மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை

இக்கால இளைஞர்கள் தாங்களே கண்டு, கேட்டு, சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே எனது முதன்மையான அவாவாகும். அதற்குப் பதிலாக அவர்கள் பிறர் சிலரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்பதிலும், அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை அறிவதிலும் ஆர்வங்காட்டினால் அவர்கள் வடக்குக்குப் போக விரும்பினால் அதற்குப் பதிலாக தெற்குக்குச் சென்று வழி தடுமாற வேண்டியிருக்கும். இந்தத் தலைமுறையைச் சார்ந்த நமது மக்கள் சரித்திரத்தின் பிற கட்டங்களில் இருந்ததைக் காட்டிலும் இன்று ஒரு பெருஞ்சுமை சுமக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். நாமே நமக்காக சிந்திப்பதைப் பற்றி நாம் இன்று கற்றுக் கொள்வோம்.

நாம் நமது காதுகளை அகலமாகத் திறந்து வைத்துக்கொண்டு பிறர் சொல்வதைக் கேட்பது நல்லது தான். ஆனால் முடிவெடுக்க வேண்டிய நேரம் வரும் போது, நாம் கேட்டதைக் கொண்டு, அது சார்ந்திருக்கும் இடத்தினைக் கொண்டு நாமே நமது சொந்த முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் அதைப் பற்றி வருத்தப்பட வேண்டியிருக்காது. ஆனால், பிறர் சொல்வதை நீங்கள் சோதிக்காமல் ஏற்றுக்கொண்டால் நண்பர்களை வெறுப்பவர்களாகவும், எதிரிகளை நேசிப்பவர்களாகவும் உலகத்துக்குக் காட்சியளிப்பீர்கள். இன்று நமது மக்கள் இதனைப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். நீங்கள் உங்களுக்காகவே சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், எதிரியுடன் சண்டையிடுவதற்குப் பதில் உங்களுடனேயே சண்டையிட்டுக் கொண்டிருப்பீர்கள்.

இந்த நாட்டில் உள்ள நமது மக்கள் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள். நம்மில் மிகப் பெரும்பாலோர் அகிம்சாவாதிகளாக இருக்க விரும்புகிறார்கள். அதைப் பற்றி உரத்த குரலில் பேசுகிறார்கள். கறுப்பின மக்கள் அதிகமாக வாழும் இந்த ஹார்லெம்மிலும் சிலர் அந்தப் பேச்சைப் பேசுகிறார்கள். ஆனால் நாம் நமக்குள் அகிம்சாவாதிகளாக இருப்பதில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். கறுப்பு நோயாளிகள் அதிகமாக இருக்கும் ஹார்லெம் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அங்குள்ள நோயாளிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை நீங்கள் காண்பீர்கள்.

கறுப்பர்கள் அகிம்சையைப் பற்றிப் பேசும்போது அவர்கள் தங்களுக்குள் அகிம்சாவாதிகளாக நடந்து கொள்வதில்லை என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். அவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பவர்களாகவோ, மன்னிக்கும் சுபாவம் கொண்டவர்களாகவோ இருப்பதில்லை. அவர்கள் அகிம்சாவாதிகளாக இருப்பதாக சொல்லிக் கொள்ளும் போது, தங்கள் சொந்த மக்களைத் தவிர பிறருக்கு அகிம்சாவாதிகளாக இருப்பதைப் பற்றியே குறிப்பிடுகிறார்கள். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எதிரியிடம் அகிம்சாவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். ஒரு வெள்ளையன் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களைக் கொடுமையாக நடத்தினாலும் அல்லது உங்கள் தந்தையின் கழுத்தில் கயிற்றை இறுக்கினாலும் நீங்கள் அவனிடம் அகிம்சாவாதிகளாக நடந்து கொள்வீர்கள். ஆனால், ஒரு கறுப்பன் உங்கள் காலைத் தவறி மிதித்து விட்டான் என்றால் அவனை ஒரு நிமிடத்தில் துவம்சம் செய்து விடுவீர்கள். ஒரு சமநிலையற்ற தன்மை இருப்பதை இது உங்களுக்குக் காட்டுகிறது.

அகிம்சை இயக்கத் தலைவர்கள் வெள்ளையின மக்களின் நடுவே சென்று அகிம்சையைப் போதிப்பார்களானால், நல்லது. நானும் அதை வரவேற்கிறேன். ஆனால் அவர்கள் கறுப்பினத்தவரின் நடுவில் மட்டும் அகிம்சையைப் போதிப்பார்களானால் என்னால் அதை வரவேற்க முடியாது. நாம் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இங்கே வைப்பதை அங்கேயும் வைப்பது தான் சமத்துவமாகும். கறுப்பின மக்கள் மட்டும் அகிம்சாவாதிகளாக இருப்பார்களானால் அது நல்லது அல்ல. நாம் நமது தற்காப்பைத் தவிர்க்கிறோம். நாம் நம்மைத் தாமே நிராயுதபாணிகளாக ஆக்கிக் கொண்டு, நம்மைப் பாதுகாப்பற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறோம்.

1965ல் நீங்களோ, நானோ, அவர்களோ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி. கறுப்பின மக்களின் வருந் தலைமுறையினர் எல்லோரும் அமைதி வழியைப் பின்பற்றும் வரை தாங்கள் பின்பற்றுவதில் பயனில்லை என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்திருப்பார்கள்.

