4.எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்.!.

மதத்தின் குறியீடாக விளங்கும் வழிபாட்டுத்தலங்களின் பெயரில் பலநூறு ஏக்கர் நிலங்களும்,தங்கப்புதையல்களும் சேர்க்கப்பட்டு,அவை சில தனிப்பட்ட குடும்பங்கள் நிர்வகிக்கத் தொடங்கி,இன்று அவர்களது சொத்துக்களாகவே மாறிப்போயிருப்பதும் மறுப்பதற்கில்லை.
ஆனால்,இறைஅச்சம் குறித்து,மக்களிடையே தொடர்;ந்து பயம் இருப்பதற்காக, தெய்வத்தின் பிரதிநிதியாக அரசன் என்பவன் கற்பிக்கப்பட்டு, பின்னர் அந்தப் பிரதிநிதிகளே கடவுளர்களாகவும் ஆக்கப்பட்டனர்.
-இந்திய வரலாற்றில் புஷ்யமித்ரன் என்ற அரசனைக் குறித்துப் படித்திருக்கிறீர்களா..?
வாய்ப்பு இருப்பின்,தகவல்களைத் தேடுங்கள்--
இதனை நிலைநிறுத்திக்கொள்ளும் விதமாகவே,புனைவு இலக்கியங்களும், வரலாறுகளும் படைக்கப்பட்டன.இதனைத் தொடர்ச்சியாக செவிவழிச் செய்திகளாகவும்,நாடகங்களாகவும்,கதாகாலாட்சேபங்களாகவும்,..அவ்வக் காலத்திற்கேற்ற தகவல்பரிமாற்றக் கருவிகளின் மூலம் கேட்டுவருகிறோம்.இன்று வரை அது தொடர்ந்து வருகிறது.
-வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..என்று,23.ஆம் புலிகேசி படத்தில் வரும் ஒருகாட்சி.இதன் கொச்சையான வடிவமாக இருக்கலாம்,ஆனால்அதில் உண்மையில்லாமல் இல்லை-
-படைக்கப்பட்ட வரலாறுகளைவிட,மறைக்கப்பட்ட வரலாறுகள் மிகஅதிகம்.!.-

எவ்வளவோ நல்ல விஷயங்களைக் குறித்துப் பேசும் மதங்கள்,வேதகாலம் தொட்டு சுமார் ஐந்தாயிரம் வருடங்களாக இம்மண்ணில் இருந்தும்,அதில் சொல்லப்பட்ட நல்ல விஷயங்கள் நடைபெறவில்லையே.இவ்வளவு ஆண்டுகாலப் பழமையிருந்தும்,மனிதர்களுக்கு அது பழக்கமாகவில்லையே.ஏன்.?
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டாமா..?.

கோவில் பூசாரியாக இருப்பவர் உண்டியல் உடைப்பதும்,பாதிரிகள், சிறுமிகளைக்கூட கற்பழிப்பதும்,மவுலானாக்கள் வரதட்சணை வாங்குவதும் நாம் ஒன்றும் கேள்விப்படாத செய்திகள் அல்லவே.

