இதுவும் யுத்தம்..! – சிறுகதை- பொள்ளாச்சி அபி


பள்ளி;யில் வேலை முடித்து வீட்டுக்கு வந்த லலிதா வியந்துதான் போனாள்.ஐந்துமணிக்கே வீதியிலுள்ள ஜனங்களும்,ஊரிலிருந்து வந்த அவர்களின் உறவினர்களும்,குழந்தைகளுமாய்..,வீட்டின் முற்றம்,கலகலத்துக் கொண்டிருந்தது.‘சென்ற வாரத்தைவிட,இந்த வாரம் கூட்டம் சற்று அதிகம்தான்’

“வாம்மா லலிதா..இப்பத்தான் வர்றீயா..?” இது கோடிவீட்டு ஜானகிஅக்கா. இவள்தான், இந்த அமளிக்கெல்லாம் பிள்ளையார்சுழி போட்டவள். ஒரு புன்னகையை பதிலாய் தந்துவிட்டு உள்ளேபோனாள்.

இடது பக்கத்து பெரியஅறையில் மங்களம் சிறியதாக மாக்கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.நிமிர்ந்து லலிதாவைப் பார்த்தவள்,“கனகு இப்ப வந்துடுவான்.நீ குளிச்சுட்டு,அவன் குளிக்கிறதுக்கும் ஹீட்டர் போட்டுரு.அப்படியே அலமாரிலே இருக்குற பூஜை சாமானையெல்லாம் தட்டுலே எடுத்துட்டு வா..,இப்பவே நேரமாயிடுச்சு..,”
“சரிங்க அத்தை..”

ஆறுமணி ஆனபோது,அந்தப் பெரியஅறையில் அனைவரும் இரண்டு மூன்று வரிசைகளாக அமர்ந்திருக்க,கிழக்குப் பார்த்து வைக்கப்பட்டிருந்த சாமிபடங்கள் மாலைகளால் அலங்கரித்து சந்தனம் குங்குமத்தால் திலகமிடப்பட்டிருந்தது.பெரிய குத்துவிளக்குகள் இரண்டுபக்கமும் எரிந்து கொண்டிருக்க,நடுவில் தட்டுநிறைய விபூதி,குங்குமம்,கற்பூரங்களோடு, பக்கத்திலேயே சாம்பிராணியும் புகைந்து கொண்டிருந்தது.

“தம்பி வந்தாச்சு,வழி விடுங்க..”யாரோ ஒரு அம்மாள் கூற,வழியில் நின்றிருந்தவர்கள் ஒதுங்கினர்.

கனகராஜ் மஞ்சளில் நனைத்த வேட்டியும்,மேலே ஒரு ஈரிழைத்துண்டும் போட்டு வந்தான்.உடலெங்கும் விபூதியில் ஆங்காங்கே பட்டைபோட்டிருக்க,கைகூப்பி எல்லோரையும் சேவித்துவிட்டு சாமிப்படங்களின் பக்கத்தில் போடப்பட்டிருந்த மனைப்பலகையில் அமர்ந்தான்.ஏதோ முணுமுணுப்புடன்,தட்டில் இருந்த கற்பூரங்களை கொளுத்தி படங்களுக்கு காண்பித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.
“சுவாமி தியானம் பண்றார்..”கிசுகிசுப்பான குரல்களைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் எல்லாம் கனகுவையும்,சாமிப்படங்களையும் பார்த்து கைகுவித்து கன்னத்திலும் போட்டுக் கொண்டனர்.
இன்னும் சற்றுநேரத்தில் அவனுக்கு “அருள்” வந்து,வாக்கு கேட்பதற்காக அனைவரும் காத்திருந்தனர்.

