இன்னுமொரு கண்ணி - சிறுகதை -பொள்ளாச்சி அபி

வரதராஜனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் கனவில்கூட நினைத்துப் பார்த்திராத அந்தச் செய்தியை பாலகிருஷ்ணன் சொன்னபோது,பக்கத்தில் குண்டு விழுந்தாற்போல சர்வாங்கமும் நடுங்கியது. ‘இந்தச் செய்தி பொய்யாய் இருக்கக்கூடாதா..?’

பத்துநிமிடத்திற்கு முன்,எப்போதும் போல ஆபீஸ் முடிந்து வந்து கொண்டிருந்தார் வரது.வீட்டுக்குள் நுழையும் சமயம் “டேய் வரது..” பாலகிருஷ்ணன் அழைத்தார். இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள்.நடுவே நாலடி உயர காம்பவுண்ட் சுவர் வீடுகளைப் பிரித்ததே தவிர,இருபது வருட நட்பு பிரியாமலே இருந்தது.“ஒரு அஞ்சு நிமிஷம் உள்ளே வந்துட்டுபோ..”

“ என்னப்பா அவ்வளவு அவசரம்..? “என்று கேட்டபடியே திரும்பி வந்தார் வரது.பாலு வீட்டில் சந்தடி எதுவும் இல்லாததுகண்டு எங்கே தங்கச்சி எல்லாம் யாரையும் காணோம்..?".

“சொந்தத்துலே ஒரு கல்யாணம்.மதியமே எல்லோரும் திருச்சிக்கு போயாச்சு..”

“நீ போகலியா..?”

“உன்னைப்பாத்து ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்தான் அவங்ககூட நான் போகலை..”

வரதுக்கு ஆச்சரியம். “நீ இப்படி உட்காரப்பா..” என்று வரதுவை சோபாவில் இருத்தியபடியே பாலு சொன்னார், “ நான் சொல்றதை கொஞ்சம் பதட்டப்படாமே கேளு.நேத்து நான் கோயமுத்தூர் போயிட்டு,ராத்திரி பத்துமணிக்கு மேலே திரும்பி வரப்போ,நம்ம வீதிமுனையிலே அந்த பச்சைவீடு இருக்கில்லே..”

‘அது சுந்தரியின் வீடாயிற்றே..அவளுக்கு விபச்சாரம்தான் தொழில் என்று எல்லோருக்கும் தெரியுமே அதை ஏன் பாலு குறிப்பிடவேண்டும்..?’ “ஆமா..சொல்லு..”

“அந்த வீட்டுக்குள்ளே இருந்து நம்ம கணேசன் வெளியிலே வர்றதைப் பார்த்தேம்ப்பா.., வந்து,அப்படி மெயின்ரோடுக்கு திரும்பிப் போனான்..”
வரது நடுங்கிப்போனார்.பதட்டத்துடன் வார்த்தைகள் தந்தியடித்தன. “கணேசனா..?..அவன்தானா..? நல்லாப்பாத்தியா..? இருக்காதுப்பா..”
பாலு,வரதுவின் கைகளை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார்.“எனக்கும் அப்படித்தாம்பா சந்தேகமா இருந்தது.ஆனா இவன் பொறந்ததுலேருந்து இந்தப் பதினேழு வருஷமா நான் பார்க்க வளர்ந்தவனாச்சே..எனக்கு அடையாளம் தெரியாம போயிடுமா..?”

உண்மைதான்..இருபது வருடங்களாகத் தொடரும் நட்பில்,இருவருடைய குடும்பங்களும் எல்லா சுக துக்கங்களிலும் பங்கெடுத்துக்கொண்டு,தனக்கு வந்ததுபோல் மகிழ்ந்து,வருந்தி, அக்கறை செலுத்தி..,பாலு சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்.

