3.எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்.!.

சொத்துக்கள் சேர்த்துவைத்துக் கொள்வதற்கு,எதிர்காலத்தில் தனது சந்ததியின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லையே என்ற பயம்தானே காரணம்.இந்த பயம் போக என்ன செய்யவேண்டும.?

சொத்துக்கள் இல்லாவிட்டாலும்,அடிப்படையான வசதிகளோடு யாரும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழமுடியும் என்ற உத்தரவாதம் கிடைத்துவிட்டால்…,
சற்றே யோசித்துப் பாருங்கள்..!.

நமது குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற படிப்பு,படிப்புக்கேற்ற,அல்லது சக்திக்கேற்ற வேலை.., குடும்பத்தின் தேவைக்கேற்ற சம்பளம்.அடிப்படை வசதிகளுக்கு குறைவில்லாத வகையில் ஒருவீடு.அன்றாட தேவைகளாய் இருக்கின்ற போக்குவரத்து, மருத்துவம்,இன்னும் குடும்பத்தின் தேவைக்கேற்ற எல்லாமே நிறைவேற்றும் நமக்கான ஒரு அரசு...என்று இருந்தால்..! .. உங்களுக்கு எதற்கு சொத்து..?.

இந்தக் கட்டுரைக்கும்,இங்கே குறிப்பிடப்படும் தனிச்சொத்துரிமைக்கும் என்ன சம்பந்தம்..? அப்படி ஒரு கேள்வி உங்களுக்கு எழுகிறதா..?.
தொடர்பு இருக்கிறது...எப்படி..?.

தேவைக்கு மீறி சொத்துக்களை வைத்திருக்கும்,தனி மனிதர்கள்..அந்த தனிமனிதர்களின் சொத்துக்கனைப் பாதுகாக்கும் வகையில்,அவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள்..இவ்வாறான மனிதர்கள் இணைந்து,அமைத்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம்.!

நாட்டுமக்களுக்காக அமையவேண்டிய அரசுகள்,இவ்வாறு தனிமனிதர்களின் நலத்திற்காகவும்,பாதுகாப்புக்காகவும் இருக்கமுடியுமா..?. இந்தச் சொத்துக்களை நாம் ஒன்றிணைந்து கைப்பற்றிவிடமுடியாதா..?.
அது அவ்வளவு எளிதான விஷயமல்ல..!.அவர்களுடைய சொத்துக்களை கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக,அரசின் சட்டதிட்டங்கள் வகுக்கப்படும்.குற்ற வழக்குகள் பதியப்படும்.தண்டணைகள் கடுமையாக்கப்படும்.

தற்போதுள்ள சூழ்நிலையில்,பசிக்காக ஒரு திண்பண்டத்தை எடுத்துப்; புசித்துவிட்டு,அதற்கான பணம் உன்னிடம் இல்லையென்று கடைக்காரரிடம் சொன்னால்,அது குற்றமே.!

வீடுகள் இல்லாத ஒரு குடும்பம்,அரசுக்கு சொந்தமான சாலை ஓரத்தில்
அல்லது சாலையை விட்டு சற்றுத்தள்ளியுள்ள தனியார் நிலத்தில் குடிசை போட்டுக் கொண்டாலும்,அது ஆக்ரமிப்பு என்ற குற்றமே..!

உண்ண உணவில்லாதவனும்,இருக்க இடமில்லாதவனும் இன்னும் இங்கு இருக்கிறானே..? ஏன்.இவர்களுக்கு கொடுக்க அரசிடம் உணவில்லையா..?
வீடுகள் வழங்க நிலமில்லையா..?
எல்லாம் இருக்கிறது.ஆனால் கொடுக்க முடியாது.ஏன் கொடுக்கமுடியாது.,?,
சொத்துக்கள் இருப்பவனைவிட,இல்லாதவன் அதிகம்.அதை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டால்,தனது சந்ததிக்கென்று அவன் எதை விட்டுப்போவான்.?.
அதனால்தான்,அதைப் பாதுகாப்பதற்கு,அரசு என்ற கருவியையும்,அதன் முலம் பாதுகாப்பையும் படைத்துக்கொள்கிறான்.
அப்படியென்றால்,தனிமனிதனுக்கு சொந்தமாக இல்லாத நிலங்களை, பிரித்துக்கொடுக்கலாமே..?.என்று நீங்கள் கேட்டால்,அதற்கான பதில்..,அரசுக்கு சொந்தமான,அனைவருக்கும் பொதுவாகத்தானே ஒரு காலத்தில் இந்த நிலங்களெல்லாம் இருந்தது.அப்போது அவை எல்லாம் எப்படி தனிமனிதர்கள் கையில் போய்ச்சேர்ந்ததோ..அப்படியேதான் இப்போது வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.இனியும் நடக்கும்.அது கி.மு.2012 ஆக இருந்தாலும் சரி,கி.பி.2012.ஆக இருந்தாலும் சரி.