இவற்றையெல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த லலிதா, ஆயாசத்துடன் படுக்கைஅறைக்கு சென்று நாற்காலியை இழுத்து,மேசையின் அருகேபோட்டு,அமர்ந்து கவிழ்ந்து படுத்துக்கொண்டாள்.மனதுக்குள் மண்டிய துக்கத்தால் நெஞ்சு விம்ம உடல்குலுங்கியதில்,அவள் அழுவது தெரிந்தது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும்,மாலை ஆறுமணிக்கு தொடங்கும் “வாக்கு சொல்வது” முடிவதற்கு,சிலசமயம் ஒன்பதுமணிகூட ஆகும்.அன்றுமட்டும் தன்னுடைய ஃபேன்சி சென்டரிலிருந்து ஐந்துமணிக்கே வந்துவிடுவான் கனகு.அவன் வருவதற்குள் மங்களம் எல்லா ஏற்பாடுகளையும்,தனக்கு திருப்தி ஆகும்வரை சிறப்பாக செய்து வைத்துவிடுவாள்.
தன் மகனுக்கு சாமி வந்து,அவனிடம் அருள்வாக்கு கேட்க நிறையப்பேர் வருவதில் அவளுக்கு ஏக பெருமை.“ஜானகிக்கு பேரன்தான் பிறப்பான் என்றும்,பரமசிவம் செட்டியாரின் பங்காளித்தகராறு பதினெட்டு வாய்தாவிற்குப் பிறகு சுபமாக முடியும் என்றும்,அஞ்சலையின் மகளுக்கு அரசுவேலை கிடைக்குமென்றும்,அவன் சொன்னது அப்படியே பலித்துப்போனதை சிலாகித்து பேசிக்கொண்டிருப்பாள்.

பலன் அனுபவித்தவர்கள் பக்கத்திலிருப்பவர்களுக்கு சொல்லி,அவர்கள் உறவினர்களுக்கு சொல்லி..லலிதாவின் வீட்டில் கூட்டம் வாராவாரம் கூடிக்கொண்டே போனது.
ஆனால்,மகன் பிறந்த ராசி,வியாபாரம்“ஓகோவென்று வரும்” என்று சொல்லியனுப்பிய கணேசன் நொடித்துப்போய் ஊரைவிட்டே போனதும், மல்லிகாவின் ஜாதகப்பொருத்தம்“அபாரம்”என்று சொல்லி,திருமணம் முடித்த இரண்டு மாதத்திலேயே வரதட்சணைத் தகராறில் அவள் பிறந்தவீடு திரும்பியதையும் இந்த ஜனங்கள் சுலபமாக மறந்துவிட்டனர்.மங்களம் அதைப்பற்றி யாரிடமும் பேசவில்லை.
சந்திரனின்‘சஸ்பெண்ட்’ ரத்தாகி வேலைக்கு திரும்புவார் என்று சொல்லி, “சஸ்பெண்ட் இப்ப ‘டிஸ்மிஸ்’ ஆகி,கோர்ட்டு,கேஸ{ என வளர்ந்து கொண்டே போகிறதே..”என்று அவருடைய மனைவி கேட்டபோது,“நீங்கள் அவருடைய ஜாதகத்தை தவறாகக் குறித்துக் கொடுத்திருப்பீர்கள் அதான்,” என சுலபமாகச் சொல்லிவிட்டாள் மங்களம்.அவளுக்கு எப்போதும் இதுபோன்ற காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

கைகுவித்து,கண்மூடி அமர்ந்திருந்த கனகுவின் மேனி,மெதுவாக சிலிர்க்கத் தொடங்கியது.எல்லோரும் கன்னத்தில் போட்டுக்கொள்ள,அவனின் சிலிர்ப்பு அதிகமாகி உடம்பு துள்ளியது.

யாரோ இருவர் சாமியை ஆதரவாக தாங்கிக்கொள்ள,“சாமி..ஜகன்மாதா..என் மகளுக்கு…” என்று கைலாசம் அண்ணன் ஏதோ கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொருவராக தொடர்ந்து ஏதேதோ கேட்க,சிலருக்கு பதில் சொல்லி,பலருக்கு மௌனம் சாதித்து…அனைவரும் சென்று முடித்தபோது மணி எட்டுக்கும்மேல் ஆகியிருந்தது.