கணேசன்,வரதுவின் ஒரே மகன்.இந்த வருடம் ப்ளஸ் டூ.வீட்டில் அவன் எதுகேட்டாலும் வாங்கித் தருவார் என்றாலும்,அடிக்கடி அதுவேணும், இது வேணும் என்று கேட்காத பிள்ளை.பாக்கெட் மணிகூட அவராக ஞாபகம் வைத்துக்கொண்டு கொடுத்தால்தான் வாங்கிக்கொள்வான்.அம்மாவின் கைவேலையிலும் வலியச்சென்று உதவும் குணம்.வரது பெருமைப்படும்படி பல குணங்களை அவனிடம் கண்டிருந்தாலும்,அவனும் சிறுமைப்பட்டு, தங்களையும் சிறுமைப்படுத்தியதை,இப்போதுதான் கேள்விப்படுகிறார்.

துக்கத்தையும் மீறி அவருக்குள் சுறுசுறுவென கோபம் கூடுகிறது.‘தன் மகன் ஒரு விபச்சாரி வீட்டுக்கு போனான் என்று தெரிந்தால்,லட்சுமியின் மனசு என்ன பாடுபடும்.. அவன் இன்னும் சின்னப்பையன் என்று,அவன் எழுதும்போது சோறு பிசைந்து ஊட்டுகிறாளே..!’‘வாழும் காலத்திலேயே அனுபவிக்கும் நரகம் என்று எய்ட்ஸ் நோய் பற்றி,நாடெல்லாம் பிரச்சாரம் நடக்கிறது.அதைப்போல இவனும் நோயில் வீழ்ந்தால்..’அதற்கு மேல் வரதுவால் சிந்திக்க முடியவில்லை. ஆத்திரம்,கோபம் என்று கலவையான உணர்ச்சிகளில் தத்தளித்தவராய், பாலுவின் கையை இறுகப்பற்றிக் கொண்டார்.

“இதோ பார் வரது..நீ ஆத்திரப்பட்டோ,கோபப்பட்டோ வீட்டில்போய் எதுவும் கலாட்டா பண்ணிராதே..,டீன்ஏஜ்ங்கிறது கண்ணாடிப்பாத்திரம் மாதிரி, பக்குவமாத்தான் கையாளனும்.நீ பல்லைக் கடிச்சுகிட்டு இன்னும் மூணுநாள் பொறுத்துக்க..நான் ஊருலேருந்து வந்தவுடனே அவன்கிட்டே பக்குவமா பேசி திருத்திக்கலாம்..அப்படியே நமக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்டேயும் செக்கப் பண்ணிரலாம்.நீ மட்டும் எப்பவும் போல இரு.வீணா தங்கச்சிய கலவரப் படுத்திராதே.தைரியமா இரு. நான் பாத்துக்கிறேன்..”

வரது, தளர்வுடன் தனது வீட்டுப்படி ஏறும்போது,குழந்தைகள் படிக்கும் சத்தம் கேட்டது.படியேறியதும் இடதுபுறம் ஒரு அறை. சென்ற வருடம்வரை அது வரதுவின் தகப்பனாருடைய அறையாக இருந்தது.அவர் காலமானபின் அது கணேசனுடைய அறையாக மாறிவிட்டது.எந்த நேரமும் படிக்க,எழுத வசதியாக இருக்கும்பொருட்டு,வரது செய்த ஏற்பாடுதான் அது. குடும்பம் புழங்கும் அறைகளிலிருந்து தனித்து வெளியே இருந்ததுதான் கணேசனுக்கு வசதியாய் போயிற்றோ..? தனது தலையில் தானே மண் வாரிப் போட்டுக் கொண்ட அசூயை.

கணேசனின் அறைக்குள் பார்வையைச் செலுத்தியபடியே நேராகச் சென்று ஹாலினுள் அமர்ந்தார்.கணேசன்,பக்கத்துவீட்டு சேதுராமனின் குழந்தைகளுக்கு கணக்கும்,ஆங்கிலமும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தான்.பரீட்சை சமயமானால் அவனுடைய அறையில் நிறையக் குழுந்தைகள் கூடிவிடும். எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு,ஏழு மணிக்குமேல் அவனுடைய பாடங்களைத் தொடர்வான்.’பகல் முழுக்க இப்படி இருந்துவிட்டு,இரவில் அப்படியா..? அதுவும் பதினேழு வயதில்..? இப்படி மாற எண்ண காரணம்..? சினிமா,டீவி, பத்திரிகை என்று சகலத்திலும் பிரதிபலிக்கும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவரும் நாகரீக சீர்கேடுகளின் பாதிப்பா..?.’

