கவிஞர்களின் கவனத்திற்கு

இந்த மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சென்னை நகரின் மிக உயர்ந்த கட்டிடமொன்றின் மீது ஏறிக்கொண்டு கீழே பார்க்கிறேன்.

எப்படியெல்லாம் பரபரக்கிறார்கள் இந்த மனிதர்கள் குள்ளம் குள்ளமாக இருந்துகொண்டு!

எனக்கு ஒரு நிமிடம் சிரிப்புதான் வருகிறது.
ஆனால் அடுத்த நிமிடமே என்னால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

இவ்வளவு உயரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்
இந்த கட்டிடத்தை எழுப்பியது இந்த குள்ளமான
மனிதர்கள்தானே?

அதோ அந்த பரபரப்பான சாலைகளில் குறுக்கும்
நெடுக்குமாக பறந்து செல்லும் ஆயிரமாயிரம்
வாகனங்களும் இந்த குள்ளமான மனிதர்கள்
உருவாக்கியதுதான்.

ஃபேஸ் நியூட்ரலின் சங்கமத்தில் இந்த மனிதன்
விதவிதமான விளக்குகளை ஜொலிக்க விட்டு
எப்படியெல்லாம் அழகு பார்க்கிறான் பாருங்கள்.

குள்ளம் குள்ளமாக இருந்து கொண்டு இந்த மனிதர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

நம் உடலைவிட்டு மனசு வெளியேறி மீண்டும் அந்த உடலையே திரும்பிப்பார்த்தால் எப்படி இருக்கும்!

அதுபோல இந்த பூமியைவிட்டு வெளியேறி மீண்டும் இந்த பூமியையே திரும்பி பார்த்தான் ரஷ்ய வீரன் யூரிகாகரின்.

இன்றைக்கு நானிந்த கட்டிடத்தின்மீது ஏறி நிற்பதை போல அன்றைக்கு மேகங்கள் முட்டிமுட்டி விளையாடுமே அந்த எவரெஸ்டின் மீதே ஏறி நின்றான் ஆம்ஸ்ட்ராங்.

துப்பிய எச்சில் கீழே விழுவதற்கு முன்பே
பனிக்கட்டியாகிவிடும் துருவங்களுக்கு. . .

ஆறுமாதம் இரவாகவும் ஆறுமாதம் பகலாகவும்
இருக்கும் பூமிப்பந்தின் ஓரங்களுக்கு...

பயணம் சென்று வந்தார்கள் ஆமுன்ட்சென் ராபர்ட் பியரி. இவர்களெல்லாம் இந்த சின்னமனித கூட்டத்தை சேர்ந்தவர்கள்தானே?

நம் புருவங்களை உயர்த்தவைக்கும் காரியங்கள்
இன்னும் எத்தனை இருக்கிறது இந்த உலகில்?

கலவரம் ஏற்பட்ட வீதிகளை விடுத்து வேறுவீதிகளுக்கு
போக்குவரத்தை திசைதிருப்பிவிடுவதைபோல
ரத்த ஓட்டத்தை திசைதிருப்பிவிட்டு இப்போதெல்லாம்
சர்வசாதாரணமாய் செய்யப்படும் பைபாஸ் சர்ஜரியைபோல.

இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த
மனிதகூட்டம்?

ஒரு கிலோமீட்டர்வரை வாலை நீட்டிக் கொண்டெ வரும் ரயில்கள்.

நகர்ந்து செல்லும் தீவைபோல ஒரு நகரத்தையே
உள்ளடக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய கப்பல்கள்.

காகங்களும் கழுகுகளும் ஆச்சர்யமாய் அன்னார்ந்து
பார்க்கும் விமானங்கள்.

கண்ணால் கண்டவற்றையும் காதால் கேட்டவற்றையும் பதிவு செய்து கடந்த காலங்களை கிட்டத்தட்ட நிகழ்காலங்களாக மாற்றிவிடும் ஒலி-ஒளி நாடாக்கள்

இமைக்கும் பொழுதுக்குள் உலகத்தையே சுடுகாடாக்கி விடும் அணுகுண்டுகள்.