ஒருபுறம் அரசு என்ற கருவியின் பணி இதுவென்றால்,மறுபுறம் இதற்கு ஆதரவான விஷயங்கள் எதுவென்பதை பார்ப்போம்.

அந்த பட்டியலில் முதலில் வருவது மதம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி.அந்த மதங்களுக்குப் பொதுவான விஷயங்கள் எதுவென்று பார்த்தால், உயிர்வதை கூடாது.பிறருக்கு தீங்கு செய்யக்கூடாது.பிறன் மனை கவரக்கூடாது. மற்றவனுக்கு சொந்தமான எதையும் திருடக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. கடவுள் என்பது சாசுவதம்.அதன்மேல் உனக்கு எப்போதும் பயமும்,மரியாதையும் இருக்கவேண்டும்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் இறைவனையே நினைக்க வேண்டும்.இவைகளைத்தவிர ஏதேனும் சில விஷயங்கள் இணைந்திருக்கலாம். இவற்றை தொடர்ந்து மக்களிடையே பரப்பும் கருவிகளாக வழிபாட்டுத்தலங்கள்.

இவையெல்லாமே நல்ல விஷயங்கள்தானே..ஆமாம் மிக நல்ல விஷயங்களே.
ஆனால் இவற்றையெல்லாம் பெரும்பான்மையாக இருக்கும் ஏழைகள் மட்டுமே பின்பற்றுவதாயும்,பெரும்பணக்காரர்கள் பின்பற்றுவதாக நடிப்பதாகவும்தான் பெரும்பாலும் இருந்தது என்பதற்கு வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.காரணம் தெய்வத்தைக் குறித்த அச்சம் அவர்களுக்கு அறவே இல்லை.அச்சமில்லையென்பதால் அவர்கள் வாழ்வில் எந்த ஒரு துன்பமும் நிகழவில்லை.
ஏனெனில்,அடிமைகளாகவும்,கொத்தடிமைகளாகவும்,பணியாட்களாகவும்,ஆண்,
பெண்,குழந்தைகள்,அவர்களின் சந்ததிகள் என வைத்திருந்த பெரும் பணக்காரர்கள் அப்போதும் இருந்தனர்.இவர்களுக்கென தனியான ஒருவாழ்க்கை என்பதை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது.இவர்கள் எப்படி வாழவேண்டும் என்று இவர்களின் எஜமானர்களே முடிவு செய்வார்கள்.

இன்னும் சொல்லப்போனால்,தோள் சீலை அல்லது முந்தானைச்சீலைப் போராட்டம் என்று ஒரு விஷயம் நமதுநாட்டில்தான் நடந்தது என்பதை எத்தனைபேர் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று தெரியாது.இப்போராட்டம் எதற்காக நடைபெற்றது என்றால்,பெண்கள் தங்கள் மார்புகளின் மீது துணியை இட்டு மறைத்துக்கொள்ளும் உரிமைவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டமே அது. போராட்டம் என்றாலே,உரிமைகளைப் பெறுவதற்குதானே,அப்படியானால் அது யாரால் மறுக்கப்பட்டது.?.என்றும் சில தகவல்களை தேடிப்பாருங்கள்.
அப்படியானால் நினைத்துப் பாருங்கள்..,அந்த உரிமை அவர்களுக்கு கிடைக்கும்வரை அவர்களின் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று.!

மேலும்,மதத்தின் குறியீடாக விளங்கும் வழிபாட்டுத்தலங்களின் பெயரில் பலநூறு ஏக்கர் நிலங்களும்,தங்கப்புதையல்களும் சேர்க்கப்பட்டு,அவை சில தனிப்பட்ட குடும்பங்கள் நிர்வகிக்கத் தொடங்கி,இன்று அவர்களது சொத்துக்களாகவே மாறிப்போயிருப்பதும் மறுப்பதற்கில்லை.

-தொடர்ந்து பேசுவோம்
அன்புடன் பொள்ளாச்சி அபி.
-------------------------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (6-Jan-12, 11:20 am)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 365

மேலே