கனகு குளிக்கச் சென்றவிட,மாமியார் ஆராதனைத் தட்டில் விழுந்த பணத்தையெல்லாம் அடுக்கிவைத்து விட்டு,அந்த அறையைப் பூட்டிக் கொண்டிருந்தாள்.லலிதா கண்களைத் துடைத்துவிட்டு சமையல்கட்டுக்கு செல்ல எழுந்து கொண்டாள்.

இரவு படுக்கையறைக்குள் லலிதா நுழைந்தபோது,கனகு ஏதோ படித்துக் கொண்டிருந்தான்.“நாளைக் காலையிலே வரதன் வீட்டுக் கல்யாணமிருக்கு..”
“தெரியும்.. நீ மட்டும் போய்ட்டு வந்துடு..”புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமலே பதில் சொன்னான் கனகு.
“என்னங்க, உங்க ஃப்ரெண்டுவீட்டுக் கல்யாணத்திற்கு நீங்க வராமே..”
“நான் சொன்னதைச் செய்..”
“நான் மட்டும் தனியா..”
“சரி அம்மாவைக் கூப்பிட்டுக்கோ..”
“ஏன்,நீங்க வந்தா என்ன.?”
‘பட்’டென்று புத்தகத்தை மூடிவைத்துவிட்டு,கட்டிலுக்கு சென்று முதுகைக் காட்டியபடி படுத்துக்கொண்டான்.
“என்னங்க..”லலிதா இரண்டுமுறை கூப்பிட்டும் அவன் திரும்பவில்லை.இனி என்ன கேட்டாலும் பதில் வராது என்று புரிந்துபோக,மின்விசிறியைப் போட்டுகொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். அறைக்குள் குளுமை பரவினாலும்,லலிதாவின் மனதுக்குள் புழுக்கம்ஏறி, கண்களில் வெப்பமாகக் கண்ணீர் திரண்டது.

திருமணம் முடிந்த இந்த ஐந்து வருடங்களில்,கடந்த மூன்று மாதங்களாகத்தான் கணவன் இந்த‘வாக்கு சொல்லும்’வேலையை தொடங்கியிருந்தான். அன்றிலிருந்து எதுகேட்டாலும் ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பதில் சொல்வதும்,ஏதேனும் விசேஷங்களுக்குகூட வர மறுப்பதும் தொடங்கி இருந்தது.
அதற்கு முன்புவரை எப்போதும்,எதுபேசினாலும் எனக்கு எல்லாமே அநாயசம் என்பது போலத்தான் வார்த்தைகள் விளையாடும்.செயல்களில் ஒருதுள்ளல் இருக்கும்.சினிமா,பார்க்,ஓட்டல் என்று அடிக்கடி வெளியே சுற்றியதெல்லாம், மங்களம் அன்றொருநாள் துவங்கிய பேச்சில் அடியோடு ஒழிந்தது.

அன்று மதியம் கனகு,சாப்பிட்டுவிட்டு கடைக்குப் புறப்படும்போது, “ ஏம்ப்பா கனகு இப்டியேயிருந்தா எப்படிப்பா..?”
“என்னம்மா..”
“கல்யாயணம் முடிஞ்சு முழுசா நாலு வருஷம் ஆச்சு.ஒரு பேரனோ,பேத்தியோ வேணும்ணு எனக்கு ஆசையிருக்காதா..?”
“என்னை என்னம்மா பண்ணச் சொல்றே..?”
இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தவள்போல,‘பளிச்’சென்று சொன்னாள் மங்களம்.“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேன்.”

சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்த லலிதா ‘திக்’கென அதிர்ந்து,உள்ளிருந்து ஓடிவந்தாள்.“அத்தே..என்னசொல்றீங்க..”
“புதுசா என்னம்மா சொல்லிட்டேன்.வறண்ட நிலத்திலே விதை போட்டா வேர் பிடிக்காதுன்னு தெரிஞ்சுதாம்மா சொல்றேன்.” இரக்கமேயில்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.மகனிடம் திரும்பிச் சொன்னாள். “நிலம் நீச்சோட பொண்ணு ரெடியா இருக்குப்பா..நீ சரின்னு சொன்னா,தரகர்கிட்டே சொல்லி மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்னு இருக்கேன்.இதான் பொண்ணோட போட்டோ..” என்று கையிலிருந்த உறையை பிரித்து எடுத்துக் கொடுத்தாள்.
அதை வாங்கி சற்றுநேரம் உற்றுப்பார்த்தவனின் கண்களுக்குள் ஏதோ பிரகாசம் தோன்றியதுபோல உணர்ந்தாள் லலிதா.
போட்டோவை திருப்பிக்கொடுத்த கனகு ஒன்றும் பேசாமலே வெளியே நடந்துவிட்டான்.

அன்று இரவு, “என்னங்க,நம்ம ரெண்டுபேரும் டாக்டர்கிட்டே போய் ஒரு செக்கப் பண்ணிட்டு வந்தா என்ன..?”மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டாள் லலிதா
அவன் இகழ்ச்சியாய் சிரித்துக் கொண்டே.“கைப்புண்ணை பார்க்க கண்ணாடி எதுக்கு..?”
“என்ன சொல்றீங்க..”
“நமக்கே நல்லா தெரிஞ்ச ஒருவிஷயத்திற்கு டாக்டர் வேற சர்ட்டிபிகேட் தரணுமா..,அப்படியும் உனக்கு சந்தேகமா இருந்தா தாராளமா நீ போய் செக் பண்ணிட்டு வரலாம்..”
“அப்படீன்னா..”
“அம்மா சொன்னதுக்கு நான் சரின்னு சொல்லப்போறேன்னு அர்த்தம்..!
“அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்..”
“உன்னை யார் கேட்டா..கோர்ட்லே கேஸ் போட்டா,விவாகரத்துன்னு தீர்ப்பு வந்துட்டுபோகுது..”
லலிதா மிரண்டாள்.‘கோர்ட்,கேஸ் என்று போய்,தன் யோக்கியதை சந்தி சிரிக்கவேண்டுமா..அதற்கு பிறகு வீதியில் தலைநிமிர்ந்து நடக்கமுடியுமா..? சகஆசிரியர்களிடத்தில் மதிப்புதான் இருக்குமா..?’

“அதுக்கு இஷ்டமில்லேன்னா இந்தக் கல்யாணம் நடக்க,நீ சம்மதிக்கத்தான் வேண்டும்..”ஈட்டியாய் வார்த்தைகளை வீசிவிட்டு படுத்துக்கொண்டான்.

