என்று தணியும் இந்த தாகம்..!

அது ஒரு அரசாங்க மருத்துவமனை.அன்று கிளைக் கட்டிடத் திறப்பு விழா நடந்துக்கொண்டிருந்தது.
மருத்துவமனையின் முதன்மை மருத்துவர்கள்,ஆளுங்கட்சி பிரமுகர்,சினிமா நடிகர் என மேடையே களை கட்டிருந்தது.மருத்துவமனையின் பணியாளர்கள் அத்தனை பேரும் பார்வையாளர்களாய் அங்கு அமர்ந்திருந்தனர்..
மேடையில் இருந்த அரசியல்வாதியாக இருக்கட்டும்,நடிகராகட்டும் அத்தனை பேரும் அங்குள்ள மருத்துவர், நர்ஸ் என அனைவரையும் பாராட்டிய வண்ணம் இருந்தனர்..
"ஐயோ தவிக்குதே ஒரு பொட்டு தண்ணி பக்கத்துல காணாமே.".
இது எலும்பு முறிவு வார்டில் இருந்த நோயாளியின் சத்தம் .
"ஏன்யா கத்துற இங்க ஒருத்தரும் இல்ல எல்லாரும் மீட்டிங் பாக்க போயிருக்காங்க" என்று பக்கத்துக்கு பெட்டில் இருந்த நோயாளி கூறினான் ..
அந்த வார்டில் இருந்த எல்லோருமே கை கால் முறிந்து நடமுடியாதவர்களாய் இருந்தனர்.

"அம்மா நர்சம்மா"
என்று கத்திக் கொண்டே ஒருக்களித்து திரும்பினான் . அப்படி புரண்டு படுத்துக் கொடுத்தது அவனுக்கு வேதனையாக இருந்தது போலும் வலியில் முகம் சுளித்தான்.

"என்னையா கூச்சல் போடறீங்க? நர்சம்மா திட்டுவாங்க" என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுத்தான் வார்ட் பாய் ..

இதற்கிடையில் அந்த அரசியல்வாதி பேசுவது ஒலிப்பெருக்கி வழியாக கேட்டது.

"இந்த மருத்துவமனை நம் நாட்டுக்கு குறிப்பாக இந்த ஊருக்கு மகத்தான சேவை செய்கிறது என்பதில் சந்தேகமே இல்லை "

எனக் கூற பார்வையாளராய் இருந்த நர்ஸ் , வார்டு பாய் மருத்துவர்கள் என அனைவரும் கரகோஷம் எழுப்பினர். .

"தாகம் " அரற்றினான். அந்த தாப ஜுரக்காரன்.

"யோவ் கொஞ்சம் பொறுயா அவங்க வரவேணா மீட்டிங் எப்போ முடியுமோ."

"எப்படிங்க பொருக்குறது என்னால முடியலையே." என அவன் நெளிந்தான்
.
இதைக் கண்ட மூன்றாவது பெட் காரன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. சட்டென்று எழுந்து இருக்கும் ஒத்தக்காலை வைத்து நொண்டி அடித்துச் சென்று எப்படியோ தத்தி தாவி தண்ணீர் பானைக்கு அருகே சென்றது தான் தாமதம்.
தடுமாறி பானை உடைய சத்தம் கேட்டு ஓடி வந்த வார்டு பாய் இதைப் பார்த்து விட்டு நர்சிடம் சொல்ல
வேண்டா வெறுப்பாய் எழுந்து வந்தவர் "யோவ் என்னய்யா பண்ற சுத்த நான்சென்ஸா இருக்க கொஞ்ச நேரம் மீட்டிங் பார்க்க விடறீங்களா போய்யா எடத்துக்கு பெரிய டாக்டர் வரட்டும் உங்க எல்லாரையும் கம்ப்ளைன்ட் பண்றேன்" .
என கத்திவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமலே மீட்டிங் காணும் ஆவலில் ஓடினாள்.
வார்டு முழுக்க மௌனம் .
ஒலிபெருக்கியில் சத்தம் அதிகமாய் கேட்டது.
"இந்த மருத்துவமனியில் நோயாளியாக வந்து இப்பேற்பட்ட நர்ஸ்களின் சேவையை பெற எனக்கும் கூட ஆசையாக இருக்கிறது ."

என அந்த நடிகர் சொல்ல கரகோஷம் அந்த கட்டிடத்தையே கிடுகிடுக்க செய்தது.
.
.

எழுதியவர் : kavithaayini (24-Nov-11, 10:21 pm)
பார்வை : 674

மேலே