நண்பர் பைத்தியக்காரனுக்கு ஒரு கடிதம்.-பொள்ளாச்சி அபி

அன்புள்ள நண்பர் பைத்தியக்காரனுக்கு…இப்படி அழைக்கலாமா..? தெரியவில்லை.இருந்தும் வேறு பெயர் தங்கள் படைப்புகளில் இல்லை.அதுபோகட்டும் பெயர் என்பது ஒரு அடையாளம்தானே,கரும்பு என்றால் இனிப்பு என்ற சுவை நினைவுக்கு வருவதைப்போல..!

தங்கள் படைப்புகள் ஒவ்வொன்றாகப் படித்தேன்.தோல்வியில் ஒரு கடிதம்.,திராவிடத்தின் சிதைவு..இன்னும் மற்றவையெல்லாம்..

யேசுவில் தொடங்கி..லசந்தா,மால்கம் எக்ஸ்,ஆர்தர் கெனான்..என்று நீங்கள் படித்தது..படித்ததின் ஆழம்,அனைத்தும் தெரிந்தது.

முடிவில் எனக்குத் தோன்றியது..நீங்கள் ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பது.சிறையிலிருந்து சிலகிறுக்கல்கள்..,தோல்வியில் ஒரு கடிதம்..உங்கள் மனம் ஏன் இப்படி ஊஞ்சல் ஆடுகிறது..அதுவும் பெண்கள் விஷயத்தில் யாருமே என்னைக் காதலிக்கவில்லை..நான் விரும்புவது எல்லாம் என்னைவிட அறிவு,அழகில் உயர்ந்த இடம்..என்றும்,அதனால்தான் என்னை விரும்பவில்லை என்றும்..
இறுதியில் பிரம்மச்சரியம் குறித்து ஒரு படைப்பு..!

யே..அப்பா..இதுதான் உங்கள் மனநிலை என்று யாராலும் தீர்மானிக்கவே முடியாதோ..அதனால்தான் இந்தப் புனைப்பெயரோ..?

ஓகே சார்.இப்போ சில முடிவுக்கு வருவோம்..சிறுவயதிலிருந்து பாசம்,படிப்பு,நட்பு,காதல் என ஒவ்வொன்றிலும் தோல்விதான் நீங்கள் கண்ட பலன்.சரி அதனால் இப்போது என்ன குழப்பம்.? பிரம்மச்சரியத்தை நோக்கி ஓடவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது.?

யதார்த்த உலகம் இதுதான்,இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
அதன் எதிரொலிப்பே உங்கள் படைப்புகளில் உண்மைகளாக கனிந்து இருக்கிறது.இவ்வளவு அனுபவங்களையும்,அப்படியே பிரதிபலிப்பது எத்தனைபேருக்கு வாய்த்திருக்கிறது…புரியவில்லையா.?.அடுத்தவர் மனதில் ஒரு பாதிப்பை உண்டாக்கும் வகையில் நீங்கள் ஒரு எழுத்தாளராகத் தேர்ந்து விட்டீர்கள் என்பது..! அதற்குத் தேவையான,திரளான,அனுபவங்கள் உங்களுக்கு இருக்கிறது.அது இன்னும் உங்களிடமிருந்து ஏராளமான படைப்புகளை வெளிக் கொண்டுவரும்.
உருவத்தால் அழகில்லாவிட்டால் என்ன..?.சிறுவயதிலேயே கண்களை இழந்த லூயிஸ் பிரெய்லிதான் இன்று உலகம் முழுவதுமுள்ள பார்வையற்றவர்கள் படிப்பதற்கான எழுத்துமுறையைக் கண்டுபிடித்தவர் என்பதும் நீங்கள் அறிந்தேயிருப்பீர்கள்.