பள்ளியில் மூன்றாவது பீரியட் முடிந்து,நாலாவது பீரியட் ஓய்வறையில், “காலையிலேயே கேட்கணும்னு நெகச்சேன்.ஏன் ரொம்ப டல்லாயிருக்கே..? சக ஆசிரியை தனலட்சுமி கேட்டபோது, “ப்ச்..ஒண்ணுமில்லப்பா..”சலிப்புடன் சொன்னாள் லலிதா.
“அதைக்கூட ஒழுங்கா சொல்ல மாட்டேங்குறியே,என்னடா எங்கிட்டே சொல்லக்கூடாத விஷயமா..?”பரிவுடன் அவள் கேட்டபோது அழுகை முட்டிக்கொண்டு வந்தது லலிதாவிற்கு. முதல்நாள் நடந்த சம்பவம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.
“ஏய் இதுக்கா அழுகுறே..முட்டாள் மாதிரி பிஹேவ் பண்ணாதே..நெலமை இவ்ளோ தூரம் வந்த பின்னாடி ரெண்டுலெ ஒண்ணு பாத்துரலாம்.நீ சாயங்காலம் எங்கூட ஒருமணிநேரம் வந்துட்டுப்போ,அப்புறம் பார்க்கலாம்.!”
“தனம்..”
“மூச்..போய் டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வா.மத்தவங்களும் சாப்பிட வந்தாச்சு.”
மாலையில் இருவரும் அந்த பிரபலமான மருத்துவமனையில்,தலைமை டாக்டரம்மாவின் முன்பு அமர்ந்திருந்தனர்.
“தென்..மிஸஸ்.லலிதா..உங்களுக்கு எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்டெல்லாம் நாளைக்கு ரெடியாயிரும்.ஈவ்னிங் வந்து வாங்கிட்டுப் போயிடுங்களேன்.டாக்டர் சொல்ல இருவரும் வெளியே வந்தனர்.
“இங்கபாரு லலிதா..,குழந்தை இல்லேங்கிறதுக்காக இப்ப யாரும் டைவர்ஸ் வரைக்கும் போறதுங்கிறது ரொம்பக் குறைஞ்சிடுச்சு.அதுவுமில்லாமே இந்த விஷயத்திற்காக பெண்களை மட்டும் பொறுப்பாக்குறதை இந்தக்காலத்துலே படிச்ச பொண்ணுக யாரும் ஒத்துக்கவே மாட்டாங்க.நாளைக்கு வந்து ரிசல்ட் கேப்போம்.ஒருவேளை உனக்குத்தான் குறைன்னா..ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்துக்க..ஈஸி..”
“அதுக்கு எங்க வீட்லே சம்மதிக்க மாட்டாரே..”
“அப்படின்னா உம் புருஷனுக்கு குழந்தை வேணும்னு இல்லே.இன்னொரு பொண்டாட்டி வேணும்.அதுதான்.அதுவும் சொத்து சொகத்தோடன்னா எவனுக்கும் சபலம் தட்டும்..”பொட்டில் அடித்ததுபோல ஆத்திரத்துடன் சொன்னாள் தனம்.“சரி..நீ வீட்டுக்குப் போ..நாளைக்கு ரிசல்ட் பாத்துட்டு மேற்கொண்டு முடிவு செய்யலாம்..”

மறுநாள் ரிப்போர்ட்டை புரட்டிப்பார்த்த டாக்டர், “யு ஆர் ஆல்வேஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட் மிசஸ் லலிதா..,உங்க கணவர்கிட்டேதான் ஏதோ குறை இருக்கணும். அவரையும் செக்கப் பண்ணி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கச் சொல்லு.ஒருவேளை அடுத்த வருஷமே உங்க கைல ஒரு குழந்தை இருக்கலாம்.!” மனம் குளிர்ந்துபோனாள் லலிதா.. ‘ஆண்டவனே..நன்றி..!’