கிச்சனிலிருந்து எட்டிப்பார்த்த லட்சுமி,“அட என்னங்க..,அமைதியா வந்து உட்கார்ந்துட்டீங்க..?” என்று கேட்டுக் கொண்டே வந்தவள்,அவர் முகத்தைப் பார்த்தவுடன் கவலையானாள். “ஏங்க உடம்பு சரியில்லையா…? என்னாச்சு.., வருத்தமா இருக்காப்போல இருக்கே…”

‘தாங்குவாளா..? தன் மகன் ஒரு விபச்சாரி வீட்டுக்கு போனான் என்று தெரிந்தால் இவளால் ஜீரணிக்க முடியுமா..? தனது வளர்ப்பில் ஏதோ குறையென்று மறுகிப் போவாளே..,பின் மீண்டும் அவளிடம் அந்தத் தாய்மைப் பரிவு தோன்றுமா..,மான அவமானத்திற்கு அஞ்சும்,இரக்கம் மிகுந்த,அதிர்ந்து பேசாத,ஒரு குறையும் சொல்ல முடியாதவாறு குடும்பத்தை நடத்தும் பொறுப்பு மிக்க மனைவி.., ஒட்ட வைக்க முடியாதவாறு மனம் உடைந்து போவாளே.., பாலு சொன்னபடி இவளைக் கலவரப்படுத்தக் கூடாது..நாமே அந்த தறுதலையைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.. “தலை வலிக்கிற மாதிரி இருக்கு லட்சுமி..”

ப்ளாஸ்க்கிலிருந்து காபி ஊற்றிக் கொண்டு,கூடவே ஒரு மாத்திரையையும் கொண்டு வந்த லட்சுமி, "இந்தாங்க சாப்பிட்டுட்டு பேசாம படுத்துக்கங்க, அப்புறம் டிபன் பண்ணிட்டு எழுப்புறேன்.அதுவரைக்கும் நல்லா ரெஸ்ட் எடுங்க,..”

வரதுவுக்கும் அப்போது சற்றுநேரம் இடையூறு இல்லாத தனிமை தேவையாய் இருந்தது.

இரவு ஒன்பது மணிக்கு படுக்கை அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்த லட்சுமி,கூரையை அண்ணாந்து பார்த்தபடி,வரது ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.“தலைவலி பரவாயில்லையா.,டிபன் சாப்பிட வரீங்களா..?”

“வர்றேன்.கணேசன் சாப்பிட்டானா..?”

“அவன் சாப்பிட்டுட்டு,படுக்கப் போயிட்டான்..”

‘காலையில் அவனைக் கூப்பிட்டு நாமே பேசலாமா..? கோபம் காட்டாமல்
ஆத்திரப்படாமல்,அவன் தப்பை உணர்கிற மாதிரி நம்மால் புத்தி சொல்ல முடியுமா..? பாலு சொன்னதைப் போல,பக்குவமாய்க் கையாள முடியுமா..? வீட்டிலே பேசினால்,லட்சுமிக்குத் தெரியாமல் எப்படிப் பேச..?..’கேள்வியின் கொக்கிகளில் மாட்டிக் கொண்டு அவர் கொட்டக் கொட்ட விழித்திருந்தபோது, சுவர்க் கடிகாரம் பதினொரு முறை அடித்து ஓய்ந்தது.

சில விநாடிகளில் கணேசனின் அறைக்கதவு திறக்கும் சப்தம் மெலிதாகக் கேட்டது. வரதுவுக்கு பதட்டம் கூடியது.கணேசா என்று சப்தமாகக் கூப்பிட எத்தனித்தவர், லட்சுமியின் ஆழ்ந்த உறக்கத்தைக் கண்டு,குரலை அப்படியே விழுங்கிக் கொண்டார்.அவசரமாய் எழுந்து பெட்ரூம்,ஹால் என அறைக்கதவு களைத் திறந்து கொண்டு வருவதற்குள் கணேசன் வெளியே போய் விட்டிருந்தான்.