ஒருகோடி தகவல்கள் எழுதிவைக்கபட்ட கையடக்க
டிஸ்குகள்.

இண்டர்நெட்டுகள்

செல்போன்கள்

இன்னும் இன்னும் இத்யாதிகள்.

இவை எல்லாவற்றுக்கும் பின்னால் கோடானுகோடி மக்களின் உழைப்பு நிச்சயமிருக்கும்.

பத்தே பத்து விரல்களை வைத்துக்கொண்டு இந்த
மனிதகூட்டம் இன்னும் என்னவெல்லாம்
செய்திருக்கிறது!

அந்த நிலாவின்மீது ஏறி நின்றாலும்
பூமித்தாய் தன் உச்சிக்கு வகிடெடுத்துக் கொண்டதைப் போல தெரியும் உலகின் மிகப்பெரிய சீனப்பெருஞ்சுவர்.

புதைக்கப்பட்ட பின்பும் விதைக்கப்பட்டதாய் நினைத்து
மீண்டும் கம்பீரமாய் எழுந்து நின்ற ஷிரோஷிமா
நாகஷாகி.

இப்படி எல்லாமும் மனித உழைப்பால் வந்ததுதான்.

வெறும் மணல்மேடுகளாக இருந்த இந்த பூமிக்கோளின்
அமைப்பே கிட்டத்தட்ட மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது உலகில் நீ எதை தொட்டாலும் அதில்
மனித உழைப்பு நிச்சயம் கலந்திருக்கும்.

அத்தனைக்கும் காரணம் அந்த பத்து விரல்களுக்கிடையே
ஒளிந்திருக்கும் உழைப்பு
மனித உழைப்பு.

எனில் அந்த உழைப்பைவிட மனித ஆராதனைக்குரிய
பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.
மனித உழைப்பை பற்றி அல்லாமல் ஒரு கவிஞனின்
போற்றத்தக்க பாடுபொருளாக வேறு எது இருக்க
முடியும்?

வேறு எதுவும் இருக்க முடியாது.

நிலவைப்பாடுதல், மலரைப்பாடுதல், இயற்கையை
ப்பாடுதல், நாணத்தைப்பாடுதல், காதலைப்பாடுதல்,
கன்றாவியைப்பாடுதல், காறிதுப்பியதைப்பாடுதல்
என விரியும் இன்னும் பிற பாடுதல்களெல்லாம்
ஒரு கட்டத்தில் நிச்சயம் நீர்த்து போய்விடும்.

பெண்ணின் சரீர மேடுபள்ளங்களைப்பற்றியும்

காதலி தனது நுனிநாக்கால் எனது இமைகளை
ஈரமாய் வருடியதைப்பற்றியும்

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.

ஒரு பாத்திரகடையின் பளபளப்பைக்கொண்ட
அந்தி வானம் பற்றியும்

மழையில் நனைந்தபின் குடித்த தேநீரைப்பற்றியும்

ஆசூசை மனசோடு கவிதை எழுதி கொண்டிருந்த நான்
இப்போது மனித உழைப்பை பற்றி யோசிக்க
தொடங்கியிருக்கிறேன்.

அப்பப்பா! உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான்.

அந்த உழைப்பை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாதாரண மனிதனின் அசாதாரண உழைப்பை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கே பட்டாளி மக்கள் துடித்துக் கொண்டிருக்கையில் இங்கே பட்டாம்பூச்சிகளின் துடிப்பை கணக்கிட்டு கொண்டிருக்க இனிமேல் எனக்கு நேரம் கிடையாது.

இனி எனக்கான திசை மனிதன்தான்.
இனி எனக்கான பாடு பொருள் மனிதன்தான்.
மனித உழைப்புதான்.
மனித நேயம்தான்.
மனிதஅன்புதான்.

எழுதியவர் : sundarapandi (15-Dec-11, 8:47 pm)
பார்வை : 451

மேலே