மனசுக்குள் ஆயிரம் யானைகளின் பலம்வந்தது போல ஒரு உணர்ச்சி.என்னிடம் குறை என்பதற்காக விவாகரத்து என்றவர்,இப்போது என்ன சொல்வார்..? சே.ஆண்கள் என்பதற்காகவே இவ்வளவு சீக்கிரம் முடிவெடுத்து விடுகிறார்களே..ஆண்மை என்ற ஈகோ ஒழிந்து எப்போது பெண்களையும் சமமாக மதிக்கிறார்களோ..அப்போதுதான் உலகம் உருப்படும்..’எண்ணங்கள் எங்கெங்கோ ஓடியது.
‘ஒருவேளை அவரால் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகமுடியாது என்று ஆகிவிட்டால் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள எப்படியாவது அவரை சம்மதிக்க வைக்கத்தான் வேண்டும்.’
வியாபாரவிஷயமாக வெளியூர் சென்றிருந்த கனகு,அன்று இரவு வரவில்லை. மறுநாள் வெள்ளிக்கிழமை,வெளியூரிலிருந்து நேராய் கடைக்குச் சென்றுவிட்டு, மாலை ஐந்துமணிக்குத்தான் ஓய்வெடுக்க வீட்டுக்கு வந்தான்.குளித்து டிபன் சாப்பிட்டுமுடிக்கும்போது,வெளியே ஜானகியின் குரல்கேட்டது.“ஏண்டாப்பா கனகு,இப்பத்தான் வந்தியா..?”கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள்.
“ஆமா..என்ன விஷயம்..?”
“ஒரு ஐநாறு ரூபா கடன் கொடேன்.அவசரமாக ஒருசெலவு.ஒண்ணாம்தேதி வாடகைப்பணம் வந்தவுடனே திருப்பித் தந்துடுறேன்.”
“ஒரு அஞ்சுநிமிஷம் உட்காருங்கக்கா..வந்திர்றேன்..”
படுக்கை அறையில் பீரோவைத் திறந்து பணம் எடுக்கும்போது,காபியை ஆற்றிக்கொண்டே வந்த லலிதாவைப் பார்த்துக் கேட்டான் கனகு. ‘என்ன முடிவு பண்ணிவெச்சிருக்கே.?”
பதிலேதும் சொல்லாமல் மேசையின் மீது காபியை வைத்தவள்,தனது மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
“என்ன இது..?” புரியாமல் கேட்டவனிடம், “டாக்டர்கிட்டே போனேன்.என்னாலே கண்டிப்பா ஒருகுழந்தைக்கு தாய் ஆகமுடியும்.எங்கிட்டே எந்தக்குறையும் இல்லையாம்.”அழுத்திச் சொன்னாள். “உங்க கணவரையும் கூப்பிட்டுவாங்க அவரையும் செக் பண்ணிரலாம்னு சொன்னாங்க..”

அவன் முகம் பேயறைந்தாற் போல ஆயிற்று. “நெசமாவா சொல்றே..?” அபத்தமாகக் கேட்டான்.ரிப்போர்ட்டைப் பிடித்திருந்த அவனுடைய கைகள் மெதுவே நடுங்கத் தொடங்கியது.ஆத்திரம் பொங்க சிலவிநாடிகள் அவளையே பார்த்தவன்,கைகளில் இருந்த காகிதக்கற்றையை தாறுமாறாக,சுக்குநாறாய் கிழித்துவீசினான்.முகம்சிவந்து தன்வசமிழந்தவனாய் பற்களைக் கடிக்கத்தொடங்கினான்.
கலவையான இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கண்டு,பயந்துபோன லலிதா,சற்றே பின் வாங்க அவளின் கை பட்டு,மேசையின் மேலிருந்த காபிடம்ளரும்,டபராவும் கீழே தலைகுப்புற விழுந்து ஓசையெழுப்பியது.