ஓடிவந்து காம்பவுண்ட் கேட் திறந்து தெருவில் இறங்கி அவன் போன திசையைப் பார்த்தார்.ஆள் நடமாட்டமற்ற அந்த வீதியில்,தூரத்தே இன்னாரு பையன் சைக்கிள் ஓட்ட,பின்னே அமர்ந்திருந்த கணேசனின் நீலச்சட்டை தெருவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது.

‘கூப்பிட்டால் அவனுக்கு கேட்கும்தான்..ஆனால் இந்த இரவின் அமைதியில் அது பலருடைய கவனத்தையும் ஈர்க்குமே..’ வரது தவித்தார்.இன்றும் அவன் இவ்வாறு வெளியே போவான் என்று எதிர்பார்க்காத தனது மடமையை நொந்து கொண்டு,நிமிடத்தில் ஏமாந்து போனதை எண்ணி,அவருக்கு தன்மீதே ஆத்திரம் பொங்கியது.அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே கணேசன் சென்ற சைக்கிள், சுந்தரியின் வீட்டைக் கடந்து கோவை மெயின்ரோடை நோக்கித் திரும்பியது.

‘சுந்தரியின் வீட்டுக்குள் அவர்கள் இறங்கியவுடன் ஓடிச்சென்று கையும் களவுமாகப் பிடித்துவிட வேண்டும்’என்று நினைத்திருந்த வரது குழம்பிப் போனார். ‘எங்கே போகிறார்கள்..? வேறு எங்கேயேனும் வாடிக்கையா.?’ குழப்பத்துடனே உள்ளே ஓடி,சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு,வெளியே வந்து கதவுகளைச் சாத்தி செருப்பை மாட்டியவர்,கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாக நடந்து தெருமுனையை எட்டினார்.

பொள்ளாச்சி- கோவை ரோடு இரவுநேர டிபன்ஸ்டால்களால் சந்தடியாய் இருந்தது.லாரிகளும்,டிரக்குகளும் போகும் திசை பார்த்து வரிசை வரிசையாக நின்று கொண்டிருந்தன.டிரைவர்கள்,கிளீனர்களால் டிபன்ஸ்டால்களும், பெட்டிக்கடைகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. துரைஸ் தியேட்டரில் புதுப்பட ரிலீஸுக்காக,ரசிகர்கள் தங்கள் நாயகனுக்கு கட்அவுட்டுகளும்,தோரணங்களும் கட்டிக்கொண்டிருந்தனர். வரது, கணேசனைத் தேடி,கண்களால் நெடுகத் துழாவியபடி நடந்து கொண்டிருந்தார்.

சாந்தி தியேட்டர் வாசலுக்கு நேராய் நின்றிருந்த லாரிக்கருகில்,தோளில் ஒரு ஜோல்னாப் பையுடன் கணேசன்,யாரோ ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

காக்கிச் சட்டையும் கைலியுமாக இருந்த அவன் முதலில் டிரைவர் சீட்டில் ஏறி அமர,கணேசன் லாரியை முன்புறமாகச் சுற்றிக்கொண்டு,இடதுபுறமாக ஏறிக்கொண்டவுடன்,லாரி புறப்பட்ட ஓசையில்,“கணேசா..கணேசா..”என்று கூப்பிட்டுக் கொண்டே வந்த வரதுவின் குரல் அமுங்கிவிட்டது.லாரி உடுமலை சாலையில் திரும்பி மறைந்தே விட்டது.

வரது செய்வதறியாமல் திகைத்தார்.‘என்ன நடக்கிறது..கணேசன் எங்கே போகிறான்..? தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளை என நட்புக்காட்டியதால், வீட்டைப்பற்றிய பயமே இல்லையா..? இந்நேரத்தில் லாரியில் ஏறிப் போகிறானே..,இவனுடைய சகவாசங்களே சரியில்லையே..பிஞ்சிலேயே பழுத்துவிட்டானா.. எப்படித் திரும்பி வருவான்..நாளை இவனுடைய எதிர்காலம் என்னாவது..எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதா.?,’

“என்ன சார்.. உடுமலை வர்றீங்களா..?” யாரோ ஒரு கிளீனர் இன்னொரு லாரியிலிருந்து எட்டிப்பார்த்துக் கேட்டான்.ஒரு கைவீச்சில் மறுத்துவிட்டு,வீட்டைப் பார்த்து நடந்தார் வரது. ‘அவன் வீட்டிற்கு வரட்டும்..அவன் கழுத்தை திருகி வீசிவிட்டுத்தான் மறுவேலை..’அவருக்குள் பொங்கிய ஆத்திரத்தால் தாறுமாறாக யோசித்துக் கொண்டே வீடுவந்து சேர்ந்தார்.

