ஈன்ற பொழுதின் . . .


நீ
ஆரோக்கியமாக
பிறக்க வேண்டுமென்பதற்காக
ஊட்டச்சத்து ஆகாரங்களை
தன்னுள்ளே திணித்துக் கொண்டு
தொப்புள்கொடி வழியாக
அதை உனக்கு அனுப்பி வைத்தாளே.

நீ
தத்திதத்தி தவழ்ந்து வந்தபோது
உன்னை
தாங்கி பிடித்தாளே.

"எருமமாடு மாதிரி வளார்ந்திருக்கியே
தவிர புத்தி இல்ல" என்று
திட்டிக்கொண்டே
பதினோரு வயது வரை
உனக்கு
கால்கழுவி விட்டாளே.

மேத்ஸ் புத்தகத்திற்கென்றும்
கணக்கு புத்தகத்திற்கென்றும்
தனித்தனியாக
நீ பணம் கேட்டபோது
"பணம் சூதானமென்று" சொல்லி
கபடமின்றி
தனது முந்தானையிலிருந்து
அவிழ்த்து தந்தாளே.

உனது பிராகரஸ் கார்டில்
கையெழுத்து போட தெரியாமல்
கைநாட்டு வைக்க தயங்கினாளே.

நீ எழுதுவது
காதல் கடிதமென்பதுகூட தொரியாமல்
"பாவம் புள்ள படிக்கட்டும்" என
உனக்கு பக்கத்திலேயே
சிம்னி விளக்கை
பொருத்தி வைத்து கொண்டு
பதினோரு மணி வரை
விழித்திருந்தாளே.

நீ
வேலைக்கு சென்று வந்த போது
"என்னடா ஒரு மாதிரியா இருக்க"
என்று கேட்டுவிட்டு
"கொஞ்சநேரம் சும்மா இருக்கியா"
என்ற உனது எரிச்சல் வார்த்தைகளால்
உடைந்துபோய்
மூலையில் உட்கார்ந்து
புழுங்கினாளே.

"இதுக்குமேல சாப்பிட முடியல
இதையும் சேத்து சாப்பிடு"
என்று நீ கொடுத்தபோது
அணில் கடித்த பழத்திற்காக ஏங்கும்
ஒரு பச்சை குழந்தையை போல்
வாங்கி கொண்டாளே.
உனக்காக இல்லையென்றாலும்
அவளுக்காக . . .
அவளுக்காகவாவது
அவள் கம்பீரமாய்
சொல்லிக்கொள்ளும்படி
எதையாவது சாதித்துக்காட்டேன் .

எழுதியவர் : ஜெ.சுந்தரபாண்டி (10-Dec-11, 1:06 am)
பார்வை : 632

மேலே