பித்தன்

சில வருடங்களாகவே பைத்தியம் பிடித்து அலைந்தான் கதிரவன்.மதுசூதனன் எழுத்து மீது அவ்வளவு ஆர்வம் அவனுக்கு.பழைய புத்தகக் கடைகளில் தேடி எடுத்துப் படித்தான்.அவர் தொடர் வெளிவரும் வார, மாத இதழ்களை வாங்கிக் குவித்தான்.

இத்தனைக்கும் அவன் மென்பொருள் வல்லுநராக வேலை பார்ப்பவனில்லை.ஒரு போட்டோ ஸ்டியோவில் சொற்ப வருமானத்தில் வேலை பார்த்து வந்தான்.அவனையொத்த வயதுடைய இளைஞர்களின் சிந்தனையிலிருந்து அவன் மாறுபட்டிருந்தான்.

அவன் எங்கு சென்றாலும் பையில் எடுத்துச் செல்லும் புத்தகம் ரமணருடையது.நான் யார் என தன்னையே அடிக்கடி கேட்டுக் கொண்டான்.விடை காண முடியாத கேள்வி வேதாளமாக அவன் தோளில் வந்தமர்ந்து கொண்டது.

சமூகத்துக்கு சுயசிந்தனையாளன் ஆபத்தானவன் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவன்.அவன் படித்த படிப்புக்கும் வேலை பார்ப்பதற்கும் சிறிதும் சம்பந்தமில்லை ஆட்டோமொபைல் டிப்ளமோ முடித்துவிட்டு போட்டோ ஸ்டியோவில் மவுஸை பிடித்துக் கொண்டிருந்தான்.

அவன் எப்படி பைத்தியமானான் என்ற கதை மிகவும் சுவாரஸியமானது.ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விடுமுறையில் அம்மன் கோயில் திருவிழாவுக்கு சாந்தி என்ற பெண் வருவாள்.அப்பா வசதியானவர் என்பதால் காரில் வந்து இறங்குவாள்.

அந்தப் பெண் மீது ஒருவித ஈர்ப்பு கதிரவனுக்கு.வருடா வருடம் அம்மன் கோயில் திருவிழாவை எதிர்பார்த்து காத்திருந்தான்.அப்பெண் வராத போது பிரமை பிடித்தவன் போல் வீட்டினுள் முடங்கிக் கிடந்தான்.

இது அவனுக்குப் புதிது.இந்த நொடி வரை இப்படி அசைவற்று, மனம் சிதைந்து இருந்ததில்லை.அந்தப் பெண்ணை பார்க்கவில்லையென்றால் என்ன என்று சுலபமாக நீங்கள் கேட்கலாம்.இந்த நாளில் பார்க்கவில்லை என்றால் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே.அது போல ஒருவரின் மீது பிடிப்பு வருவதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாது;எந்த விஷயம் நம்மை ஈர்த்ததோ அது பிறருக்கு மிகச்சாதாரணமாக கூட இருக்கலாம்.

ஒரு வருடத்தில் ஒரு நாளுக்காக ஆசைப்பட்டு மற்ற நாட்களை ஏனோதானோ என்று கடத்துகிறவன் அரைப் பைத்தியம் இல்லாமல் வேறென்ன.

இப்போது அரைப்பைத்தியம் ஆகிவிட்டான் அல்லவா அவனை முழு பைத்தியம் ஆக்க வேண்டுமே, அதற்காகவே கதிரவன் வாழ்வில் இன்னொருத்தி புகுந்தாள்.

இது நடந்தது அவன் +1 படிக்கும்போது.அதே பள்ளியில் படிக்கும் பெண் தான் அவளும்.முன்னது ஒரு ஈர்ப்பு என வைத்துக் கொள்வோம்.இது மட்டும் காதலா என்று கேட்காதீர்கள் அதுவும் படிக்கிற வயதில்.இந்த ஹார்மோன்கள் செய்யும் ஜாலம் இருக்கிறதே.அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தானே நாமும்.