படுக்கையில் உட்கார்ந்தபடியே காத்திருந்தார்.மணி பனிரெண்டு.., பனிரெண்டரை.. ஒன்றரை...,கணேசன் வரவேயில்லை.ஆயாசப்பட்ட மனதுடன், அவனைத் தேடிச் சென்ற களைப்பும் சேர வரது உறங்கிப்போனார்.

அவர் கண்விழித்தபோது,காலை ஒன்பது மணி.எழுந்து அறைக்கு வெளியே வந்தபோது..லட்சுமி எதிர்ப்பட்டாள். “என்னங்க இவ்வளவு நேரம் தூங்கிட்டீங்க.. இன்று ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் லீவுதானேன்னுதான் உங்களை எழுப்பலே..பல் தேய்ச்சுட்டு வாங்க காபி தர்றேன்..”என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தாள்.

“லட்சுமி...கணேசன் எங்கே..?”

“மளிகைக் கடைக்கு அனுப்பியிருக்கேன்.இப்ப வந்திடுவான்.”

பையன் வீட்டிற்கு வந்துவிட்டிருக்கிறான் என்பதில் அவருக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.இரவு அவருக்கு இருந்த ஆத்திரமும்,கோபமும் உறங்கி எழுந்ததில் சற்று சமனப்பட்டிருந்தது.‘நாளை பாலு வந்து விடுவான்.அவன் எப்படியும் கணேசனைத் திருத்திவிடுவான்.அதுவரை இந்தப்பயல் வெளியே எங்கேயும் போகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.ஆனால் ஒரு முறை உடலுறவு கொண்டாலே எய்ட்ஸ் கிருமிகள் தொற்றிக் கொள்ளுமாமே.. இவன் நிலை எப்படியோ..ஆரம்பக்கட்டமாயிருந்தாலும் குணப்படுத்த முடியுமா..?’ கேள்விகள்..கேள்விகள்..நேற்றிலிருந்து‘தகப்பன் மனதை’ அறுத்துக் கொண்டிருந்தது.‘ஆனாலும் என்ன செய்ய முடியும்..கடந்து போன ஒரு நொடியைக்கூட,கைப்பற்ற முடியாத மனிதனுக்கு,நடந்து போன சம்பவத்தை இல்லையென்று ஆக்கமுடியுமா..? இனி விதிவிட்ட வழிதான்..’

லட்சுமி,காபியை வரதுவின் கையில் கொடுத்துவிட்டு,“இன்னைக்கு பிரதோஷம்..நான் ஐயப்பன் கோவிலுக்குப் போயிட்டு வந்துடறேன்..” என்றபடியே படியிறங்கிப் போனாள்.

அவள் சென்ற சில நொடிகளில் கணேசன்னா..என்று அழைத்துக் கொண்டே சேதுராமனின் மகன் முரளி வந்தான்.காபி குடித்துக் கொண்டிருந்த வரதுவைப் பார்த்து, “மாமா..என்னோட ரூல் பென்சில் அண்ணாகிட்டே கொடுத்தேன்.இப்ப வேணுமே..”

“வா..எடுத்துத் தர்றேன்..”அவனைக் கூட்டிக்கொண்டு,கணேசனின் அறைக்குள் நுழைந்தார். “இதோ..இதுதான்..”என்று மேசையின் மீது கிடந்த பென்சிலை எடுத்துக் கொண்டு ஓடினான் முரளி.