வாழ்க்கை என்பது,சும்மா இல்லை.பறவையினங்களும்,விலங்குகளும் வாழ்வதற்காகப் போராடுகின்றன.அவைகளிடமிருந்து போராட்டமே வாழ்க்கை என்பதை நாம் கற்றுக்கொள்ளவில்லையா..?.ஐந்தறிவுள்ள விலங்குகளே கற்றுத்தரும் நிலையிலிருக்கும்போது..,ஆறறிவுள்ள மனிதன் நினைத்தால் ,இந்த உலகத்தை மாற்றும் வகையில்,இன்னும் என்னவெல்லாம் செய்யமுடியும்.?,
மாற்றங்களைக் கொண்டுவந்தவர்கள் எல்லாம் மனிதர்களே,காரல் மார்க்ஸ்,பிரடெரிக்ஏங்கல்ஸ்,லெனின், என்று சமூக விஞ்ஞானிகள் போட்டுக்கொடுத்த பாதை இன்று துனிசீயா தொடங்கி லிபியா வரை எதிரொலிக்கவில்லையா..,?.

போர்டு தொடங்கிய வாகனப்புரட்சி,இன்று நானோ காராக மலரவில்லையா..?

பாரதியும்,மாக்ஸிம் கார்க்கியும்,சாண்டில்யனும் ரொம்ப அழகோ..உமர்கயாமை நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ..?.மும்தாஜ் மகாலின் அழகில் மயங்கினான் ஷாஜகான் என்பது தெரியும்.ஆனால் ஷாஜகானின் லட்சணம் யாருக்குத் தெரியும்.?.
இசையில் கலக்கிய பீத்தோவன்..?,ஹலோ சார்…இப்படி அடுக்கிக் கொண்Nடு போவதென்றால்..இன்னொரு உலக சரித்திரம் எழுத வேண்டியது இருக்கும்..
அவ்வளவு தூரம் போக நமக்கு நேரம் இல்லை. இதன் மூலம் நான் சொல்ல வருவது..ஸோ சிம்பிள்.. “உலகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்கள் எல்லாருமே அவர்கள் கொண்டுவந்த மாற்றங்களினால்தான் அழகாக மாறிப்போனார்கள்.”
எனவே,எனக்கு அழகில்லை,அறிவில்லை அதனால் யாரும் மதிக்கவில்லை என்பதையும்,அந்த வழியில் யோசிப்பதையும் கைவிடுங்கள்.உங்கள் கடிதத்திற்கு பதில் எழுதிய நண்பர் தமிழொழிப் புதல்வன்,தற்கொலைக்கான கடிதமாகத் தோன்றுகிறது என்று குறிப்பிடும்படியாக எழுதவேண்டியதில்லை.
நாம் நமக்காக வாழ முடியவில்லை.போகட்டும் பிறருக்காக வாழ்ந்து பாருங்கள்..பின்னர் தெரியும் அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அழகென்று..அதற்கு சிறிதுகாலம் பிடிக்கலாம்.
நல்ல தமிழ்மொழிப் படிப்பு உங்களுக்கு இருக்கிறது.மொழியை ஆளும் திறனிருக்கிறது.வார்த்தைகளை ஆட்டுவிக்கும் ஜாலம் இருக்கிறது.இன்னும் என்னா சார் உங்களுக்கு வேணும்..?.இலக்கியத்தில் இந்த அழகான பைத்தியக்காரனுக்கான இடம் காலியாகவே இருக்கிறது.வா..நண்பா.அந்த இடத்தை ஆக்ரமிக்க மற்ற யாருக்குத் தகுதியுண்டு..உன்னை நீ தைரியமாக பிரகடனப்படுத்து…அதற்கு முதல் உனது உண்மைப் பெயரை வெளிப்படுத்து. இருக்கும் எல்லா முகமூடிகளையும் எரித்துவிடு. ..
இன்னும் பேசுவோம்..!

-அன்புடன் பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (2-Jan-12, 11:33 pm)
பார்வை : 553

மேலே