது என்றுகேட்க்கும் ,அவரு என் அண்ணமா அவர் சூழ்நிலை சரியில்ல அப்பிடியெல்லாம் பாதியில விட்டுட்டு வரமுடுயாதுன்னு உன் தம்பிகிட்ட சொல்லிடு என்று பாதி சாப்பாட்டோட கை கழுவிட்டு போய்டுவான் ,
வண்டியில் போய்க்கொண்டு இருக்கும்போதே செல் போன் ஒலிக்கும் எடுத்து பார்த்தால் அண்ணன் ,கல்லு போயிடிச்சா தம்பி போயிடுச்சிண்ணே,பணம் வாங்கத்தான் போய்கிட்டு இருக்கேன்,சீக்கிரம் வாகிட்டுவாடா நான் கடை வீதியில் நிற்க்கிறேன் என்பார்,ராஜதுரை மேஸ்திரி கொடுத்த பதினஞ்சாயிரத்த கொண்டுபோய் அண்ணனிடம் கொடுப்பான் கார் கண்ணாடியை இறக்கியபடி எவ்ளோடா இருக்கு ? பதினஞ்சாயிரம், இருக்கு சரிகுடு என்பார்,அண்ணே சாயங்காலம் சம்பளம் போடணும், இந்தா இதவச்சி போடுன்னு ஐயாயிரம் கொடுப்பார் மீதிக்கு எவனாச்சும் மாட்டுவான் பாத்துக்கோ,அப்புறம் மறக்காம மார்கெட்ல கணேசனிடம் மீன் சொல்லியிருக்கேன் வாங்கிட்டுபோய் வீட்ல குடுன்னு சொல்லிட்டு
புறப்பட்டு போய்விடுவார்,மார்கெட்டுக்கு போய் கணேசா அண்ணன்
மீன்சொன்னாராடான்னு கேட்க்கும் இன்பாவிடம் சொன்னாரு ஆனா நாலுபேருக்கு சொல்லியிருக்கார் யார் யாருக்குடா என்று கணேசன் கேட்க்க தெரிலடா போன்பன்னிதான் கேட்கணும் அப்ப கண்டிப்பா உனக்கு ஒன்னு இருக்கும்ன்னு பதிலையும் முருகனே சொல்லி முடிப்பான்,அண்ணனிடம் போன் பண்ணி யார் யாருக்கு
மீனுன்னு கேட்டால் மீசக்கார மாமாவுக்கு ஒன்னு ,கோவி.சுரேஷ் வீட்டுக்கு ஒன்னு ,சண்முகம் வீட்டுக்கு ஒன்னு ,கடைசியா அண்ணன் வீட்டுக்கு கொண்டுபோய் குடுத்துவிட்டு ஒருசொம்பு தண்ணிய எடுத்து குடிக்கும்போதுதான் நினைப்பு வருது,நாக்கெல்லாம் செத்துகிடக்கு பத்துருவாக்கி நெத்திலிகருவாடு வாங்கியான்னு அம்மாசொன்னது,கொஞ்ச நேரத்துக்குள் சின்ன அண்ணி பதட்டத்துடன் வந்து இன்பா வாங்கிட்டுவந்த மீன்ல மூணுதலை இருக்கு ஆனா ரெண்டு வால்தான் இருக்கு ஒரு வால கானோன்னு ஒரே பஞ்சாயத்து நீ போய் கணேசனிடம் கேளுண்ணுது ,வால்தானே போனாபோவுது விடுங்க இதபோய் அவன்கிட்ட கேட்டால் அண்ணனை என்ன நினைப்பான்னு சொல்லி சமாதானமபடுத்த அவன் படுறபாடு சாமி சாமி..
காலைல காளவாயில் இருந்து வந்து இப்ப மணி ஒன்னுஆவுது சரி ஐயப்பன் கடையில் டீகுடுசிட்டு போலான்னு போனா அங்க இன்பாவின் பால்ய நண்பன் வந்திருந்தான்,என்னா மச்சான் நல்லாயிருக்கியா ? இருக்கேண்டா ,கல்யாணம் பண்ணிட்டியா என்றான் இல்லடா தங்கச்சி இருக்குடா அண்ணன்கிட்டதானே இருக்க என்ன மாசம் ஒரு பத்தாயிரம் தருவாரா?அதுக்குல்ல டீ கொண்டுவந்த ஐயப்பன், மாப்ளைக்குஎன்ன அவன்தான்யா முதலாளின்னு சொல்லி புல்லரிக்க வச்சிடுவான்.