வரது சில விநாடிகள் அறைக்குள்ளேயே நின்றார்.ரேக்கில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள்.சுத்தமாய் துடைக்கப்பட்ட மேசை, நாற்காலி, சாமிப் படங்கள்..,அசட்டையாக விடப்பட்டது என சொல்ல எந்தக்குறையுமே தென்படவில்லை. ‘இவ்வளவு சுத்தமாய் தனது இடத்தை வைத்துக்கொள்ளத் தெரிந்த கணேசனுக்கு,தனது உடல் மீது மட்டும் அக்கறையில்லாமல்,எப்படி அந்த அறுவெறுப்பான புதைகுழிக்குள் சென்றுவிழும் ஈனப்புத்தி எங்கிருந்து வந்தது..’ வெறுப்பாய் முனகிக் கொண்டே, அறையிலிருந்து வெளியேறத் திரும்பியவரின் கண்களில் திறந்திருந்த கதவின் ஓரம்,சுவரை ஒட்டி,ஒரு சிறிய துணித் துணுக்குத் தெரிய,சட்டென்று கதவை விலக்கிப் பார்த்தார்.அங்கே ஒரு ஜோல்னாப் பை தொங்கிக் கொண்டிருந்தது. அது நேற்று இரவு கணேசனின் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையேதான்.‘இதை எதற்கு ரகசியமாய் கதவின் பின்புறம் மறைத்து வைத்திருக் கிறான்.இதயம் வேகமாய்த் துடித்தது.அவனது இரவுநேரத் தேவைக்காக ரகசிய வியாபாரமா..? போதைவஸ்துக்கள் ஏதேனும் மறைத்துவைத்திருக்கிறானா..’அந்த நினைப்பே உடம்பை நடுங்கச் செய்தது.பதட்டத்துடன் பையை கையில் எடுத்தார்.

வாசற்படியில் கணேசன் ஏறி வருவது தெரிந்தது.அப்பாவின் கையிலிருந்த பையைக் கண்டதும்,‘திடுக்’ என அவன் அதிர்வது துல்லியமாகத் தெரிந்தது. வரது,பைக்குள் கையைவிட்டு,தட்டுப்பட்டதை எடுத்துப் பார்த்தார்.அது புத்தம்புதிய ஆணுறைகள் அடங்கிய ஒரு சின்ன அட்டைப்பெட்டி.ஷாக் அடித்ததைப் போன்ற வேகத்தில்,அப்படியே அதை உள்ளே தள்ளி,பையை அவனுடைய அறைக்குள்ளே வீசி,ஆத்திரத்துடன் கதவைச் சாத்தினார்.
பாலகிருஷ்ணன் சொல்லியதை..,லட்சுமியை.., டீன்ஏஜை.. எல்லாம் மறந்தார்.ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து கணேசனின் தலைமுடியை இடதுகையால் கொத்தாகப் பற்றி இறுக்கிய வரதுவின் முகம் கோபத்தில் சிவந்துபோய்,கண்கள் தெறிப்பதுபோல் முறைத்தபடி,“அப்பா” என்ற கணேசனின் குரலைப் பொருட்படுத்தாமல்,“நீ செய்யும் அயோக்கியத்தனத்திற்கு இது ஒரு துணையா..?”என்று பல்லைக் கடித்துக் கேட்டபடி,தனது அத்தனை சக்தியையும் வலதுகையில் தேக்கி,அவன் கன்னத்தில்“பளீரென்று” ஒரு அறை..

கணேசன் நிற்கமுடியாமல் தள்ளாடி அவரைப்பற்றிப் பிடித்துக்கொள்ள கைநீட்டி, முடியாமல் அவனுடைய அறைக்கதவின் மேலேயே விழுந்த வேகத்தில், படீரென்று கதவு திறந்துகொள்ள தொப்பென்று அறைக்குள்ளே சென்று விழுந்தான்.கணேசனைப் புரட்டி எடுக்கும் ஆவேசத்துடன் அறைக்குள் நுழைந்த வரது ஸ்தம்பித்து நின்றார்.உள்ளே..

நூற்றுக்கணக்கான நோட்டீஸ்களும்,ஆணுறைகளும்,சில போட்டோக்களும், ஒரு காக்கிவண்ண,தடித்த காகித உறையும் பையிலிருந்து அறையெங்கும் சிதறிக் கிடந்தன.

வரதுவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.தட்டுத்தடுமாறி,சுவரைப் பிடித்து எழுந்து நின்ற கணேசனை ஓரக்கண்ணால் பார்த்தபடி,குனிந்து ஒரு நோட்டீஸை எடுத்துப்பார்த்தார்.அது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட பிரச்சார நோட்டீஸ்கள்…

உணர்ச்சிவேகம் தணிந்து,குழப்ப ரேகைகள் முகத்தில் ஓட, “கணேசா..என்னப்பா இதெல்லாம்..?”

‘அப்பாவிடம் இனி ஒன்றையும் மறைக்க முடியாது..’ கம்மிய குரலில் சொல்லத் தொடங்கினான் கணேசன்,“அப்பா..நாங்க சில மாணவர்கள் ஒருகுழுவாக இணைஞ்சு இந்த எய்ட்ஸ் நோய்க்கு எதிரா பிரச்சாரம் பண்றோம்ப்பா..,படிக்கிற வயசுலே இதுசம்பந்தமா தகவல் தெரிஞ்சுக்கறதோ பேசறதோ படிக்கிறதோ தப்புன்னு நிறையப் பெரியவங்க நினைக்கிறாங்க..”

வரதுவுக்கும்‘ஆமா.அதிலென்ன தப்பு..’ நினைப்பு ஓடியது.

“அவங்க நினைப்பெல்லாம் தப்புப்பா..படிக்கிற வயசுலேயே ஆபத்தை புரிஞ்சுகிட்டாதான்,வளர்ந்த பின்னாடி தப்பு செய்யாம இருப்பாங்க.. இதப் புரிஞ்சுக்காம பெத்தவங்க எங்களைத் தடுப்பாங்கன்னு,அவங்களுக்கு தெரியாம வாய்ப்பு இருக்கற மாணவர்கள் பிரச்சாரம் பண்றோம்..”

‘சரிதான் நானும் தடுக்கத்தானே இவன் பின்னாலேயே ஓடினேன்..ஆனால் இரவில் இவன் அப்படிப் போகலாமா..?’.. “சரிப்பா.. பிரச்சாரம் பண்றவங்க பகல்லேயே செய்யவேண்டியதுதானே..ராத்திரிலே எதுக்கு வெளியே போகணும்.?”

அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது.கணேசனின் முகத்திலும் தெளிவு. அப்பாவின் முகத்தை நிதானமாகப் பார்த்தபடி,குரலைச் செருமிக் கொண்டான். அவன் குரலில் எட்டிப்பார்த்த பரிவு ஒரு நண்பனுக்கு சொல்வதுபோல இருந்தது. “பகல்லே பண்ற பிரிச்சாரம் பலருக்கு ராத்திரிலே மறந்துடுது போல..,எய்ட்ஸ் நோயாலே பாதிச்சவங்க பட்டியல் அதைத்தான் சொல்லுது. அதனாலே ராத்திரிலே தப்பு எங்கெல்லாம் நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்கோ.. அங்கே போயி,அந்த நபர்களைச் சந்திச்சு,கூடா ஒழுக்கம்..மாறா நரகம்..னு சொல்றோம்.அதையும் மீறினா அவங்களைப் பாதுகாத்துக்க இந்த ஆணுறை களையும் கொடுக்கறோம்.. இதுக்காகத்தான் சந்தர்ப்பவசமா பாலியல் தொழிலாளியா மாறிப்போன, சுந்தரியக்கா வீட்டுக்குப்போய் இந்த நோட்டீஸும் ஆணுறைகளும் கொடுத்தேன். அதே மாதிரி இந்த ஊர்வழியா போற லாரி டிரைவர்கள்,ஐந்து பேரையாவது தினசரி சந்திக்கிறோம்..”

மகன் மிகச்சாதாரணமாய் பேசுவது கண்டு வரதுவுக்கு சற்று தர்மசங்கடமாய் இருந்தது.ஆனாலும் நேற்றிரவு முதல் கணேசனைப் பற்றி மனதில் பதிந்த ஒரு அசிங்கமான ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டே வந்தது. ‘ஆனாலும் இவர்கள் செய்வது தங்கள் வயதுக்கு மீறிய வேலையல்லவா..?’