மழையோ, புயலோ அவளைப் பார்ப்பதற்கென்று தினமும் பள்ளியில் ஆஜராகிவிடுவான் கதிரவன்.அவள் பெயர் பைரவி.பிரேயருக்கு எல்லா வகுப்புகளும் ஒன்று கூடும் போது பார்வைகளை பறிமாறிக் கொள்வார்கள்.வேண்டுமென்றே நண்பர்கள் அவள் அருகே சென்று கதிரவன் என அவன் பெயரைச் சொன்னதும் அப்பெண் கன்னம் சிவந்து சிரிக்கும்.

படிக்கிறவர்கள் படம் பார்க்காமல் இருப்பார்களா?அதுவும் அந்தப் படத்தையா கதிரவன் பார்த்து தொலைக்கணும்.பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து படுத்தவன் தான்.சினிமாவுக்கு இருக்கும் வல்லமை இருக்கு பாருங்கள்.

அப்படி என்ன தான் சொன்னார்களாம் அந்தப் படத்தில்.வேலையில் இருந்து கொண்டு காதல் செய்யச் சொன்னார்களாம்.விடுவானா கதிரவன்.சீக்கிரத்தில் வேலை கிடைக்குமென்று நினைத்து +2வை பாதியிலேயே நிறுத்திவிட்டு பாலிடெக்னிக்கில் சேர்ந்தான்.

அவன் கவனமெல்லாம் படிப்பில் இருந்தது.பைரவியைப் பார்க்காமல் அவளைப் பற்றிய தகவல்களை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.இந்த காலம் இருக்கிறதே எவ்வளவு வேகமாய் ஓடுகிறது.படிப்பை முடித்துவிட்டான், அவளோ கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தாள்.கதிரவன் தன் காதலைச் சொல்ல இது தான் தக்க தருணம் என நினைத்தான்.இதில் லாஜிக் பார்க்கக்கூடாது.ஏனென்றால் இப்போது, தான் ஒரு தகுதியுள்ள ஆண் என்று கதிரவன் கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது.ஒரு திரைப்படம் இளைஞர்களின் மனோபாவத்தை எந்தளவு மாற்றுகிறது பாருங்கள்.

அவள் கல்லூரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவளது இருசக்கர வாகத்தை வழி மறித்தான்.அவளும் நின்றாள், பார்த்த முகமாய் இருக்கிறது என்று நினைத்திருப்பாள் போலிருக்கு.காலம் சாம்ராஜ்யத்தையே சுவடு இல்லாமல் செய்துவிடக் கூடியது என்றால் மனிதர்கள் எம்மாத்திரம்.காலம் பைரவி மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எண்ணாமல் விட்டுவிட்டான் கதிரவன்.அவள் நின்றதும் எப்படி இருக்கீங்க என்றான்.செளக்கியம் தான் என்று இழுத்தாள் அவள்.மறைத்து வைத்திருந்த காதல் கடிதத்தை எடுத்து நீட்டினான்.பதற்றம் கொண்ட அவள் அக்கடிதத்தை வாங்காமல் வண்டியை கிளப்பிச் சென்றாள்.ஒரு வேளை அவள் கதிரவன் பார்த்த திரைப்படத்தை பார்க்க நேர்ந்திருக்காமல் இருக்கலாம்.

இப்போது அவன் கிடைத்த வேலையில் தொற்றிக் கொண்டு.எழுத்துக்களில் காதலைப் படித்து சிலாகித்துக் கொண்டும் இருக்கிறான்.அவனை அரைப் பைத்தியம், முழு பைத்தியம் ஆக்கியவர்கள் எல்லாம் கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு சேமமாக வாழ்கிறார்கள்.

எழுதியவர் : ப.மதியழகன் (29-Nov-11, 11:35 am)
பார்வை : 448

மேலே