1.எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்.!. .. பொள்ளாச்சி அபி

இந்த இணையத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.!
எழுத்தின் மீது கொண்ட காதலால் அனைவரும் படைப்பாளிகளாக இருக்கிறீர்கள் நன்றி.!
ஆனால் படைப்புகள் எல்லாம் எதனைப்பேசுகின்றன.? என்று பார்த்தால் அதிகமாக காதலை மட்டுமே..? ஏன் காதல் மட்டும் பாடுபொருள் இல்லையா..? என்று சிலருக்கு அல்ல,பலருக்கும் கேள்வியிருக்கும்..
காதலும் பாடுபொருள்தான் அதைப்பற்றி இங்கு யாரும் குற்றம் சொல்லவில்லை.
இங்கு நான் சொல்லவருவது காதல் மட்டுமே பாடுபொருள் அல்ல என்பதைத்தான்.

அன்புள்ள நண்பர்களே..! ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளாமல் இருப்பது அறியாமை அல்ல.தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் இருப்பதே அறியாமை.

இங்கே உங்களுக்கு அன்போடு குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது.
இதற்கு மேல் தொடர்ந்து படிப்பதும்,தவிர்ப்பதும் உங்கள் விருப்பம்.!
அதே சமயம் இதனைப் படிப்பவர்கள் உங்கள் பின்னூட்டங்களையும் இதில் பதிவு செய்யலாம்.உடன்பட்டோ,முரணாகவோ,விமர்சனமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.அவை எல்லாவற்றையும் உள்ளடக்கி நாம் தொடர்ந்து எழுதுவோம்.இது உங்களுடையது,உங்களுக்கானது..!—

கவிதை,கட்டுரை,நாடகம்,சிறுகதை இன்னும் எழுத்தின் வடிவமாக இருக்கும் எல்லாப் படைப்புகளுக்கும் அடிப்படையாக இருப்பது மொழி.இம்மொழியின் சிறப்பாக உள்ளது எனப்பார்த்தால்,மனிதமனங்களின் உணர்ச்சிகள் அத்தனையையும்,வெளிப்படுத்தக்கூடிய வகையில் வார்த்தைகளும்,அதற்கான குறியீடுகளாக எழுத்துக்களும் இருப்பதே சிறப்பு.இதில் எந்தக்குறையும் இல்லாமலிருப்பது தமிழ்.அதனால்தான் அது செம்மொழி என்று அங்கீகரிக்கப்படுகிறது.

இவ்வளவு சிறப்புவாய்ந்த மொழியை,பயன்படுத்தும் நாம்,அந்த மொழியில் வெளிப்படுத்தும் உணர்வுகளாக,என்னவெல்லாம் படைக்கமுடியும்.?.கருவுறும் குழந்தையின் நிலையிலிருந்து,அது வெற்றிகரமாக பிறந்து, வளர்ந்து, படித்து, காதலித்து.மணம்முடித்து,குடும்ப பாரம் சுமந்து,தனது பொறுப்புக்களை எல்லாம் நிறைவேற்றி,முடிந்த அளவிற்கு பிறருக்கும்,மனதாலோ,செயலாலோ,உடல் உழைப்பாலோ உதவிசெய்து,முதுமை எய்தி,முடிவில் மனிதராக வாழ்ந்து காடு செல்லும் வரையிலுள்ள அனைத்து வாழ்வியல் அனுபவங்களையும் படைக்கமுடியும்.இந்த அனுபவங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் கிளைகளாக நாம் சந்திக்கும் அனுபவங்கள் எத்தனையெத்தனை..?

அதுகுறித்து நமது மனங்களில் தோன்றும் உணர்ச்சிகள்,அது ஏற்படுத்தும் விளைவுகள்,அதன் முடிவுகள்..என எவ்வளவோ உண்டு.
இவை அனைத்தையும் நாம் எழுத்தில் வடிக்கமுடியும்.!

ஆமாம் முடியும்தான்..! ஆனால் எதற்காக..?.

- உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்த்து,
மீண்டும் எழுதுகிறேன்-
அன்புடன் பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (5-Jan-12, 12:35 pm)
பார்வை : 408

மேலே