காளவாய்க்கு போய்இருக்குற பணத்தவச்சி ,லோடுமேன் தலையில் கல் சுமக்கும் ஆட்கள்,விறகு,கரி,நடவு ஆட்கள் எல்லாருக்கும் நிரவி கொடுத்தா கொஞ்சபேரு வாங்கிட்டு சும்மா போவான்,சிலபேரு வேலய வாங்கிக்கிற கூலி கொடுக்க வலிக்குதா என்பான்,என்னப்பா நான் கூலி இல்லன்னா சொன்னேன்,
காசுகொஞ்சம் கொறையுது, இருக்குறத எல்லாருக்கும் நிரவி கொடுக்கிறேன்,மீதிய நாளைக்கு வாங்கிக்கோன்னு சமாதனம் படுத்திவிட்டு,கணக்கு வழக்கு எல்லாம் எடுத்துகிட்டு வீட்டுக்குபோனா அண்ணன் கடலூர் போயிட்டுவந்த களைப்பில் தூங்குவாரு,நடு அண்ணிகிட்டபோய் கணக்கு ஒப்படைச்சிட்டு வர்றதுக்கு ஒருமணி
நேரம் ஆகும்,அண்ணிக்கு கணக்கு புரிய வைக்குறதுக்குள்ள அவனுக்கு உசுருபோய் உசுருவந்துடும்,கடைசியா அவனுக்கு ஒரேஒரு வேலை தான்இருக்கு,அண்ணனுக்கும் அவர் நண்பர்களுக்கும் சரக்கு வாங்கிட்டுவரனும்,ஐநூறுரூபா தருவாரு அதுல மூணுபேருக்கு ஹாட், ரெண்டுபேருக்கு பீரு,இன்பா கிளம்பும்போது அவன் காதுபட
ஒருத்தன் சொல்வான் சேகரு இப்படிஒரு தம்பி கிடைக்க நீ கொடுத்து
வச்சிருக்கணும் என்று ,கடைக்கு போய் சரக்கு,சைடிஷ்,பழம் வாங்கிக்கிட்டு மின்னல் வேகத்தில் வந்து நிப்பான்,வீட்டிக்கு பின்னாடி ஒரு ரூம் அது இவர்கள் தண்ணி அடிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இடம் அங்கு கொண்டுபோய் கொடுத்துவிட்டு, அண்ணே நான் போயிட்டு வரேன் என்பான்,டேய் உனக்கு செலவுக்கு என்று கேட்ப்பார்,வேண்டான்னு சொன்னாலும் பாக்கெட்டை தடவி பார்த்துட்டு அண்ணிகிட்ட வாங்கிட்டு போடா என்று சொல்வார்,அண்ணிகிட்ட போய் பணம் கேட்டால் அம்முவ டியூஷன்ல போய் கூட்டிட்டுவா தரேன் என்று சொல்லும், எனக்கு பணமே வேணான்னு கிளம்பும் போது, என் தங்கமில்ல இன்னக்கிமட்டும் கூட்டிட்டுவா,சத்தியமா நாளையிலேருந்து நீ கூட்டியாரவேண்டாம் என்று ஐஸ்வைக்கும், ஆனா இந்த வார்தயவே வருஷகனக்கா கேட்டுகிட்டுஇருக்கான், இருந்தாலும் பரவாயில்லன்னு போவான் ஏன்னா இத்தோட இன்னைய வேலை முடிஞ்சிடும் என்று ஒரு நம்பிக்கை அவன்னுக்கு, டியூஷன் வாசலில்போய் வண்டியை நிறுத்தி,அங்குநிக்கும் ஒரு சிறுவனிடம்,தம்பி உள்ளபோய் அம்முவ கூட்டிட்டுவாப்பா என்று சொல்வான்,அதற்க்கு அவன் நீங்க யாரு என்று திருப்பிகேட்கிறான் அவுங்க அண்ணன்னு சொல்லுப்பா,புத்தக பையுடன் அவன் அருகில்வரும் அம்முபாப்பா அந்த பொடியனிடம்சொல்கிறது,அய்ய இது எங்கஅண்ணனில்ல,எங்கவீட்டில் வேலைசெய்யற கணக்கபில்லை என்று ....!
சென்னையில் உதவிஇயக்குனராய் இருந்தசமயம், தம்பியின் நினைவு நாளுக்காக ஊருக்கு சென்றிருந்தான்,நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கயிலே இன்பா அண்ணா,இன்பா அண்ணா,என்ற குரலுக்கு திரும்பி பார்க்கும்பொழுது ,சேகர் அண்ணனுடன் இருசக்கரவாகனத்தில் கை அசைத்தபடி கடந்துசெல்கிறாள் அம்முபாப்பா சற்றே வளர்ந்தவலாய் !




எழுதியவர் : து.ப.சரவணன் (21-Nov-11, 8:12 am)
சேர்த்தது : thu.pa.saravanan
பார்வை : 732

மேலே