மகனிடம் ஏதோ கேட்பதற்காக வந்த மங்களம்,கனகுவின் நிலையையும், அறையின் களேபரத்தையும் பார்த்து மருண்டுபோய், “ஐயோ என்னாச்சு..” என்றுகூவ,அதைக்கேட்டு ஓடிவந்து பார்த்த ஜானகி, “ஐயோ நல்லாருந்த புள்ளே..திடீர்னு அருள் வந்தமாதிரி ஆடறானே..”என்று அவள் பங்குக்கு கத்த, ‘சட்’டென்று திரும்பி ஜானகியைப் பார்த்தான் கனகு.அந்தப் பார்வையில் தேடலும்,அதைக்கண்டுகொண்ட பிரகாசமும் இருந்தது.இரண்டே விநாடிதான்..அவன் உடம்பு துள்ளியது.தீப்பற்றிக் கொண்டதைப்போல கைகளையும்,கால்களையும் உதறிக்கொண்டு ஆடினான்.பற்களுக்கு நடுவே கடிபட்ட நாக்கிலிருந்து இரத்தம் சொட்டாய் எட்டிப்பார்த்தது.
“மங்களம்..ஓடிப்போய் குடத்துத் தண்ணீலே மஞ்சளைக் கரைச்சு எடுத்தா..இவனுக்கு சாமிதான் வந்திருக்கு..ஒடு சீக்கிரம்..”ஜானகியின் உத்தரவைத் தொடர்ந்து மங்களம் ஓடிமறைய.. “சாமி..ஐயா.உங்களுக்கு என்ன குறைவெச்சுட்டோமுன்னு சோதிக்கிறீங்க..” ஜானகி வாய்பொத்திக் கேட்க, “எனக்கு எந்தக் குறையுமில்லே..ஒரு நல்ல சேதி சொல்லிட்டுப் போகத்தான் வந்திருக்கேன்.
“சாமி சொல்லுங்க..”
மங்களமும் குடத்தோடு வந்துசேர,“இன்னும் நாற்பத்தியெட்டு வாரத்துலே இந்த வீட்டுலே,குழந்தையோட சத்தம் கேட்கப்போகுது.அதுவும் ரெட்டைக் குழந்தை பொறக்கப்போவுது.அதுவரைக்கும் என்னோட பக்தனை யாரும் சந்தேகப்படவோ, சோதிக்கவோ கூடாது..ஹா..”என்ற சப்தத்துடன் மௌனமானான்.
உடல் சிலிர்ப்பெல்லாம் மெதுவாய் அடங்க,கண்களை மூடிக்கொண்டான். முகத்தில் உக்கிரம் குறைந்து சாந்தம் நிலவ மெதுவே தரையில் சரிந்தான்.

பயந்துபோன மங்களம்,அவனுடைய கால்களைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு மஞ்சள்நீரை குடத்தோடு அவன்மீது ஊற்றினாள்.

திக்பிரமை அடைந்தவளாய் நடப்பதனைத்தையும் பார்த்துக் கொண்டு,செயலற்று நின்றிருந்தாள் லலிதா.கண்முன்னே நடந்தது கனவு போலிருந்தது.
‘கும்பிட்டுக்கோ லலிதா..”ஜானகியின் குரல்கேட்டு அவளும் யந்திரமாய் சேவித்துக் கொண்டாள்.கனகுவிற்கு அருள் வந்து ஆடியது ஊரே பரவியது. ஜானகியின் ‘கணிப்புப்படி’ அடுத்த வெள்ளிக்கிழமையும் ‘அருள்’வந்தது.அதுவே தொடர்ந்தது.

லலிதாவிற்கு புரிந்துபோனது.கண்ணுக்குப் புலப்படாத வேலியொன்றை, தன்னைச்சுற்றி எழுப்பிக்கொண்டு,அதில் சிறையிருந்தாலும்,தன் ஆண்மை என்ற ‘ஈகோவை’க் காப்பாற்ற முனைந்துவிட்டான் கனகு.இதுவும் யுத்தம்தான். அவனுக்கும்,அவனது மனசாட்சிக்கும் நடக்கும் யுத்தம்.இதில் அவன் அழிந்து அவனுடைய மனசாட்சி ஒருவேளை ஜெயிக்கலாம்.ஜெயிக்கும்போது ஒருபுதிய தரிசனம் நிகழலாம்.அதற்கு அவன் சொன்ன நாற்பத்தெட்டு வாரகாலம் பிடிக்கலாம்.அதற்குப்பின் கணவனை சமாதானப்படுத்தி டாக்டரிடம் கூட்டிச் செல்லவேண்டும்.
அவனுக்குள் நிகழும் யுத்தத்தின் கோரத்தைக்கண்டு அவ்வப்போது அழுதாலும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் லலிதா.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (29-Nov-11, 3:02 pm)
பார்வை : 741

மேலே