நிராகரித்த காதலியிடம் சில கேள்விகள்

ஒரு வகையில் பார்த்தால் நாம் அனைவரும் மிகக் குரூரமானவர்களே; யாரோ ஒரு நபரின் காதல் தோல்வியின் மீது தான் நமது திருமண மேடைகள் கட்டப்படுகின்றன.

_

சொல், என் அன்பே என்னை ஏன் நிராகரித்தாய்?
நீ என்னை விட அழகானவள் என்பதை நான் அறிவேன். அது ஒரு காரணமா? நீ ஒரு கறுப்புக்குள்ளனை உன் துணைவனாக அறிமுகப்படுத்த விரும்பாமல் இருக்கலாம்.
நீ கதாநாயகனைப் போன்ற ஒரு நபரை எதிர்பார்த்திருக்கலாம். ஒதுங்கி நடக்கும் என்னுடன் எப்படி நீ கைகோர்த்து நடப்பாய்?
நீ செல்வச்செழிப்புள்ள ஒரு நபரை எதிர்பார்த்திருக்கலாம். ஒரு தினக்கூலியின் பேரன் செல்வச்செழிப்புள்ள, ஆடம்பர வாழ்க்கையை உனக்கு அளிப்பான் என்று நீ எப்படி நம்ப முடியும்?
நீ ஒரு அறிவாளியை எதிர்பார்த்திருக்கலாம். எந்தப் பெண் ஒரு முட்டாளைத் தனது பாதியாக அறிமுகப்படுத்த விரும்புவாள்?
உனக்கு எதிர்காலத்தைப் பற்றி ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம். அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்ற சக்தியில்லாத என்னுடன் ஆயுள் முழுக்க நீ கட்டுண்டு இருப்பாயா?
ஆனால் பெற்றோர்கள் என்று நொண்டிச்சாக்குகளைக் கூறி என்னைத் தவிர்த்ததை நான் எப்படி புரிந்து கொள்ள முடியும்? நீ என்னைப் போன்ற ஒரு தீண்டத்தகாதவனைக் காதலிக்காமல் இருக்கலாம். அதை நீ என் முகத்தைப் பார்த்துக் கூறியிருக்கலாம். மறைவான உனது வார்த்தைகளின் பொருளைப் புரிந்து கொள்ளுமளவிற்கு நான் புத்திசாலியா?
"உனக்கு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்" என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அங்கே நான் ஒரு தவறைச் செய்தேன். நான் காதலித்தேன். என் தகுதிக்கு அப்பாற்பட்டு காதலித்தேன். நான் உன்னைக் காதலித்தேன். நீ என்னை விட அழகில், அறிவில், அந்தஸ்தில் உயர்ந்தவள். உனது முகத்தை உற்றுப் பார்க்கவும் எனக்குத் தகுதி இல்லை.
மீண்டும் நான் ஒரு தவறைச் செய்தேன். நீ என்னைக் காதலுடன் பார்க்கிறாய்; சிரிக்கிறாய்; பேசுகிறாய் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவை என் மனதின் மாயை என்பது எனக்குத் தாமதமாகவே புரிந்தது. காதல் என்னும் பகற்கனவிலிருந்து நான் அதிர்ச்சியுடன் எழும்பினேன்.
நீ துயரம், மகிழ்ச்சி என வாழ்க்கையின் இரண்டு பகுதிகளையும் எனக்குக் காட்டினாய். ஏமாற்றத்தை எனக்கு அறிமுகப்படுத்தினாய். தோல்வி என்னும் இருண்ட குகையில் என்னை விட்டுச் சென்றாய்.
உன் சிவந்த உதடுகளிலிருந்து மூன்று வார்த்தைகளைக் கேட்பதற்காக நான் ஒன்றரை வருடங்கள் காத்திருந்தேன். அந்த வார்த்தைகளை நீ கூறினாய். ஆனால் இறுதி வார்த்தை மட்டும் மாறிப்போயிருந்தது.
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று நான் கூறிய போது "நான் உன்னை விரும்புகிறேன்" என்று நீ கூறினாய். வார்த்தைகளைக் கொண்டு வித்தை காட்டினாய். இப்பொழுது "நான் உன்னை வெறுக்கிறேன்" என்று நீ கூறுகிறாய். இது வார்த்தை விளையாட்டல்ல என்பதை நான் அறிவேன்.
நீ என்னுடன் பேசும்போது நான் உன்னைக் காணாமலிருந்தாலும் கூட சொர்க்கம் என் காலடியில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். ஆனால் நான் உண்மையை அறிந்த போது, நரகம் என் தலைக்கு மேல் இருப்பதாகத் தோன்றியது. எனது மகிழ்ச்சியான தருணங்களை சோகமான தருணங்களாக நீ மாற்றினாய்.
"இதை மறந்து விடு. நாம் நண்பர்களாயிருப்போம்" என்று நீ கூறினாய். நான் உன்னுடைய நண்பனாக இருக்க முடியுமா? என்றும் ஒரு கத்தியால் குத்திக் கொள்வதை விட ஒரேயடியாக மரணமடைந்து விடுவதையே நான் விரும்புவேன். உனது மணமகனுடன் நீ மேடையில் நிற்கும் போது என்னால் புகைப்படத்திற்காகச் சிரிக்க முடியும் என்று நீ கருதுகிறாயா? அதை விடக் கல்லறைக்குப் போவதே மேல் என்று நான் கருதுவேன்.
அன்பே, நான் உன்னை எதற்காகவும் குற்றம் சாட்டவில்லை. தவறு என்னுடையதே. நான் உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டேன். எனது தகுதியை விட எனது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்ததால் நேர்ந்த பிழை அது. எனது செயல்களை மன்னித்து விடு, என்னை மறந்து விடு......

எழுதியவர் : (12-Dec-11, 8:24 am)
பார்வை : 711

மேலே