எனவே ஆஃப்ரோ அமெரிக்கர்களின் கூட்டமைப்பினராகிய நாம், ஆயிரம் சதவீதம், மிசிசிப்பியில் நடக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்கிறோம். மிசிசிப்பியில் இருக்கும் நமது மக்கள் ஓட்டுரிமையைப் பெற ஆயிரம் சதவீதம் எம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். கறுப்பினத்தவருக்கு ஓட்டுரிமை உண்டு என்று அரசாங்கம் சொல்கிறது. அதை நம்பி சில கறுப்பினத்தவர்கள் ஓட்டளிக்கச் செல்கிறார்கள். ஆனால் கு குளுக்ஸ் கிளான் போன்ற அமைப்பினர்கள் அவர்களைக் கொன்று ஆற்றில் எறிகிறார்கள். அரசாங்கம் அதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் நாம் அணிதிரண்டு ஒருங்கிணைந்தவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளக் கூடியவர்களாக மாறினால் காயப்படுவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நாம் வெள்ளையினத்தவருக்கு எதிரானவர்கள் என்பது இதன் பொருள் அல்ல. ஆனால் நாங்கள் கு குளுக்ஸ் கிளானுக்கும், வெள்ளைக் குடிமக்கள் சங்கங்களுக்கும் எதிரானவர்கள். மட்டுமல்ல, எங்களுக்கு எதிரான அனைத்து விஷயங்களுக்கும் நாங்கள் எதிரானவர்கள். நான் சத்தத்தை உயர்த்துவதற்கு மன்னிக்கவும். ஆனால் இந்த விஷயம் என்னைக் கோபப்படுத்துகிறது. ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் ஒரு நாட்டில் சைகோனுக்குப் போய் போர் புரிய அழைக்கும் போது, சுதந்திரத்தைப் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் ஓட்டுரிமையைப் பதிவு செய்வதைப் பற்றி நீங்கள் ஒரு இரவு பேசினாலும் கொலை செய்யப் படுகிறீர்கள். உலகம் தோன்றியதிலிருந்து நடப்பிலிருக்கும் அரசுகளில் போலி நேர்மையை மிகத் துல்லியமாகக் கடைபிடிப்பது இந்த அரசு தான்.

நான் உங்களைக் கலகத்துக்குத் தூண்டி விடவில்லை என்று நம்புகிறேன். இங்கே பாருங்கள்; உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஒரு தலைமுறை முந்தியவன். இங்கிருக்கும் நீங்கள் பதிவயதினராகவும், மாணவர்களாகவும் இருக்கிறீர்கள். நான் உங்களிடம் என்ன சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? "மொத்த உலகமும் மனித உரிமைக்காகப் போரிடும் போது நாங்கள் சுவரின் மேல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் இன்றும் அந்த சுதந்திரத்திற்காகப் போராட வேண்டியவர்களா இருக்கிறீர்கள்". உங்களுக்கு முந்தின தலைமுறையினராகிய நாங்கள் என்ன செய்தோம்? அதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நாங்கள எதுவும் செய்யவில்லை. நீங்களும் அந்தத் தவறைச் செய்யாதீர்கள்.

விடுதலைக்காக நீங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் எதிரிக்கு வெளிப்படுத்துவதன் மூலமே நீங்கள் விடுதலையடைவீர்கள். உங்களுக்கு இத்தகைய மனநிலை வரும்போது அவர்கள் உங்களை "வெறிபிடித்த கறுப்பன்" என்றோ, "வெறிபிடித்த கறுப்பு அடிமை" என்றோ அழைப்பார்கள். ஆனால் கறுப்பன் என்று வெறுமையாக அழைக்க மாட்டார்கள். அவர்கள் உங்களைத் தீவிரவாதி என்றோ, பயங்கரவாதி என்றோ, கம்யூனிஸ்டு என்றோ அழைப்பார்கள். ஆனால் நீங்கள் தீவிரவாதியாக இருந்து, உங்களைப் போல் இன்னும் அதிகமான மக்களைச் சேர்த்துக் கொண்டு, போதுமான காலம் போராடினால் உங்களுக்கு சுதந்திரம் கிடைத்து விடும்.

எனவே உங்கள் உரிமைகளைப் பறிக்கும் எதிரிகள் நடுவே நண்பர்களைத் தேடி ஓடாதீர்கள். அவர்கள் உங்கள் நண்பர்கள் அல்ல; எதிரிகள். அவர்களை அந்த நோக்கில் கண்டு போராடினால் உங்களுக்கு விடுதலை கிடைத்து விடும். நீங்கள் விடுதலை அடைந்த பின் உங்கள் எதிரி உங்களுக்கு மதிப்பளிப்பான். நாங்கள் உங்களை மதிப்போம். நான் இதை வெறுப்பில்லாமல் சொல்லுகிறேன். என்னில் வெறுப்பு இல்லை; எத்தகைய வெறுப்பும் இல்லை. எனக்குக் கொஞ்சம் அறிவுண்டு. என்னை வெறுக்கின்றவனை என்னால் நேசிக்க முடியாது. நான் அத்தகைய வழி தவறிப் போன முட்டாள் அல்ல. நீங்கள் இளைஞர்களாக இருக்கிறீர்கள்; இப்போது தான் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். உங்களை யாரும் அப்படி செய்யத் தூண்டாவிட்டால், நீங்கள் அத்தவறினைச் செய்ய மாட்டீர்கள். அந்த யாரோ ஒருவர் உங்கள் நன்மையை மனத்திற்கொண்டவராக இருக்க மாட்டார்.

எழுதியவர் : Malcolm X (26-Dec-11, 8:31 pm)
சேர்த்தது : பைத்தியக்காரன்
பார்வை : 493

சிறந்த கட்டுரைகள்

மேலே