“இது எங்க வயசுக்கு மீறுன வேலையாக தயவுசெஞ்சு நீங்க நினைக்கக் கூடாதுப்பா..”வரதுவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ‘என்ன இது, ஜோஸ்யம் போல மனதைப் படிக்கிறான்.’

“எங்களுக்கு எல்லாம் தெரியும் மனுஷ உடம்பு,அதன் பாதிப்பு,ஆண்பெண் உறவுங்கிறது மீடியாக்கள் எல்லாம் கற்பிக்கிற மாதிரி கவர்ச்சியோ,ஆபாசமோ இல்லைன்னும் எங்களுக்கு புரியுது.பெரியவுங்க சொல்றதை விட எங்களை மாதிரி பசங்களே இதையெல்லாம் பேசும்போது நிறையப்பேரு இந்தப் பசங்களுக்கு இருக்கற தெளிவு நமக்கும் வரணும்னு திருந்தியிருக்காங்கப்பா..”

மகன் பேசுவதில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டவராய் ஆமோதிப்போடு,‘மேலே சொல்லு’ என்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார் வரது.

அடுத்த அரை மணிநேரம் கணேசன்,“அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா” வாக மாறிப்போனான்.எய்ட்ஸின் ஆரம்பம்,அதன் தீவிரம்,பெற்றோர்கள் செய்த தவறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களை சமூகம் ஒதுக்குவது, அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய அன்பு அரவணைப்பு,அவர்களோடு பேசுவதோ,பழகுவதோ ஒன்றாக சாப்பிடுவதோ,ஆபத்தில்லாத விஷயமே என்பது பற்றியெல்லாம் தெளிவாக,எய்ட்ஸ் இல்லாத உலகம் காண, ஒவ்வொருவரின் பங்கும் இதுவென..,ஒரு தேர்ந்த பிரச்சாரகனாக அவன் மாறிப் போயிருந்ததையும்,அவன் பேச்சிலிருந்து வரதுவுக்கும் புரிந்தது.தெளிவும் வந்திருந்தது.

“நல்ல விஷயம்தாண்டா பயலே..ராத்திரிலே நீ அந்த மாதிரி இடத்திற்கெல்லாம் போகும்போது ரெய்டிலோ,பாராவிலோ வரும் போலீஸ்காரர்கள் சந்தேகக் கேஸில் உன்னைப் பிடித்துக் கொண்டால்..?”

பதிலேதும் சொல்லாமல்,இறைந்து கிடந்த நோட்டீஸ் குவியலிலிருந்து,அந்த காக்கிக் கலர் கவரை தேடி எடுத்துவந்த கணேசன்,வரதுவின் முன்னிலை யிலேயே அதைப் பிரித்தான்.அதில் கணேசனின் போட்டோ ஒட்டப்பட்ட ஒரு கடிதம்.பஜார் போலீஸ் ஸ்டேஷன் முத்திரையோடு இன்ஸ்பெக்டரின் கையொப்பமிட்டிருந்தது.அதன் சாராம்சம் இதுதான்.‘நல்ல நோக்கத்திற்காக செயல்படும் இவர்களுக்கு இடையூறு செய்யவேண்டாம்..’

எதையும் சரியாக செய்யப் பழகிக் கொண்டுவிட்ட கணேசனைப் பெருமையோடு பார்த்தார் வரது.‘என்னை மன்னிச்சுடு கணேசா’ அவனைக் கைப்பிடித்து தனது அறைக்கு அழைத்துச் சென்றவர், தனது டைரியிலிருந்து அவருடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றை எடுத்து கணேசனிடம் கொடுத்தார். “எனக்கும் அதே மாதிரி ஒரு லெட்டர் வாங்கிக் கொடு கணேசா..”

நாடெல்லாம் பரவப் போகும் இயக்கச் சங்கிலியில்,இன்னுமொரு கண்ணி அங்கே கோர்த்துக் கொண்டது.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (25-Nov-11, 5:25 pm)
பார்வை : 1029

மேலே