எப்போது நமது பயனுக்கான ஒரு கருவி,நமக்குப் பயன் படவில்லையோ.. அப்போது அதனால் என்னபயன்.?.காலப்போக்கில் அது கண்டிப்பாக மறைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
பக்தி இயக்கங்கள்,பக்தி இலக்கியங்கள்,பக்தியைச் சொல்லும் திரைப்படங்கள்,பாடல்கள்,கதைகள் என,அது சார்ந்த படைப்புகள்,இப்போது குறைந்துவிட்டதே அதற்கு சாட்சி.இன்னும் அதன் மிச்சங்களும் அழிவதற்கு சில காலம் பிடிக்கலாம்.அது அடுத்த தலைமுறையோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையோ..கண்டிப்பாக இது நடக்கும்.!
இதேபோல்தான்,சொந்த ரத்தபந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள், ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என்பது நவீன விஞ்ஞானம்.
ஆனால் இன்னும் எத்தனையோ சாதிகளில் சொந்த மாமன்,மாமன் மகள்,மகன் அத்தை மகள்,மகன் என நெருங்கிய சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்களை,சாதி வழக்கமாகவே வைத்திருப்பதன் காரணம் என்ன.?.கிராமப்பகுதிகளில் கொச்சையாக இன்றும் சொல்வார்கள். “ சொத்துப் பிரிஞ்சு போறதுக்கா,சொந்தத்தை விட்டு கல்யாணம் பண்றே..?.”ஆனால்,இன்று அந்தப் போக்கும் அழிந்துவருகிறது.
சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக என்று கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவியான மதத்தின் பயன்பாடுகள் வலுவிழக்கும்போது,புதிய கருவிகள் தேவைப்படுகிறது.
அது எவ்வாறு இருக்கவேண்டும்.?.அதன் மூலம் சொத்துக்கள் எப்படி பாதுகாக்கப்படும்.?
அதற்குத்தான் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இருந்துவரும் இயல்பான உணர்ச்சியான காதல் என்பதை தூக்கிப்pடிக்க முனைகிறது,சொத்துக்களைப் பாதுகாக்கவும்,சொத்துக்களை சேர்க்கவும் முனையும் கூட்டம்.!

என்னடா இது. மொட்டைத்தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதாக இருக்கிறதே..? என்று குழம்பவேண்டாம்.

காதல் என்பது ஒருகாலத்தில் திரைப்படங்களிலும்,நாவல்களிலும்,கதை,கவிதை என்பவை உட்பட,படைப்புகளில் சித்தரிக்கப் பட்டவிதம் என்ன.?.


1950-ல்,நாதா என்று விளித்து,காலடியில் உட்காருவாள் காதலி.
60-ல்,நெஞ்சின் மீது,தனது கைகளை வைத்து சாய்வாள் காதலி.
70-ல்,காதலனுடன் ஓட்டல்களுக்கும்,ஊர்சுற்றவும் போவாள் காதலி.
80-ல்,கல்லூரியிலேயே,தீர்க்கமான காதலை வெளிப்படுத்துவாள் காதலி
90-ல்,சாதியும்,மதத்தையும் மறுத்து,காதலிப்பாள் காதலி.
2000-ல்,கட்டியவனை விட்டு,காதலால் இன்னொருவனை மணப்பாள் காதலி.
2010-ல்,டாடி மம்மி வீட்டில் இல்லே என்று அழைப்பாள் காதலி.
2020-ல் இனி என்ன செய்வாளோ..?

அதுபோகட்டும்,இதை பெண்கள் மீதான மதிப்புக் குறைவால் சொல்லவில்லை. சித்தரிக்கப்பட்ட விதத்தையே சொல்கிறேன்.ஏன் இந்தச் சித்தரிப்பு.?
சினிமா,நாவல்,சிறுகதை,கவிதை,விளம்பரம் என எதிலும் காதல் இருந்தால்தான் முன்னுரிமை.காதல் கதைகளுக்கு அதுவும் ஒரே கதாநாயகன் இருவரையல்ல, மூன்றுபேரைக் காதலித்தாலும் அதனை சத்தமின்றி நாம் ரசிப்பதும்,அவனாக நாம் இருந்தால் என்று ரகசியமாக ஆசைப்பட வைப்பதும்.அதற்கான வாய்ப்பு இருக்கிறதா..? என்று மெனக்கெடுவதும்… இந்தப்பட்டியல் வெகுநீளம்.!
போதிதர்மனைப்பற்றியே கதை எழுதினாலும்,அதை திரைப்படமாக எடுத்தாலும் அதிலும் காதலை விட்டுவிடாமல் இருக்கிறோமே..!

காதலைத் தவிர வேறு பெரிதான விஷயம் என்று எதுவுமே இல்லை என்று,இளைஞர்களுக்கு எதற்காக கற்பிக்கவேண்டும்.?.காதலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,படைப்புகளின் திசைவழியை ஏன் திருப்பவேண்டும்.?

-தொடர்ந்து பேசுவோம்-
அன்புடன் பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (7-Jan-12, 5:12 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 458

மேலே