நிலா தரிசனம்

நிலா நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாம் வளரும் போது அது வளர்ந்து தேய்ந்து மறைந்து பின் தோன்றி நம்மை தொடர்கிறது.
முழுநிலா மேகங்களுக்குள் நுழையும் போதும் வெளிப்படும் போதும் மேகங்களை உரசி செல்லும் போதும் பார்க்கலாம் பார்த்து கொண்டேயிருக்கலாம்.
கதிரவன் கதிர்கள் கிழக்கில் புறப்படும் அதிகாலை வேளை மேற்கில் முழுநிலா மலைமுகடுகளில் வெள்ளைப் பந்தாய் மெல்ல மறைவதும் தேய்நிலா
காலங்களில் தேய்பிறையும் விடிவெள்ளியும் அருகருகே பார்ப்பதும் ஆனந்தம். நிலா காலங்களில்
தூரத்தே தனிமையில் கூவும் குயிலின் குரலில் காதல் தவமிருக்கும்.


முழுநிலா காலங்களில் நிலவின் ஒளியை வாங்குவது போல் தளர்ந்து கிடக்கும் மரங்களின் இலைகளில் நிலவின் ஒளி எண்ணெய் வழிவது
போல்ஔிர்ந்து கொண்டிருக்கும். கடலலைகள் பளபளப்புடன் கிளர்ந்தெழும். “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் எந்தையும் உடையேம்“பாரி மகளிரின்
கையறுநிலை பாடலும் “அன்றொரு நாள் இதே நிலவில்“கண்ணதாசன் பாடலும் போன்ற நிலா பாடல்கள் நெஞ்சை நெகிழ வைக்கும். நிலா காலங்களில் எனது ஊரின் முத்தாரம்மன் கோயில் மணற்பரப்பு அமர்ந்தும் அருகாமையிலுள்ள வடக்கன்குளம் சென்று முதற்காட்சி படம் முடிந்து வீடு திரும்புகையில் வெண்மணல் ஒடையில் மல்லாந்து படுத்து வெள்ளி நிலவோடு பயணப்பட்டது சுகம்.

நிலவொளியில் ஆறடி முதல் பத்தடி நீளம் வரை நமது நிழல் தரையில் விழும் போது கண் தட்டாது நிழலைப் பார்த்து பின் தெளிவான
வானம் பார்த்தால் தெரியும் நிழலின் தன்மையை பொறுத்து நம் உடல் நிலை மற்றும் எதிர்கால பலன் தெரிந்துகொள்ளலாம். தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் நிழல் தரிசனம் பார்த்தால் நம்மோடு உயிர் உள்ள துணையாக நம்நிழல் வரும். .சூரிய ஒளியிலும் நிழல் தரிசிக்கலாம் என்று பிளாட்பாரக் கடையில் கிடைத்த புத்தகத்தில் படித்து சில பல காலம் நிழல் பார்த்ததுமுண்டு.

ஜாதகங்களில் சந்திரனை வைத்தே ராசி நட்சத்திரங்கள் நிர்ணயிக்கப்பட்டன .நிலவின் நிலையை பொறுத்து அஷ்டமி நவமி அமாவாசை பௌர்ணமி திதிகள் கணக்கிடப்பட்டன. பிறை பார்த்தலும் சிறப்பாக கருதப்பட்டது..சித்திரா பௌர்ணமி வைகாசி விசாகம் ஆவணி அவிட்டம் திருக்கார்த்திகை பங்குனி உத்திரம்
போன்றவை முழு நிலா காலங்களை ஒட்டிய நட்சத்திரங்களில் சந்திரன் வரும் காலங்கள் கொண்டாடபட்டன.சந்திரன் நின்ற நட்சத்திரங்களை வைத்தே ஜாதகபொருத்தங்கள்
பார்க்கப்படுகின்றன.


எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மீண்டும் மீண்டும் பார்க்கச் சொல்லும் நிலா நகர வீதிகளில் தெரிவதில்லை. மின் வெட்டு காலங்களில்தான்
நிலா தட்டின் ஒளியை நகரமும் நுகர்கிறது.
“இன்றைய இரவில் நிலாவைப் பார்த்தேன்
நட்சத்திரங்களைப் பார்த்தேன்
என் வீட்டு முற்றமெங்கும் நிலவின் ஒளி
மின் வெட்டிற்கு நன்றி“
மாறுதலான ஒன்று ஒவ்வொரு இழப்பிலும் உள்ளதென்பது ஒரு இழப்பு ஏற்படும்போது தெரிகிறது..“எரிந்து விட்டது குடிசை நன்றாகவே தெரிகிறது நிலவு“என்ற ஜென் கவிதையும் இதையே சொல்கிறது.


ஆம்ஸ்ட்ராங் நடையே துள்ளலாக காட்டும் “யூ டியூப்“ காட்சிகள் மனித இனத்தின் துள்ளலாகத் தெரிகிறது. பாட்டி வடை சுட்ட கதையைச் சொன்ன நாம் சந்திரனில் நீர் இருப்பதையும் சந்திராயன் மூலம் கண்டறிந்து சொன்னோம். நிலவில் நாளை நாம் குடிபுகலாம்.அங்கிருந்து நீலபூமியை நிலவாய் கண்டுகளிக்கலாம். ஆனாலும் இன்று கற்பனைகளை கவித்துவத்தை நிலா தந்து கொண்டேயிருக்கிறது..நிலா கனவில் தூங்கும்
குழந்தைகளுக்கும் காதல் நினைவுகளின் ஏகாந்தத்தில் விழிமூடாத காதலர்க்கும் நிலா மீதான அலாதியான ஈர்ப்பு அளவிடமுடியாதது.

எழுதியவர் : மா.தாமோதரன் (12-Dec-11, 7:51 am)
பார்வை : 2967

சிறந்த கட்டுரைகள்

மேலே